என் மலர்tooltip icon

    டெல்லி

    • இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன
    • முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கிளை மூலம் 13 போலி கணக்குகளை உருவாக்கி அவற்றின் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்திருக்கின்றனர். சைபர் குற்றங்கள் மூலம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை எடுப்பதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் நடப்பு கணக்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சைபர் குற்றவாளிகளின் இந்த மோசடிக்கு குறிப்பிட்ட அந்த வங்கியின் மேலாளர் விகாஸ் வத்வா மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

    வங்கி அதிகாரிகளின் உடந்தையுடனும், குற்றவியல் சதித்திட்டத்துடனும் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், இதற்காக கே.ஒய்.சி. விதிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்த கணக்குகள் மூலம் ரூ.1,084 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், மேற்படி முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து விகாஸ் வத்வா உள்பட 19 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதமர் மோடி இரு நாள் பயணமாக இன்று அசாம் மாநிலம் செல்கிறார்.
    • கவுகாத்தி-கொல்கத்தா இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    கவுகாத்தியில் இன்று மாலை போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாசார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    இதையடுத்து, நாளை காலை ரூ.6,950 கோடி மதிப்பிலான 86 கி.மீ. நீள கஜிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட உள்ளது.

    தொடர்ந்து, வட இந்திய மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    • பாராளுமன்றத்தில் ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • ஆன்லைன் மசோதா அமலானபின் 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.

    இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய அரசு கூறுகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மசோதா அமலானபின், 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    • காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியின்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதற்கிடையே, காயம் குணம் அடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது.
    • வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை, எளிதாக அழிக்கப்படும் வகையில் இருந்தது என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி "தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்," என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா பதில் கொடுத்துள்ளார். அதில், சாக்குப்போக்கு சொல்லும் படை திரும்பியது! எண்ணிக்கை முடிவதற்குள் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?

    ராகுல் தான் சிறப்பாக செய்வதை செய்யத் திரும்புகிறார். இழிவுப்படுத்துதல், திரித்தல் மற்றும் தவறான தகவல். பரம்பரை திருடன் (Khandani chor) இப்போது தாக்கரேக்களின் கூற்றுகளை மீண்டும் எழுப்புகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜனவரி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.
    • தேவைப்பட்டால் 20-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு.

    பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவர் இரண்டு முறை தேசிய தலைவராக பதவி வகித்துவிட்டார். அவருடைய பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. மேலும், தேசிய தலைவர் பதவியுடன், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதனால் பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஆனால், தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக கட்சி காலதாமதம் செய்து வந்தது. பல மாதங்களாக தேர்வு செய்யப்படாமல் இருப்பதால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்தது. இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி புதிய தேசிய தலைவர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என பாஜக கட்சி தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்தலை நடத்துவதற்காக கே. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

    அதில் "ஜனவரி 19-ந்தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

    வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். தேவைப்பட்டால் ஜனவரி 20-ந்தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய செயல் தலைவராக உள்ளார். இவர் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    இவருக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமித் ஷாவுக்குப் பிறகு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜே.பி. நட்டா தேசிய தலைவரானார்.

    • பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.

    டெல்லி ஜகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது வீட்டில் கட்டு கட்டாக பண குவியல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் மறுத்தார். இச்சம்பவம் தொடர்பாக யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

    நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 எம்.பிக்கள் கையெழுத்திட்டு பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் அமைத்தார். இதே தீர்மானம் மேல்-சபையில் நிராகரிக்கப்பட்டது.

    இதற்கிடையே தன்னை நீக்குவதற்கான தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.

    இந்த நிலையில், மக்களவை சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    இதில் யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்-சபையின் துணைத் தலைவருக்கு ஒரு தீர்மானத்தை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்றும், 1968-ம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ், சபாநாயகர் மற்றும் தலைவருக்கு மட்டுமே ஒரு நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

    • நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது திருவள்ளுவர் நம்பிக்கை வைத்தார்.
    • திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

    திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் ஜோடி முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடிஅடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
    • குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் இருவரும் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணத்தின்போது, டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே 2004-ம் ஆண்டு முதல் மூலோபாய உறவு நீடித்து வருகிறது. பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையே உறவுகள் வலுவடைந்து வருகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    • ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
    • இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துவருகிறது.

    புதுடெல்லி:

    ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, இந்தியக் குடிமக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.

    ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளும்படி வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    முதல் கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், அவர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ×