என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- இன்று இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையானுக்கு ஹோமம், அபிஷேகம், பஞ்சாமிர்த திருமஞ்சனம் நடக்கிறது.
பின்னர் சாமிக்கு வஜ்ரகவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடக்கிறது.
2-வது நாள் உற்சவர் ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு வீதி உலா நடக்கிறது.
3-வது நாள் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு உற்சவர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மாட வீதிகளில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
4-வது நாள் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 80,284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34,096 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன.
- சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடந்த மொத்த பிரசவங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவை சிகிச்சை பிரசவங்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்தது.
இது ஆந்திராவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேசன் மூலம் பிறக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் 50.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 39.3 சதவீதமாகவும் உள்ளனர்.
குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.
ஒரு சில மருத்துவமனைகள், தாய்க்கு இயல்பான பிரசவம் செய்யும் திறன் இருந்தபோதிலும், ஆபரேசனை தேர்வு செய்ய பரிந்துரைக்கின்றன. இதனால் சாதாரண பிரசவத்துடன் ஒப்பிடும்போது அதிக கட்டணம் வசூலிக்க முடியும்.
மேலும் சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தாங்களாகவே ஆபரேசனை கோருகின்றனர். இது சாதாரண பிறப்பை விட பாதுகாப்பான விருப்பம் என்று நம்புகிறார்கள்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
சமீப நாட்களில், மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான கர்ப்பம் மற்றும் செயற்கை கருத்தரிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவது இயல்பானதாக மாறி வருகிறது.
இது பிரசவிக்கும் போது சிக்கலின் விகிதத்தை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பாற்ற, குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆபரேசன் தேர்வு செய்யப்படுகிறது.
15 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பங்கள் சிக்கல்களில் இறங்குகின்றன, அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. இங்கே தாய் மற்றும் குழந்தைக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக மாறுகிறது.
மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து உள்ளார்ந்த அபாயத்தைக் கொண்டுள்ளன.
புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்ப்பாலூட்டுவதில் இருந்து தூரமாக்கும் என்ற கவலையும் உள்ளது.
அறுவை சிகிச்சையின் காரணமாக, மென்மையான கீறல்கள் மற்றும் தையல்களால், தாய்மார்கள் உட்கார்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இருப்பினும் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிப்பது, சிக்கல்களைத் தடுப்பது மற்றும் சாதாரண பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின் போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளையும் செய்ய பரிந்துரைக்கிறோம் என்றனர்.
- வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அருகில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமி அதிர்ந்தது. வெடி விபத்தில் வீடுகள் குலுங்கின.
அப்போது பட்டாசு சேமிப்பு கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த சாது நாகேந்திரா (வயது 31), எல்லக்கட்டாவை சேர்ந்த சங்கரய்யா (30), ஏழுமலை (45) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு தொழிலாளி வீரராகவ் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கல்யாண் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தொழிலாளர்களின் உடல் பாகங்கள் அங்குள்ள மரக்கிளைகளில் தொங்கியது. இது வெடி விபத்தின் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு திருப்பதி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லை. பட்டாசு சேமித்து வைக்க மட்டுமே அனுமதி உள்ளது. பட்டாசு சேமிப்பு தொடங்கியதற்கான உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமலேயே பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதில்லை எனவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.
பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
- கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது.
இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர்.
அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர்.
இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர்.
அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.
ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன.
மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை நடக்கிறது.
- 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ஜூன் மாதம் 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை, 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம், 4-ந்தேதி எருவகா பூர்ணிமா, 14-ந்தேதி மதத்ரய ஏகாதசி, 20-ந்தேதி பெரியாழ்வார் உற்சவம், 29-ந்தேதி ஷயன ஏகாதசி, சதுர்மாஸ்ய விரதம்.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
- மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பி எடுக்கின்றனர். இதனாலும் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
- மலைப்பாதையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதையில் இந்த மாதம் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.
மலைப்பாதையில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் விபத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.
விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா கூறியதாவது:-
மலைப்பாதையில் வாகனங்கள் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், விபத்துக்கள் நடக்கின்றன.
மேலும் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவதும், வாகனங்களை வேகமாக ஓட்டுவதும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன.
மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பி எடுக்கின்றனர். இதனாலும் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதை பற்றி தெரிந்த டிரைவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும்.
மலைப்பாதையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படும். விதிகளை மீறினால், அந்த வாகனங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 75,871 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32,859 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- மே மாதத்தில் பீர் விற்பனை ஓரளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
- கடும் வெயில் காரணமாக மது பிரியர்கள் ஹாட் வகை மதுக்களை அதிகம் விரும்பவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மது விற்பனை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. சில மாதங்களாக மது விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த ஆண்டு மதுவிற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 13 சதவீதம் விற்பனை குறைந்தது. தொடர்ந்து விற்பனை குறைந்து வந்த நிலையில் மே மாதம் மட்டும் 55 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.
இதனால் முழுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பீர் விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த மாதம் பீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் காரணமாக அதன் விற்பனை முந்தைய ஆண்டை விட குறைந்திருக்கலாம். ஆனால் மே மாதத்தில் பீர் விற்பனை ஓரளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
மதுபான உற்பத்தி நிலையங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக மது விற்பனை பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க உயர் ரக மதுபான பார்களில் மதுவிற்பனை சரிவு ஏற்படவில்லை. அந்த இடங்களில் 15 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது.
தட்டுப்பாடு காரணமாக பீர் வரத்து குறைந்ததால் அதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடும் வெயில் காரணமாக மது பிரியர்கள் ஹாட் வகை மதுக்களை அதிகம் விரும்பவில்லை. இதுவும் மது விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாகும்.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
- பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
- 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சாஸ்திர பூர்வமாக மேதினி பூஜை, சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடந்தது.
பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாளுவப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை (வியாழக்கிழமை) காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை கல்யாணோற்சவம், இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா.
4-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
- தெப்போற்சவம் இன்று தொடங்கி ஜூன் 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- தெப்போற்சவத்தால் 5 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அதையொட்டி முதல் நாளான இன்று உற்சவர்களான ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர், 2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) சுந்தரராஜசாமி மற்றும் கடைசி 3 நாட்களுக்கு மாலை 3.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை நீராழி மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன்பிறகு உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஜூன் 3-ந்தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும், ஜூன் 4-ந்தேதி இரவு 8 மணிக்கு கருட வாகனத்திலும் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தெப்போற்சவத்தால் கோவிலில் மேற்கண்ட 5 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மனைவிக்கு தெரியாமல் சிறுவனை ஐதராபாத் அழைத்துச் சென்றார்.
- ஐதராபாத் தம்பதியிடம் மீதம் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மகனை அவர்களிடம்டம் விற்பனை செய்துவிட்டு வந்து விட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மசூத். தெருவில் சீசனுக்கு ஏற்றபடி தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி கவுசர். தம்பதிக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகன் அயன் (வயது 4). வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் மசூத் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார்.
அவருக்கு 4 பிள்ளைகள் இருப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 3 பெண்கள் குழந்தை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என மசூத்திடம் ஆசை வார்த்தை கூறினர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த தம்பதி குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆண் குழந்தை தேவைப்படுகிறது.
குழந்தைக்கு ரூ.3 லட்சம் வரை பணம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். பண ஆசையில் பாசத்தை மறந்த மசூத் தனது 4 வயது மகன் அயனை விற்பனை செய்ய முடிவு செய்தார். மேலும் ரூ.1.50 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டார்.
மனைவிக்கு தெரியாமல் சிறுவனை ஐதராபாத் அழைத்துச் சென்றார். ஐதராபாத் தம்பதியிடம் மீதம் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மகனை அவர்களிடம்டம் விற்பனை செய்துவிட்டு வந்து விட்டார்.
தனது மனைவியிடம் சிறுவன் காணாமல் போய்விட்டதாக கூறி நாடகம் ஆடினார். இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி அழுது துடித்தார்.
இதுகுறித்து மட்வாடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பல்வேறு இடங்களில் சிறுவனை தேடினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் கடைசியாக அவரது தந்தையுடன் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மசூத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் குடும்ப வறுமையின் காரணமாக பணத்திற்கு ஆசைப்பட்டு சிறுவனை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ஐதராபாத் சென்றனர். விற்பனை செய்யப்பட்ட சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவன் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் மேலும் சிறுவர்கள் விற்பனை செய்யப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 7-ந்தேதி மரத்தேரோட்டம் நடக்கிறது.
- 8-ந்தேதி சக்கர ஸ்நானம் மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் பாரம்பரிய சடங்குகளான புண்ய ஹவச்சனம், மிருத்ய கிரஹணம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 1-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை பல்லக்கு வாகனத்தில் மோகினி அவதாரத்தில் வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா.
5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை மரத்தேரோட்டம், மாலை கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம் மற்றும் இரவு கொடியிறக்கம் நடக்கிறது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் இந்து தர்மா பிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் மற்றும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் 9 நாட்களும் பஜனைகள், கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
- 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- 8-ந்தேதி ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் சமீபத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
அதையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம், 8-ந்தேதி காலை உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம், மாலை புஷ்ப யாகம், அதன் பிறகு மாலை வீதி உற்சவம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






