என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 2 நாட்கள் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் வந்தனர். தரிசனத்தை எளிமைப்படுத்துவதற்காக வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது.

    1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

    56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.நேற்று ஒரே நாளில் 92,328 பேர் சாமி தரிசனம் செய்தனர். 40,400 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.2 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.

    திருப்பதியில் இன்று காலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளை தாண்டி ஒரு கிலோமீட்டருக்கு மேல் வரிசையில் காத்திருந்தனர்.

    சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.

    • 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சாக்ஷாத்கார வைபவ உற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதை முன்னிட்டு 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 2-வது நாள் அனுமந்த வாகன வீதிஉலா, 3-வது நாள் கருட வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன வீதிஉலா தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.

    3 நாள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்ததும், 27-ந்தேதி ஸ்ரீவாரிமெட்டு அருகே அமைந்துள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது. சாக்ஷாத்கார வைபவ உற்சவத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி திருப்பாவாடை சேவை, 24-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை நடக்கும் ஆர்ஜித கல்யாணோற்சவம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
    • டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ரெயில்வே என்ஜினியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ரெயில் ஒன்று பெட்டா ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    7-வது பிளாட்பாரத்தின் முடிவில் லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஏலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் ரெயில் பெட்டி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் டீசல் நிரப்பப்பட்ட 10 டிரம்கள், பேட்டரிகள், மின் ஒயர்கள், தண்டவாள பராமரிப்பு பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் டீசல் டிரம்களில் தீப்பிடித்து எரியவில்லை. டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    அதிக வெப்பம் காரணமாக ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டு இருந்த ஒயர்கள் கருகி ஒன்றுடன் ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    திருமலை:

    சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக தங்கம் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த கார் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.79 கிலோ வெளிநாட்டு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கடத்திச் செல்ல வேறொரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 2.471 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டி.ஆர்.ஐ. அதிகாரிகள், தங்கம் கடத்திய 2 பேர் மற்றும் அதனை வாங்க வந்த ஒருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.

    சென்னையில் கடத்தல் தங்கம் எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.
    • காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    திருப்பதி:

    சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர்.

    ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.

    இதனை கண்டு திடுக்கிட்ட சுந்தரராஜ் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சரி செய்ய முயன்றார்.

    காரில் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுந்தரராஜ் அசம்பாவித சம்பவம் நடக்கப் போவதாக எண்ணினார். தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.

    அவரது குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி ஓடினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே திடீரென காரில் பெரிய அளவில் தீ பரவியது.

    அவர்கள் கண்முன்னே கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

    காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    சுந்தர்ராஜ் தனது குடும்பத்தினரை முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து உடனடியாக வெளியேற கூறியதால் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவத்தால் நகரி சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • கடந்த மாதம் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் கோவில் மீது பறந்தது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது ஆகம விதிப்படி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் கோவில் மீது பறந்தது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர்.

    இந்த நிலையில் நேற்று அடுத்தடுத்து 3 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து சென்றன. இந்த சம்பவம் மீண்டும் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையில் வேன் ஒன்று சென்றது.

    அப்போது பஸ்சிற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் வேனை வலது பக்கமாக திருப்பினார்.

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று 70,160 பேர் தரிசனம் செய்தனர். 38,076 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.67 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
    • இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.

    அமராவதி:

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

    இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்தார். அப்போது சிஎஸ்கே வென்ற ஐ.பி.எல். கோப்பையை காண்பித்து மகிழ்ந்தார். ஐ.பி.எல். 2023 போட்டியில் வெற்றி பெற்றதற்காக சிஎஸ்கே அணிக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, ஆந்திராவில் விளையாட்டு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்லேன் என அம்பதி ராயுடு முதல் மந்திரியிடம் தெரிவித்தார், அதற்கேற்ப திட்டம் வகுக்கப்படும் என முதல் மந்திரி உறுதியளித்தார்.

    • இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் கூட்டம் அலை மோதியது.
    • விடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதியில் நேற்று 75,229 பேர் தரிசனம் செய்தனர். 35 618 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் கூட்டம் அலை மோதியது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் தர்மாவூரை சேர்ந்தவர் சோமசேகர். இவர் நேற்று முன்தினம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.

    திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வகுல விராந்தி தங்கும் விடுதியில் 102-வது அறையை வாடகைக்கு எடுத்து தங்கினர். விடுதியில் தங்கி இருந்தபோது குளிக்கச் சென்ற சோமசேகரின் மனைவி தான் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை கழற்றி வைத்துவிட்டு மீண்டும் எடுத்துச் செல்ல மறந்து விட்டார்.

    நேற்று காலை சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து விடுதிக்கு வந்த சோமசேகரின் குடும்பத்தினர் அவசர அவசரமாக விடுதியை காலி செய்து விட்டு சென்றனர்.

    விடுதி அறையை சுத்தம் செய்ய வந்த தேவஸ்தான ஊழியர்கள் குளியல் அறையில் இருந்த 7 பவுன் செயினை மீட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கழுத்தில் அணிந்து இருந்த செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சோமசேகரின் மனைவி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

    சோம சேகர் இது குறித்து தேவஸ்தான அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

    அப்போது காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை சோமசேகர் தெரிவித்தார். பின்னர் விடுதியில் தவறவிட்ட நகையை தேவஸ்தான அதிகாரிகள் சோமசேகரிடம் ஒப்படைத்தனர்.

    தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த தேவஸ்தான ஊழியர்களுக்கு பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை.
    • கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புங்கனூர் அடுத்த ராஜா நாலா பண்ட கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊருக்கே காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

    இந்த கோவிலில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்கள் வீடு திரும்பியவுடன் கடவுள் உரிய தண்டனை கொடுப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதே போல் ஏராளமானோர் பொய் சத்தியம் செய்து வீட்டிற்கு சென்றவுடன் இறந்தும், விபத்தில் படுகாயமடைந்து கை கால்களை இழந்தும் பல வழிகளில் இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.

    இதனால், கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை.

    இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி புங்கனூர் அடுத்த மேலு பைலு கிராமத்தை சேர்ந்த நாகய்யா என்பவரின் மகனான வெங்கடர மணா வீட்டில் இருந்த தங்க செயின், மோதிரம் மற்றும் நெக்லஸ் ஆகிய நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடரமணா கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டினர்.

    அதில், வீட்டில் ஒருவர் வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சத்தியம் செய்ய வர வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர், கிராமத்தில் உள்ள அனைவரும் வரும் 9-ந்தேதி சத்தியம் செய்ய வர வேண்டும் என உத்தரவு போடப்பட்டது.

    இந்த நிலையில், தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பல் வீர ஆஞ்ச நேயர் கோவிலில் பொய் சத்தியம் செய்தால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கருதியுள்ளனர்.

    நேற்று முன்தினம் வெங்கட ரமணா வீட்டின் மேல்மாடியில் திருட்டு நகைகளை வீசி விட்டு சென்றனர்.

    நகைகள் அனைத்தும் மாடியில் இருப்பதை கண்ட வெங்கடரமணாவின் குடும்பத்தினர் ஊர் பெரியோர்களிடம் நடந்ததை கூறினர்.

    கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது.
    • வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் கிடைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது. அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

    இதையடுத்து அந்த பகுதியில் வானில் இருந்து வைரக்கற்கள் விழுவதாக வதந்தி பரவியது. வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு இரவு பகலாக குடும்பத்தினருடன் வயல் வெளிகளில் காத்துகிடக்கின்றனர்.

    அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரக்கற்கள் கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வைரம் கிடைப்பதாக கூறப்படும் கிராமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • சுசீல்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சுசீல்கோஸ்வாமியை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கோச்சாரம் பகுதியை சேர்ந்தவர் சுசீல்கோஸ்வாமி. இவர் தனது நண்பர்களான தீரஜ் மண்டல், சுஜித்விஜய்கோஸ்வாமி, பாலா நிமிஷ்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்து உள்ளனர்.

    அப்போது சுசீலிடம், தீரஜ் மண்டல் கோழிக்கறி சமைத்து தரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அனைவரும் அன்று இரவு அதே வீட்டில் ஒன்றாக படுத்து தூங்கினர்.

    அப்போது சுசீல்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த தீரஜ் மண்டல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஐடி காரிடார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சுசீல்கோஸ்வாமியை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    • ரெட்டியம்மா ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
    • இளம்பெண் ஒருவர் ஒரு ஆணுடன் குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி கொத்த குண்டா, புளிச்சேர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவரது மனைவி ரெட்டியம்மா.

    திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். குழந்தை பிறந்து 5 நாட்கள் ஆனதால் நேற்று காலை ரெட்டியம்மாவை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்ப இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த 2 பேர் ரெட்டியம்மா அருகே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்தி சென்றனர். ரெட்டியம்மா அருகே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ரெட்டியம்மா ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அவர்கள் உடனடியாக திருப்பதி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தையை கடத்தி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருப்பதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணித்தனர்.

    அப்போது இளம்பெண் ஒருவர் ஒரு ஆணுடன் குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணையும், அவரது கணவரையும் அலிப்பிரி ரோட்டில் உள்ள விவேகானந்தா சர்க்கிளில் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரும் இது தன்னுடைய குழந்தை தான் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து குழந்தையை பறிகொடுத்த ரெட்டியம்மாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காண்பித்தபோது அது அவருடைய குழந்தை என தெரியவந்தது. அதனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருப்பதி அருகே உள்ள நாகலாபுரம் கிழக்கு அர்ஜுனவாடாவை சேர்ந்த லதா (வயது 24), அவரது கணவர் வெட்டி சுமன் என தெரியவந்தது.

    லதா கர்ப்பமாக இருந்து கரு கலைந்து விட்டதால் இனி குழந்தை பிறக்காது என்ற எண்ணத்தில் குழந்தையை கடத்திச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×