என் மலர்tooltip icon

    டெல்லி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது
    • சமீபத்திய கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் [78 வயது] வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

    இந்திய - ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் துலசேந்திரபுரத்தை சேர்த்தவர். கமலா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே அவர் வெற்றி பெற வேண்டி இங்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடவுளின் அனுக்கிரகத்தை டிரம்ப் பக்கம் திருப்ப டெல்லியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

     

    மஹாமண்டலேஸ்வர் சுவாமி வேத் முதினானந்த சரஸ்வதி என்ற சாமியார் அமரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டெல்லியில் ஹாவன் எனப்படும் பூஜையை நடத்தியுள்ளார். அந்த பூஜையில் மோடியின் நண்பர் டிரம்ப் என்ற வாசகங்களுடன் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்க்கு அவருக்கு 47 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரபாபு நாயுடு தன்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண் இந்து. மற்றொரு கண் முஸ்லீம் என்று எப்போதும் கூறி வருகிறார்.
    • ஒரு கண் பாதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். வளர்ச்சியின் பாதையில் இதை மனதில் கொள்ள வேண்டும் என்கிறார்.

    மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்ததும் வக்பு போர்டு சட்ட மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஒன்றிரண்டு கட்சிகளும் பல்வேறு ஆட்சேபனை தெரிவித்தன. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (Parliament's Joint Committee) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்திரா காந்தி உள்அரங்கத்தில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய தெலுங்குசேதம் கட்சி தலைவர் நவாப் ஜன், முஸ்லீம்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு அனுமதிக்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நவாப் ஜன் கூறுகையில் "சந்திரபாபு நாயுடு தன்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண் இந்து. மற்றொரு கண் முஸ்லீம் என்று எப்போதும் கூறி வருகிறார். ஒரு கண் பாதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். வளர்ச்சியின் பாதையில் நாம் முன்னேறும்போது இதை மனதில் கொள்ள வேண்டும் என்கிறார்.

    சந்திரபாபு நாயுடு மதசார்பற்ற மனநிலை கொண்டவர். அவரை நாம் முதல்வராக பெற்றுள்ளோம். இதனால் முஸ்வீம்களுக்கு கேடு விளைக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டார்.

    நாம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், இந்தியாவின் ஒற்றுமைக்கு கேடுவிளைவிக்க முயற்சிக்கும்போது அதை பொறுத்துக் கொள்ள முடியாது.

    இவ்வாறு நவாப் ஜன் தெரிவித்துள்ளார்.

    மக்களவையில் பா.ஜ.க.-வுக்கு மெஜாரிட்டி இல்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஆதரவு அளித்தால் மட்டும் ஒரு மசோதாவை நிறைவேற்ற முடியும்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது கடுமையான விவாதம் ஏற்பட்டது. மசூதிகளின் செயல்பாட்டில் தலையிடுவது இந்த மசோதாவின் நோக்கமல்ல என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் முஸ்லீம்கள் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல் என எதிர்ப்பு தெரிவித்தன.

    • சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது
    • அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.

    டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில் நீர்நிலைகளின் தரம் நாளுக்குநாள் சீர்கெட்டு வருகிறது. யமுனை நதி ரசாயன கழிவுகள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

    வாகன புகை, வேளாண் கழிவுகளை எரித்தல், ஆலையில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது. இதனால் சமீப நாட்களாக காற்று தரக்குறியீடும் மோசமடைந்துள்ளது.

    இது குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டவர்களின் சுகாதார நலனிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் தண்ணீர் குறைந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து துவாரகா பகுதிக்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால், அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.

    அதனை அப்படியே கொண்டு சென்று , டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டின் வெளியே தரையில் ஊற்றினார். அந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் அழுக்கடைந்து, கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசியுள்ளது. தான் கொண்டு வந்த இந்த கருப்பு நிற நீரை டெல்லி மக்கள் குடிக்கவா? என ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    குடிநீரின் நிலை மேம்படவில்லை எனில், துர்நாற்றம் வீசும் நீருடன் கூடிய லாரியுடன் வருவேன் என்று அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால் தினமும் 10 பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கேலியாக பொழுதுபோக்குவது அவருடைய வேலையா? என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

    • இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்.
    • காசநோய் பாதிப்பு சரிவடைந்து இருக்கிறது.

    அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நாம் தொடர்ந்து காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம், என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா எக்ஸ் தள பதிவில், "2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அங்கீகரித்துள்ளது. உலகளவில் காசநோய் பாதிப்பு 8.3 சதவீதம் வரை சரிந்துள்ளது. இந்த நிலையாவில் சர்வதேச அளவை விட இருமடங்கு வரை காசநோய் பாதிப்பு சரிவடைந்து இருக்கிறது."

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம், இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய முயற்சிகளின் விளைவாகவே காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. கூட்டுணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • SUV காரை 2 டிராஃபிக் காவலர்கள் நிறுத்த முயன்றுள்ளனர்.
    • ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் இருவரும் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டனர்.

    தலைநகர் டெல்லியில் கார் பான்ட்டை பிடித்து தொங்கியபடி 2 போக்குவரத்து காவலர்கள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதி சாலையில் வந்த SUV காரை 2 டிராபிக் காவலர்கள் நிறுத்த முயன்றுள்ளனர்.

    ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்ற நிலையில் அதை நிறுத்த இரண்டு காவலர்களும் காரின் பான்ட்டை பிடித்துள்ளனர். ஆனால் அப்போதும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் இருவரும் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டனர்.

    மேலும் காரின் வேகம் கூடிய நிலையில் அவர்கள் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பராக கிரீஸ் உள்ளது.
    • இந்தியா-கிரீஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

    புதுடெல்லி:

    கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:"

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பராக கிரீஸ் உள்ளது. கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசுடன் ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா-கிரீஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்." என குறிப்பிட்டுள்ளார்.


    இதேபோல பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து கிரீஸ் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு ஆசியாவின் முன்னேற்றங்கள் உள்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியாவிற்கு முக்கிய தொழில்நுட்பங்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது.
    • இதில் 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.

    புதுடெல்லி:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    போரின் எதிரொலியாக அமெரிக்கா, ஐ.நா. ஆகியவை எவ்வளவு தடை விதித்தாலும் ரஷியா அதனை கண்டுகொள்ளவில்லை.

    ரஷியாவுக்கு உதவும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து தடை விதித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் முக்கிய கருவிகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கியதற்காக 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில், 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.

    சீனா, சுவிட்சர்லாந்து, யுஏஇ, கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தத் தடையை எதிர்கொண்டுள்ளன.

    தடைக்கு உள்ளான இந்திய நிறுவனங்கள் ராணுவம் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் தடை குறித்து அறிந்துள்ளோம். தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்திய சட்டத்தை மீறவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது.
    • இரு நாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

    புதுடெல்லி:

    கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

    இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்துறை மந்திரி அமித்ஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் கனடா தூதருக்கு இந்திய வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது என தெரிவித்தார்.

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • பிரிஸ்பேனில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை ஜெய்சங்கர் திறந்து வைக்கிறார்.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் 8-ம் தேதி வரை அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதலில் ஆஸ்திரேலியா செல்லும் அவர், அங்குள்ள பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின், கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்குடன் இணைந்து 15-வது வெளியுறவு மந்திரிகளின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

    மேலும், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மந்திரி ஜெய்சங்கர், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில் துறையினர், ஊடக அமைப்பினர் மற்றும் அந்நாட்டு மந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    இதையடுத்து, 8-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8-வது ஆசியான் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதன்பின், அந்நாட்டின் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    • சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை.
    • சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சத் பூஜை கொண்டாட்டத்திற்காக டெல்லியில் நவம்பர் 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார்.

    டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.

    சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை, பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இது சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    உண்ணாநோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட நான்கு நாள் சடங்குகள் மற்றும் மரபுகளின் கடுமையான வழக்கத்தை உள்ளடக்கியது.

    இதுதொடர்பாக முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தள பதிவில், இந்த முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சத் பண்டிகைக்காக நவம்பர் 7-ந்தேதி விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . பூர்வாஞ்சலின் சகோதரிகள் விழாவை சிறப்பாக கொண்டாட முடியும். விடுமுறையை உறுதிப்படுத்தும் தனது கையொப்பமிடப்பட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் 21 ஆயிரம் பேரிடம் ஆய்வு.
    • 69 சதவீதம் குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் நேற்றும் கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக டெல்லியில் மிகவும மோசமடைந்தது.

    டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31-ந்தேதி) இரவு காற்றின் தரநிலை 999 என்ற மோசமான நிலைக்கு சென்றதாக காற்று தரநிலை குறியீடு மூலம் தெரியவந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவிற்கு மோசமானதாகும்.

    இதன் காரணமாக டெல்லியில் 69 சதவீத குடுமபத்தினரில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது டெல்லியில் வசிக்கும் 10 குடும்பத்தில் 7 குடும்பத்தில் ஒருவராவது காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் 21 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 69 சதவீதம் குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    62 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டது தெரிவித்துள்ளது. 46 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது மூக்கு ஒழுகுதல் போன்ற பாதிப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    31 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது. அதேபோல் 31 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது தலைவலியால் அவதிப்பட்டது தெரியவந்துள்ளது.

    காற்று மாசால் 23 சதவீதம் குடும்பத்தில் ஒருவருக்காவது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 15 சதவீதம் குடும்பத்தில் ஒருவருக்காவது தூங்குவதில் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்றின் தரநிலை மோசம் அடைவதற்கு அண்டை மாநிலங்களாக அரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பது முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்கள் மற்றும் குயவர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடினேன்.
    • அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க, தங்கள் கிராமம், நகரம், குடும்பத்தை மறந்து விடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

    குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-பஸ் டிரைவர்கள், முடி திருத்துவோர் என பல்வேறு வகையிலான தொழிலாளர்களை அவர் அடிக்கடி சந்தித்து அவர்களது பணிகளையும், குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு தனது தாய் சோனியாவின் வீட்டில் பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர்களுடன் அவர் கலந்துரையாடினார். தனது சகோதரியான பிரியங்காவின் மகன் ரெய்கானுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அந்த பெயிண்டர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், ரெய்கானும் பெயிண்ட் அடித்தனர். மேலும் அந்த கூலி தொழிலாளர்களின் வருவாய் மற்றும் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி, அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

    இதைப்போல தீபாவளிக்கான அகல் விளக்குகளை செய்யும் (குயவர்) ஒரு பெண்ணின் வீட்டுக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு அந்த பெண் மற்றும் அவரது 5 மகள்களுடன் சேர்ந்து அகல் விளக்குகளை செய்தார்.

    பின்னர் தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றார்.

    இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    தீபாவளி என்றால் வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை எனும் இருளை அகற்றும் ஒளி என்று பொருள்.

    இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்கள் மற்றும் குயவர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடினேன். அந்தவகையில் விசேஷசமான நபர்களுடனான மறக்க முடியாத தீபாவளி இது.

    நான் அவர்களின் வேலையை நெருக்கமாக பார்த்தேன். அவர்களின் திறமைகளைக் கற்றுக்கொள்ள முயற்சித்தேன் மற்றும் அவர்களின் சிரமங்களையும், சிக்கல்களையும் புரிந்து கொண்டேன்.

    அவர்கள் வீட்டுக்கு செல்லவில்லை. நாம் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க, தங்கள் கிராமம், நகரம், குடும்பத்தை மறந்து விடுகிறார்கள்.

    அவர்கள் களிமண்ணில் இருந்து மகிழ்ச்சியை உருவாக்குகிறார்கள். பிறருடைய பண்டிகைகளுக்காக ஒளியேற்றும் போது, அவர்களால் ஒளியில் வாழ முடியுமா? வீடு கட்டுபவர்கள் தங்கள் சொந்த வீடுகளை நடத்துவது கடினமானது.

    மக்களின் திறமைகளுக்கு உரிய மரியாதையும், பங்களிப்புக்கு மதிப்பும் வழங்கும் ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதுவே ஒவ்வொருவரின் தீபாவளியையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றும்.

    இந்த தீபாவளி உங்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அன்பைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    ×