என் மலர்
டெல்லி
- மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
- கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

இந்நிலையில் 47-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர் டொனால்டு டிரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நம்முடைய ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.
ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
- பலரும் தன்னார்வத்துடன் பல தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கலாம்.
- தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடர்பாக விக்கிபீடியா மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
விக்கிபீடியா சமூக வலைத்தள தகவல் களஞ்சியமாக கருதப்படுகிறது. அங்கு அனைத்து துறை பற்றிய தகவல்களையும் பார்க்கலாம். பலரும் தன்னார்வத்துடன் பல தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கலாம். அதேபோல பக்கங்களை திருத்தவும் செய்யலாம்.
இந்த தளத்தில் இடம்பெறும் தகவல்களில் துல்லியத் தன்மை இல்லாததாகவும், பாரபட்சமான தகவல்கள் அடங்கி இருப்பதாகவும் புகார் எழுந்தது. தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடர்பாக விக்கிபீடியா மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இதுகுறித்து கேள்வி எழுப்பி, மத்திய அரசு விக்கிபீடியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், "விக்கிபீடியாவை ஏன் மத்தியஸ்த/இடைத்தரக ஊடகமாக பார்க்காமல் ஒரு வெளியீட்டாளராக கருதக்கூடாது" என்று விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்குகிறது.
- நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது.
அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.
இதுதொடர்பாக, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சம்விதன் சதன் மைய மண்டபத்தில் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும்.
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை குளிர்காலக் கூட்டத்தொடருக்காக பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் அழைப்பதற்கான முன்மொழிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்தார்.
- சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
- 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி முறைப்படி விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி:
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.
அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.
2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
- அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
- உத்தரபிரதேச மதரசா சட்டத்தின் செல்லுபடியை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
புதுடெல்லி:
கடந்த 2004-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான அரசு, மதரசா கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் உத்தரபிரதேச மாநில அரசின் மதரசா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்கே எதிரானது. இந்தச் சட்டம் செல்லாது. எனவே உத்தரபிரதேச மாநிலத்தின் மதரசாக்களில் பயிலும் மாணவர்களை மாநில அரசு வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் இவ்வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் உத்தரபிரதேச அரசு அமல்படுத்திய மதரசா சட்டம் செல்லும் என்று தெரிவித்து அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. தீர்ப்பில், சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. உத்தரபிரதேச மதரசா கல்விச் சட்டம் மதச்சார்பின்மைக் கொள்கையை மீறவில்லை.
உத்தரபிரதேச மதரசா சட்டத்தின் செல்லுபடியை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மதச்சார்பின்மையின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக மதரசா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு கூறியது தவறு. இந்த சட்டத்துக்கு சட்டமன்றத் தகுதி இல்லாவிட்டால் சட்டத்தை ரத்து செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை.
புதுடெல்லி:
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
3-வது நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே நீர் நிலைகளில் திரளும் பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பக்தி பாடல்களை பாடி பிரார்த்தனை செய்வார்கள். இதையொட்டி டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
- தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.
- பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று சந்திரசூட் முன்பு கூறியிருந்தார்.
அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(b) (c) அதிகாரமளிக்கிறது. இந்த உரிமையை சட்டப்பிரிவு 31C பாதுகாக்கிறது. தனியார் சொத்துக்களும் இதில் சட்டப்பிரிவில் அடங்கும் என்பதை 1978 இல் வழங்கப்பட உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
இதை எதிர்த்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு ஒன்று போடப்பட்டது. அதாவது, 1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. பொது சீரமைப்புக்காக சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் என்பதே அந்த திருத்தும். இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
1991 இல் இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் , ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இதர பணக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று நடந்த விசாரணையில், நலனுக்காகவே இருந்தாலும் எல்லா தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்கள் கைப்பற்ற முடியாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. சந்திரசூட் உள்ளிட்ட 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில் அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துளியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரலில் நடந்த விசாரணையின்போது , பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று தலைமை நீதிபது சந்திரசூட் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மக்களவை தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனியார் சொத்துகளான வீடுகள், தங்கம், வாகனங்கள் என அனைத்தையும் அபகரித்து சொத்து மறுபகிர்வு திட்டத்தன்மூலம் மற்றவர்களுக்கு வழங்கிவிடும். பெண்களின் தாலியையும் அவ்வாறு பறிக்கும் என்று காங்கிரஸ் மீது பரபரப்பான விமர்சனத்தை முன்வைத்தார். இதனையொட்டி இந்த 30 ஆண்டுகால பழமையான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
- மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஆபத்தான வகையில் உள்ளளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் மோசமான காற்றின் தரவரிசையில் டெல்லி முதலிடத்தில் இருந்தது.
டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற பனிப்படலம்போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம்.
- நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில், ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு எனது வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். சமூக மட்டத்தில், நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே இதுபோன்ற சந்திப்புகள் நடப்பது வழக்கம்தான். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை.
நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம். பிரதமருடனும், மத்திய மந்திரிகளுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம்.
ஆனால் அந்த உரையாடல், வழக்குகள் சம்பந்தப்பட்டது அல்ல. வழக்குகளை நாங்கள்தான் முடிவு செய்வோம். வாழ்க்கை, சமுதாயம் பற்றி பொதுவானதாகவே அந்த உரையாடல்கள் இருக்கும்.
நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, இருதரப்பும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று அர்த்தம் அல்ல. இதுபோன்ற விஷயங்களை அரசியல் உலகம் முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் சுமுக தீர்வுக்காக நான் கடவுளை வேண்டியது உண்மைதான். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவன்.
"பொதுவாகவே, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்திற்கு கட்டுப்படாத சுதந்திரம் என வரையறுக்கப்பட்டது. தற்போதும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதையே குறிக்கிறது. ஆனால் அது மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அல்ல.
நம் சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வருகையால், மின்னணு ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் சில குழுக்கள் செயல்படுவதை காண முடிகிறது.
இந்த குழுக்கள் நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தால், அதை நீதித்துறையின் சுதந்திரம் என்று அழைக்கின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நீதிபதிக்கு அவரது மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்றோ, அல்லது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்றோ அர்த்தமில்லை. அது சுதந்திரம் பற்றிய எனது வரையறை அல்ல."
இவ்வாறு அவர் பேசினார்.
- பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது.
- RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம்.
இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால் ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் பல பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது. RAC டிக்கெட் என்பது அர்த்தம் ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான இட ஒதுக்கீடு (Reservation Against Cancellation) என்பதன் சுருக்கமாகும். RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம். அதே சமயம் பெர்த்திற்கு ரெயில்வே உத்தரவாதம் அளிக்காது. அதாவது உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், RAC ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மற்றொரு பயணியுடன் நீங்கள் ஒரு பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
அதே சமயம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்.
இந்நிலையில் RAC டிக்கெட் குறித்து டெல்லியை சேர்ந்த ஜா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரெயில்வே அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், தனது குடும்பத்தை சாத் விழாவை கொண்டாட டெல்லியிலிருந்து பீகாரில் உள்ள தர்பங்காவிற்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்யும்போது டிக்கெட் காத்திருப்பு பட்டியல் 124 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் 30 அன்று RAC 30 ஆகவும், நேற்று RAC 12 ஆகவும் இருந்தது. ஆனால் ரெயில் சார்ட் தயாரான பிறகு காத்திருப்பு பட்டியல் 18 ஆக உள்ளது எனக்கூறி எனது டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.
இது என்ன மாதிரியான டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்? ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, சாத் பண்டிகையின் போது ஒரு பீகாரி தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை அவருக்கு பதிலளித்தது.
இதனையடுத்து ஜா தனது எக்ஸ் பதிவில், "ரெயில்வே அதிகாரி என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாளை உங்கள் ஊருக்கு செல்வதற்கான ரெயில் பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று அவர் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் ரெயில்வே அமைச்சருக்கு என் நன்றிகள்" என்று அவர் பதிவிட்டார்.
- பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அறிவிப்பு.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் இன்று காலை பேருந்து சென்றபோது திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






