என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மனைவி இறந்ததை கேட்டதும். ரங்கநாயக்கலு அதிர்ச்சியடைந்தார்.
- தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் எதுவும் அறியாத 10 மாத குழந்தை தவித்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குடிமிரால்லாவை சேர்ந்தவர் ரங்கநாயக்கலு (வயது 28). இவரது மனைவி லதா (22).
கடந்த 1½ வருடத்திற்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
லதா கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் வயிற்று வலி சரியாகவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு லதாவுக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் லதாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக இறந்தார்.
லதா இறந்தது குறித்து டாக்டர்கள் அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
மனைவி இறந்ததை கேட்டதும். ரங்கநாயக்கலு அதிர்ச்சியடைந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே ஓடி சென்றார்.
கர்னூல் அருகே உள்ள துப்பட்டு ரெயில் தண்டவாளம் அருகே சென்றார்.
அந்த வழியாக வந்த ரெயில் முன்பாக பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கநாயக்கலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் எதுவும் அறியாத 10 மாத குழந்தை தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஏழுமலையான் கோவிலுக்கு 78 ஆயிரத்து 126 பக்தர்கள் வருகை தந்தனர்.
- 37 ஆயிரத்து 597 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
நேரடி இலவச தரிசனத்தில் 32 காத்திருப்பு அறைகளை கடந்து பக்தர்கள் வெளியில் உள்ள வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு 78 ஆயிரத்து 126 பக்தர்கள் வருகை தந்தனர்.
இவர்களில் 37 ஆயிரத்து 597 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் மண்டலம் மகா சமுத்திரம் சுங்கச்சாவடி அருகே டி.எஸ்.பி. சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- செம்மர கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். நேற்று 8 பேர் கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றினர்.
செம்மரக்கட்டைகளை கர்நாடக மாநில கடிகனஹள்ளியை சேர்ந்த இம்ரானுக்கு கடத்தி சென்றனர்.
சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் மண்டலம் மகா சமுத்திரம் சுங்கச்சாவடி அருகே டி.எஸ்.பி. சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக செம்மரம் கடத்தி வந்த 2 கார்களை மடக்கி பிடித்தனர்.
காரில் வந்த கோலார் மாவட்டம் பேத்தமங்களத்தை சேர்ந்த அப்துல் ரஹிமான் (வயது26), திரு வண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூரை சேர்ந்த மகேந்திரன் (35), திருப்பத்தூர் மாவட்டம் தகரக்குப்பத்தை சேர்ந்த காளியப்பன் (42), பி.மகாதேவன் (36), வாணியம்பாடியை சேர்ந்த ஜி.சிவன் (45), ஆர்.சின்னத்தம்பி (62), எம்.சிவசங்கர் (30), கே.ரவி (36) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செம்மர கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- கணவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக மகன்களுக்கு லலிதா தெரிவித்தார்.
- மகன்கள் யாரும் தந்தையை பார்க்க வரவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத்.
இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு தினேஷ், முகேஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் தினேஷ் கர்னூலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். முகேஷ் கனடா நாட்டில் டாக்டராக உள்ளார்.
ஹரிகிருஷ்ண பிரசாத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்தார்.
கணவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக மகன்களுக்கு லலிதா தெரிவித்தார். ஆனால் மகன்கள் யாரும் தந்தையை பார்க்க வரவில்லை.
மகன்கள் தங்களை வந்து பார்க்கவில்லையே என கணவன்- மனைவி இருவரும் மனவேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் ஹரிகிருஷ்ண பிரசாத் நேற்று காலை இறந்தார். தந்தை இறந்தது குறித்து மகன்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சொத்துக்காக சண்டை போடுவார்கள் என லலிதா கூறாமல் விட்டுவிட்டார்.
உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கவில்லை. இறந்து போன கணவரின் உடலையே பார்த்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த அட்டைப்பெட்டிகள், பழைய புத்தகங்கள் மற்றும் துணிகளை எடுத்து வந்து கணவர் உடல் மீது போட்டு தீ வைத்து எரித்தார்.
வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஹரிகிருஷ்ண பிரசாத் உடல் எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தீயை அனைத்து ஹரி கிருஷ்ணா பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்தியா நாசாவுடன் இணைந்து ‘நிசார்’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
- அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீஹரிகோட்டா :
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
'ஜி.எஸ்.எல்.வி. எப்-10' ராக்கெட் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டது. கிரையோஜெனிக் நிலையில் கசிவு இருந்ததால்தான் தோல்வி ஏற்பட்டதாக அந்த குழு அறிக்கை அளித்தது.
அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதன் மூலம் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. 'என்.வி.எஸ்.' 2-ம் தலைமுறையை மையமாக கொண்டு ஏவப்பட்டு உள்ளது. இது புவிவட்டப் பாதையை சேர்ந்தது. இதில் இருந்து திறம்பட, துல்லியமாக தகவல்களை பெற முடியும்.
இந்த 'என்.வி.எஸ்.' செயற்கைகோள் ரகத்தில் மொத்தம் 5 செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 செயற்கைகோள்கள் 6 மாதத்துக்கு ஒன்று வீதம் அனுப்பப்பட உள்ளன. இந்த செயற்கைகோள் மூலம் நம்நாட்டுக்கு தேவையான தகவல்களை பெறுவதுடன் வரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்புகளை பெறமுடியும்.
அடுத்து 'ஜி.எஸ்.எல்.வி.' ரகத்தில் 'இன்சாட் 3டி.எஸ்.' என்ற செயற்கைகோள் காலநிலை மாற்றம் குறித்து ஆராய விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல், இந்தியா நாசாவுடன் இணைந்து 'நிசார்' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
தொடர்ந்து 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3', 'எஸ்.எஸ்.எல்.வி.', ககன்யான் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட் செயல் வடிவத்துக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், இந்தியாவுக்கும், இந்தியர்களுக்குமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள 'எல் 1 பேண்ட்' பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வரைபடம், வழிகாட்டி தகவல்களை பெற முடியும். தொடர்ந்து நிலவை ஆய்வு செய்யும் 'சந்திரயான்-3' திட்டம் ஜூலை மாதம் செயல்படுத்தப்பட உள்ளது.
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தை பொறுத்தவரை 99 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவுற்றது. இங்கிருந்து தனியார் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடு்க்கப்படும். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தந்துள்ளது. வடிவமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில் கட்டுமானத்துக்கான டெண்டர் கோரப்பட உள்ளது.
2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். அதற்குப் பிறகு ராக்கெட் இங்கிருந்து ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஜூலை மாதம் மாதிரி விண்கலம் ஒன்று புவியில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் அனுப்பி பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
- பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், ராஜமகேந்திரவரம், வேமகிரியில் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நடந்தது.
விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மகாசக்தி திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய இளம்பெண்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 டெபாசிட் செய்யப்படும்.
பெண்களுக்கு 59 வயது வரை உதவித் தொகை வழங்கப்படும். தள்ளி வந்தனம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காகவும் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 டெபாசிட் செய்யப்படும்.
மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதி திட்டம் நிறைவேற்றப்படும். தீபம் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின் துயரத்தை போக்க அன்னதாதா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
தெலுங்கு தேசம் ஆட்சியின் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத நபருக்கும் ரூ.3 ஆயிரம் வேலைவாய்ப்பின்மை நிவாரணமாக நிதி வழங்கப்படும்.
மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகள் என்ற விதிமுறை ரத்து செய்யப்படும்.
மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகம் தசரா பண்டிகையின் போது வெளியிடப்படும்.
தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்ததும் இந்த தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.
வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
என்னை நம்புங்கள், நான் ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் அதில் இருந்து பிரிந்து செயற்கைகோள் திட்டமிட்டபடி அதன் சுற்றுப்பாதைக்கு சென்றது.
தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை (ஐ.ஆர்.என்.எஸ். எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆர் என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1 எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த ராக்கெட் மொத்தம் 51.7 மீட்டர் என்றளவுக்கு பிரமாண்டமான உயரம் கொண்டது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்ட இலக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் அந்த ராக்கெட் கடந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த ராக்கெட் மூலம் 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் அதில் இருந்து பிரிந்து செயற்கைகோள் திட்டமிட்டபடி அதன் சுற்றுப்பாதைக்கு சென்றது. இந்த செயற்கைகோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும்.
மேலும் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.
- இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது.
- பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
நேரடி இலவச தரிசனத்தில் இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது.
ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 78,818 பேர் தரிசனம் செய்தனர். 39,076 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
- 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை (ஐ.ஆர்.என்.எஸ். எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆர் என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1 எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த ராக்கெட் மொத்தம் 51.7 மீட்டர் என்றளவுக்கு பிரமாண்டமான உயரம் கொண்டது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
- திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டி தலை மற்றும் தோளில் தூக்கி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் கடப்பா அடுத்த வாணிபெண்டா வனசரகத்திற்கு உட்பட்ட திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டி தலை மற்றும் தோளில் தூக்கி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அனந்தபுரம் மாவட்டம், கதிரியை சேர்ந்த மேகலநாகமல்லப்பா ( வயது 47), தண்டிசூரி (32), கடப்பா அடுத்த காஜிப்பேட்டை சேர்ந்த நாகேஷ்(54), நாகேஸ்வரராவ்(32), சீனிவாசலு (57), தேவல்லாசுப்பராயடு(39), தம்மிஷெட்டி வெங்கடசுப்பையா (34), ஸ்ரீபதி பிரதீபால் (21), ஸ்ரீ ராம ராஜசேகர் (34), ஸ்ரீ ராம ஜஸ்வா (25), மாமிளா நாகேந்திரா (25), இல்லூர் வினோத் (20), மல்லேலபொயினா வெங்கடேசம் (46), சத்யசாய் அடுத்த கலம் பேட்டையை சேர்ந்த எம்பாலிசேஷாத்ரி (37) என்பதும், இவர்கள் செம்மரக்கட்டைகள் கடத்தியதும் தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 17 செம்மரக்கட்டைகள், லோடு ஆட்டோ, 2 பைக் மற்றும் 17 கோடாரி உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்தனர்.
அன்னமய்யா மாவட்டம், ராஜாம்பேட்டை அடுத்த சிப்பகொண்டி டோனா பகுதியில் செம்மரக்கடைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அடுத்த மோளையனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (30), குடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
- ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.
அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.
இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
- ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர்.
திருப்பதி:
நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று புறப்பட்டு வந்தது.
ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் தெலுங்கான மாநிலம் குன்றத்திமடுகு அருகே வந்தபோது, பி-2 ஏசி பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயை அணைத்து தற்கலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர் ராம்புரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோர்னக்கல் ரெயில் நிலையத்தில் 40 நிமிடம் ரெயில் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரெயிலிலிருந்து கழட்டிய பின், ரெயில் புறப்பட்டு சென்றது.
ரெயில் பெட்டியில் புகை வந்தவுடன் பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.






