என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
    • தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

    ஓங்கோல்:

    ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது.

    பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது.

    அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் தப்பினர். உராய்வு காரணமாக சக்கரத்திலிருந்து தீ வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிறகு அந்த ரெயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    • சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இன்று டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திபாடு மண்டலத்தில் இருந்து பொன்னூர் மண்டலத்திற்கு டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

    • இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
    • ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இலவச தரிசனத்தில் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 8 மணி நேரமும், நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 87,434 பேர் தரிசனம் செய்தனர். 39,957 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கோபி தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், மங்களகிரியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய கோபிக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில் பெண் குழந்தை படுகாயம் அடைந்தது.

    இதனைக் கண்ட அவரது மனைவி மவுனிகா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை ஜெயிலில் அடைத்தனர்.

    தண்டனை பெற்று வரும் கோபியை ஜாமினில் எடுக்க அவரது உறவினர் சாய் சந்தீப் முயற்சி செய்து வந்தார். இதனை அறிந்த கோபியின் மாமனார் சத்திய நாராயணா மற்றும் அவரது மகன் வெங்கட கிருஷ்ணா ஆகியோர் கோபியை ஜாமீனில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சாய் சந்தீப், சத்திய நாராயணாவை கல்லால் தாக்கினார். இதில் சத்திய நாராயணா படுகாயம் அடைந்தார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவரது மகன் வெங்கட கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாய் சந்தீப்பை ஓட ஓட விரட்டிச் சென்று கழுத்தை அறுத்தார்.

    இதில் சாய் சந்தீப் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வெங்கட கிருஷ்ணா மங்களகிரி போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜூலை 15-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து.
    • சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

    அவா் பேசியதாவது:-

    திருமலையில் பக்தர்களுக்கு கோடை முன்னேற்பாடுகளை செய்வதில், தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் எந்தவித சிரமமும் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக, அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், வி.ஐ.பி. புரோட்டோகால் தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

    இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் தரிசனத்துக்காக கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பக்தர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

    திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் ஹரிஷ்குமார்குப்தா மேற்பார்வையில், திருமலையில் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்

    டிரைவர்கள் கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் மோசமான நிலை காரணமாக திருப்பதி மலைப்பாதைகளில் சமீப காலமாக விபத்துகள் நடந்தன. விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒருங்கிணைந்து நீண்ட கால திட்டங்களை தயாரித்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயித்த வேகத்தின்படி மெதுவாக ஓட்டுமாறு கார் டிரைவர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகளை கேட்டுக்கொள்கிறேன். வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசாமல், திருப்பங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தி, முந்தி செல்லாமல் ஓட்ட வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.
    • பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள குடோன்களில் பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.

    இன்று இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். இதனால் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.

    நேற்று அதிகாலை முதலே இலவச தரிசனத்தில் 85 ஆயிரத்து 366 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    இதில் 48 ஆயிரத்து 183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருமானம் ரூ.4 கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று மாலை ஜோஷ்டாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும். சாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை (தங்க கருட வாகன வீதி உலா நடப்பது வழக்கம்).

    கோவிலில் ஜோஷ்டாபிஷேகம் நடப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்க இருந்த பவர்ணமி கருட சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது.
    • ஜான்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாதவத் தருண் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜான்சி(20) இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    ஜாதவத் தருண் தனது மனைவியுடன் ஐதராபாத்துக்கு குடி பெயர்ந்தார். ஐ.எஸ். சதன் பிரிவில் உள்ள காஜாபாக்கில் அவர்கள் வசித்து வந்தனர்.

    தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் ஜான்சிக்கு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு கணவன், மனைவி இருவரும் தனிமையில் இருந்தனர்.

    அப்போது ஜாதவத் தருண் ஜான்சியை உல்லாசத்திற்கு அழைத்தார். குழந்தைகளை கவனித்ததால் உடல் சோர்வாக உள்ளது எனக் கூறிய ஜான்சி மறுப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் மனைவியை தொடர்ந்து வற்புறுத்தினார்.

    ஜான்சி மறுத்ததால் அவரிடம் அத்துமீற தொடங்கினார்.

    இதனால் ஜான்சி கத்தி கூச்சலிட்டார். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஜாதவத் தருண் தனது மனைவியின் வாயை கையால் பொத்தினார். அப்போது மூக்கையும் சேர்த்து அழுத்தினார்.

    இதனால் ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது. அவர் சுயநினைவை இழந்தார். இதனை கண்டு திடுக்கிட்ட ஜாதவத் தருண் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.

    இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக ஓவைசி மருத்துவமனைக்கு ஜான்சியை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜான்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜான்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது மனைவி திடீரென இறந்து விட்டதாக ஜாதவத் தருண் தெரிவித்தார். ஆனால் ஜான்சியின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து ஜான்சியின் தந்தை சைதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ஜான்சி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தருணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ஜாதவத் தருணை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஏரியில் கிடைக்கும் மண்புழுக்கள் சுமார் பத்து சென்டி மீட்டர் முதல் அரை மீட்டர் வரை நீளத்தில் கிடைக்கிறது.
    • சேகரிக்கப்படும் மண் புழுக்கள் நெல்லூரில் இருந்து கோதாவரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ஆட்டோவில் மண்புழுக்கள் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் சாமுவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் குருகுல பள்ளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    ஆட்டோவில் 12 பெட்டிகளில், 27 கிலோ எடையுள்ள மண்புழுக்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் ஆட்டோவில் வந்த நபரையும் ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர்.

    புலிகாட் ஏரியில் தமிழகத்திலும் ஆந்திராவில் ராயடோருன், கொண்டுரு பாலம், வேணாறு, இரகம், வாட்டம் பேடு, தடா உள்ளிட்ட இடங்களில் மண்புழு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புலிகாட் ஏரிக்கு படகுகளில் செல்லும் மீனவர்கள் படகை ஏரியின் நடுவில் நிறுத்திவிட்டு தண்ணீரில் மூழ்கி ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் வரை சேற்றை அகற்றி அதில் இருந்து மண்புழுக்களை சேகரிக்கின்றனர்.

    ஏரியில் கிடைக்கும் மண்புழுக்கள் சுமார் பத்து சென்டி மீட்டர் முதல் அரை மீட்டர் வரை நீளத்தில் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் மண்புழுக்கள் இறால் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் மண்புழுக்களை கடத்தல்காரர்கள் கிலோ ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர்.

    இதே போல் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழில் இல்லாத நிலையில் வேறு தொழில் செய்ய முடியாது.

    இதனால் சுமார் 500 தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒரு நாளைக்கு ஒரு மீனவர் 2 கிலோ மண்புழு வரை சேகரிக்கிறார். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு டன் மண்புழுக்கள் சேகரிக்கப்படுகிறது.

    இங்கு சேகரிக்கப்படும் மண் புழுக்கள் நெல்லூரில் இருந்து கோதாவரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பேக்கிங் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கார்களில் கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்புழு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவது வனத்துறையினருக்கு தெரிந்தும் அவர்கள் ஒரு படகிற்கு ரூ.1000 வீதம் பணம் வசூலித்து கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    • 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று முத்துக் கவசத்தில் உபயநாச்சியார்களுடன் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜோஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலின் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன் ஒரு பகுதியாக காலை யாகசாலையில் ருத்விக்குகள் சாந்தி ஹோமம் நடத்தினர். சத கலச பிரதிஷ்டை, ஆராதனை நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு நவ கலச பிரதிஷ்டை, ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    வேத பண்டிதர்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூேதவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு வஜ்ர கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்கள் வஜ்ர கவசத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) முத்துக் கவசத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்கக் கவசத்திலும் உபயநாச்சியார்களுடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது
    • பலியான குரப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குரப்பா (வயது 72). இவர் கடப்பாவில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பயின்று வந்தார்.

    இவரது மகள் ரவளி. லவ்லி திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் குரப்பா கடப்பாவில் இருந்து மகளை பார்ப்பதற்காக நேற்று காலை திருப்பதி வந்தார்.

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு தனது மகளுடன் கோவிலுக்கு வந்தார்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது மகளுடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார். அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    கோவில் வளாகத்தை சுற்றி வந்த பக்தர்கள் அங்குள்ள அரசமரத்து அடியில் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரம் திடீரென இரண்டாக பிளந்து விழுந்தது. மரத்தின் அடியில் குரப்பா மற்றும் 3 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.

    இதில் குரப்பாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மகள் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது மகள் கதறி துடித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர், பேபி, நிஹாரிகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவிந்தராஜ சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.

    பலத்த காற்று வீசியபோது கோவில் வளாகத்தில் யானை கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இல்லை எனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். பலியான குரூப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

    • இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது.
    • இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த மாதம் முதல் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு 2 மடங்காக அதிகரித்தது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்து காணப்படுகிறது.

    ஆங்கில வருட பிறப்பு முதல் ஏப்ரல் மாதம் வரை உண்டியல் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்தது.

    கடந்த மாதம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் சுமார் 35 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் மே மாத உண்டியல் வருவாய் ரூ.110 கோடி மட்டுமே வசூலானது. மற்ற மாத உண்டியல் வசூலைவிட இது குறைவாகும்.

    திருப்பதியில் நேற்று 62,407 பேர் தரிசனம் செய்தனர். 33,895 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் இலவச நேர ஒதுக்கீட்டில் வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
    • சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சிகுருவாடா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

    அவர் ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆந்திர மக்கள் இதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

    முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து 3 வாக்குறுதிகளையும், கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த 2 வாக்குறுதிகளையும், பா.ஜ.க அளித்த ஒரு வாக்குறுதி என மொத்தம் 6 வாக்குறுதிகளை திருடி தற்போது அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×