என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாச்சர்லாவில் இருந்து கட்டுமான பணிக்கு தேவைப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ரேப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    ரவி அனந்தபுரம் என்ற இடத்தில் சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.

    இதில் கற்களுக்கு அடியில் சிக்கி சிந்தர்லா பாசர்ல பாடு பகுதியை சேர்ந்த சென்ன கேசவல்லு (வயது 48), சாம்பைய்யா (60), வாலி (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ரேப் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 நாட்களுக்கு மேலாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் தரிசனம் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது.

    கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    தேதி, நேரம் குறிப்பி டப்பட்ட தரிசன டோக்கன் இல்லாமல் நேரடியாக இலவச செய்து செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    இன்று நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் தரிசனம் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது.

    நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரை 79,486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 40,250 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி அனுப்பி வைத்த பணத்திலிருந்து குடிப்பதற்கு பணம் கேட்டு வீரய்யா மகனிடம் தகராறு செய்தார்.
    • மகனின் தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அடுத்த குள்ளப்பாவை சார்ந்தவர் வீரய்யா. கூலி தொழிலாளி.இவரது மனைவி அலிவேலம்மா. தம்பதியின் மகன் அசோக் (வயது 25) ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    அலிவேலம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்றார். அசோக்கின் மனைவி லட்சுமி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டில் தந்தையும் மகனும் மட்டும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அலிவேலம்மா தனது மகனின் வங்கி கணக்கிற்கு ரூ.5 ஆயிரம் அனுப்பி வைத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி அனுப்பி வைத்த பணத்திலிருந்து குடிப்பதற்கு பணம் கேட்டு வீரய்யா மகனிடம் தகராறு செய்தார். அசோக் தந்தைக்கு குடிப்பதற்கு பணம் தர மறுத்தார்.

    இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக சென்று மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அசோக் தந்தையை அடித்தார்.

    இதில் ஆத்திரமடைந்த வீரய்யா அருகில் இருந்த கல்லை தூக்கி மகனின் தலையில் போட்டார். இதில் அசோக்கின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகனின் தலையை தனியாக வெட்டி எடுத்தார். மகனின் தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்தார்.

    பின்னர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். மகனின் தலையை மேஜையில் வைத்தபடி மது வாங்கி குடித்தார்.

    வீரய்யா தனது மகனின் தலையை பையில் போட்டுக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஊரை சுற்றி வந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் மதுபான கடைக்கு வந்து அங்கு மது குடித்துக் கொண்டு இருந்த வீரய்யாவை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சாஹிதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
    • போலீசார் சாஹிதி உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், வனஸ்தலிபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது 31). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி சாஹிதி (29). கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனோஜ் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

    கடந்த 2-ந் தேதி சாஹிதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மனோஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் மனோஜை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்த செய்தியை அவரது மனைவிக்கு தெரிவித்தனர்.

    இதனை கேட்ட சாஹிதி கதறி துடித்தார். இதையடுத்து மனோஜின் உடல் கடந்த 23-ந் தேதி அமெரிக்காவிலிருந்து வனஸ்தலிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கணவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சாஹிதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

    இதனைக் கண்ட அவரது பெற்றோர் சாஹிதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சாஹிதி உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
    • வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியது.

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியது.

    3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி மலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    மாலை 4 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    கிழ் திருப்பதியில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த மழையின் காரணமாக தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் குளிரிலும் நடுங்கியபடி வரிசையில் நின்றிருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,583 பேர் தரிசனம் செய்தனர். 40,343 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

    அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.

    கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

    பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார்.

    மேலும் இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அவர், இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான பற்று அல்ல என்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    • புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார்.
    • மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி, கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புருஷோத்தமன். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த மிங்மிங் என்று இளம்பெண் கேஷியராக வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் புருஷோத்தமன், மிங்மிங் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர்களது பெற்றோர்களிடம் கூறினர்.

    அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் சீனாவில் இருந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மணமகள் நகரிக்கு வந்தார்.

    அவர்களுக்கு மணமகன் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

    இந்து முறைப்படி மணமகள் திருமண முகூர்த்த புடவையும், மணமகன் வேட்டி சட்டை அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.

    பின்னர் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்தி சென்றனர்.

    • திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை மற்றும் பிற துறைகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    • திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாதவாறு அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏழுமலையானை தரிசிப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த போதிலும் அதனுடைய புனித தன்மை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கானாவை சேர்ந்த பக்தர் ஒருவர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி கோவிலுக்குள் தனது செல்போனை கொண்டு சென்று கோவிலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

    இந்த சம்பவம் பக்தர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஒரு சில இடங்களில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமலையில் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா முன்னிலையில் திருமலை அன்னமய்யா பவனில் நேற்று பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை மற்றும் பிற துறைகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கொரோனாவுக்கு பிறகு பக்தர்கள் வருகை மற்றும் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பதி தேவஸ்தான அலுவலர் நரசிம்ம கிஷோர் மற்றும் திருப்பதி எஸ்.பி பரமேஷ்வர் ரெட்டி ஆகியோர் தனித்தனியாக திருமலையில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய இடங்கள் குறித்தும் தெரிவித்தனர்.

    திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாதவாறு அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தனர்.

    போலீசார் மற்றும் விஜிலன்ஸ் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் உடனடியாக ஆட்களை நியமனம் செய்து பாதுகாப்பு குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.
    • தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் டிஐஜி செந்தில் குமார் உத்தரவின்படி, அதிரடிப்படை டிஎஸ்பி செஞ்சுராஜூ தலைமையில் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை மண்டலம் எஸ்ஆர் பாலம் ரோல்லமடுகு பகுதியில் சோதனை நடத்தினர்.

    சாலமக்குள பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.அதிரடிப்படை போலீசாரை பார்த்ததும் செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், கோடூர் துணைக் கட்டுப்பாட்டு நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கிருபானந்தாவைச் சேர்ந்த அல்லிபாஷா குழுவினர் ராஜாம்பேட்டை எல்லைக்குட்பட்ட தும்மலபைலு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அவர்கள் கலிகிரி கோனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சிலர் செம்மரங்களை வெட்டி தூக்கி சென்றதை கண்டனர்.

    அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது, செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

    விசாரணை நடத்தியதில், அவர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 47) என தெரியவந்தது.

    அங்கு கிடந்த 10 செம்மரங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் போஜ்ஜா கூடேமை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு.

    இவரது மகள் இந்திரஜா (வயது 9). வெங்கடேஸ்வரலுவிடம் சேகர் என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அனந்தகிரியில் வெங்கடேஸ்வரலுவின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

    பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.

    சிறுமி தலையை காருக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை கவனிக்காத கார் டிரைவர் சேகர் திடீரென கார் கண்ணாடியை ஏற்றினார். இதில் சிறுமியின் கழுத்து இறுகி மூச்சு அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இந்திரஜாவின் பெற்றோர் சிறுமியின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    இதுகுறித்து அனந்தகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    • வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது.
    • ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது.

    நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படாததால் இலவச தரிசனத்திற்கு நீண்ட நேரமாகிறது.

    ×