என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    21-ந் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும்.

    அதனை வைத்துக் கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    செப்டம்பர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70 ஆயிரத்து 896 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37,546 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பிரம்மோற்சவ விழா 28-ந் தேதி வரை விழா நடக்கிறது.
    • 25-ந் தேதி ரதோத்சவம் நடக்கிறது.

    நாராயணவனம் சம்பகவல்லி உடனுறை பராசரேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 28-ந் தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான 19-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்றமும், மாலையில் சந்திரபிரபை வாகனசேவையும் நடக்கிறது.

    தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சுவாமி, தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை வாகன சேவைகளில் சுவாமி தரிசனம் கொடுக்கிறார்.

    20-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந் தேதி ஹம்ச வாகனத்திலும், 22-ந் தேதி சேஷ வாகனத்திலும், 23-ந் தேதி நந்தி வாகனத்திலும், 24-ந் தேதி கஜ வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    25-ந் தேதி ரதோத்சவம் நடக்கிறது. 26-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி, தாயாருக்கு கல்யாண உற்சவமும், தொடர்ந்து அஸ்வ வாகனசேவையும் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடராஜசுவாமி உற்சவமும், மாலையில் ராவணேஸ்வர வாகனசேவையும் நடக்கிறது.

    28-ந் தேதி காலை 11 மணிக்கு திரிசூலஸ்நானமும், மாலையில் கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.

    பிரமோற்சவத்தையொட்டி 26-ந் தேதி நடைபெறும் ஆர்ஜித கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் (இருவர்) ரூ.500 செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கை, ஒரு லட்டு, ஒரு அப்பம், அன்னபிரசாதம் ஆகியவை வழங்கப்படும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
    • ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). மகள்கள் சந்திரகலா (33). எம்.பி.ஏ. பட்டதாரி. சவுஜன்யா (29). மாற்றுத்திறனாளி. மகள்கள் இருவருக்கும் திருமணமாகாததால் தனது பெற்றோருடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சூரிய நாராயணாவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படுத்த படுக்கையாக இருந்ததால் வீட்டிற்கு வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி சூரிய நாராயணா இறந்தார்.

    கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார். அந்த வழியாக சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் வீட்டில் உள்ள அறைகளில் தனித்தனியாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது விஜயலட்சுமி மற்றும் அவரது 2 மகள்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விஜயலட்சுமியின் அறையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. போலீசார் கடிதத்தை பறிமுதல் செய்தனர்.

    அதில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கணவர் இறந்து விட்டதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 2 மாதங்களில் அதிக விபத்துக்கள் நடந்தது.

    இதனால் நேற்று மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு வேண்டுதல் நடத்தினர்.

    திருப்பதியில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.

    மலைப்பாதையில் விபத்துகள் அதிகம் நடைபெறும் வளைவுகளில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் சிக்னல் அளிக்கும் வகையில் சாலை வளைவுகளில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

    கேமராக்கள் மூலம் அதிவேகமாக வாகன ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. நேற்று 78,487 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,213 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.

    நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளை தாண்டி ஒரு கிலோமீட்டர் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது.

    • ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் யானைகள் மீது லாரி மோதியது.
    • இந்த விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    சித்தூர் - பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.

    2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
    • பணம் மட்டுமின்றி பொருட்கள் உதவியும் எங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தது.

    திருப்பதி:

    லக்னோவைச் சேர்ந்த பெண் சமூக சேவகர் வர்ஷா (வயது 42). இவர் சிறுவயது முதலே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

    கொரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சு ஏற்பாடு செய்தார். பின்னர் ஆதரவற்றவர்கள் மற்றும் கொரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தார்.

    இவரது தலைமையில் 12 பேர் கொண்ட குழு உள்ளது. இந்த குழுவினர் கடந்த 3 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடலை தகனம் செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 200 பேர் உடல்கள் இவர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    வர்ஷாவின் சமூக சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவர் உலகின் மதிப்புமிக்க போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    கொரோனா பரவல் ஏற்பட்டபோது எனது நெருங்கிய நண்பர் இறந்து விட்டார். அவரது உடலை எடுத்துச் செல்வதற்காக உதவி கேட்டோம். ஆனால் நோய் பரவலுக்கு பயந்து ஆம்புலன்சு கொண்டுவர மறுத்தனர்.

    மேலும் சிலர் கொடுக்க முடியாத தொகையை கேட்டனர். இந்த சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாள் ஒரு ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து டிரைவரை அமர்த்தினேன்.

    அதில் இறந்தவர்களை ஏற்றிச்செல்ல இலவச வாகனம் என்ற எழுதியபடி எனது நண்பர் பலியான ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.

    கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    முதல் நாளில் 5 உடலை தகனம் செய்தோம். தொடக்கத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது. காரணம் கவச உடை அணிந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலிலும் உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டோம்.

    சில நாட்கள் அதிக அளவில் உடல்களை அடக்கம் செய்ய நேர்ந்ததால் சுடுகாட்டிலேயே இரவு நேரங்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.

    தொடக்கத்தில் எனது சொந்த பணத்தை பயன்படுத்தினேன். பிறகு உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் எங்களுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கினார். அதன் மூலம் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தோம்.

    பணம் மட்டுமின்றி பொருட்கள் உதவியும் எங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தது. அதன் மூலம் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறோம்.

    ஆரம்பத்தில் நான் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் நான் விளக்கி கூறியதும் எனது செயலை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
    • பக்தர்களின் தரிசன வரிசையை மாற்ற தர்மாரெட்டி முடிவு செய்தார்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது.

    பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கொடி மரத்தை தாண்டியதும் கோவிலுக்குள் நுழையும் வரிசையில், மகா துவார நுழைவு வாயில் ஆகிய இடங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தள்ளுமுள்ளுவில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

    தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையான் அருகே வரிசையில் செல்லும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய விடாமல் இழுத்து தள்ளினர்.

    இதுகுறித்து முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் மாதந்தோறும் டயல் யுவர் என்ற நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அதிக அளவில் புகார் தெரிவித்தனர்.

    பக்தர்களின் தரிசன வரிசையை மாற்ற தர்மாரெட்டி முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது.

    அதன்படி கோவிலுக்குள் செல்லும் பக்தர்களை மொத்தமாக அனுப்ப மறுத்தனர். கொடி மரம் அருகே ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வருகின்றனர். பக்தர்களிடையே தள்ளுமுள்ளு இல்லை.

    அதேபோல் தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை இழுத்து தள்ளும் நிலையும் மாற்றப்பட்டு உள்ளது.

    இதனால் சாதாரண பக்தர்கள் கூட பொறுமையாக தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4500 பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 75,227 பேர் தரிசனம் செய்தனர். 33,706 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பசுவை பரிசோதித்தபோது வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
    • ஒரு சில ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி குப்பையில் போடுகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்தியால் நகரப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சுற்றித் திரிகின்றன.

    அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து சாலையோரம் கொட்டப்படும் வாழை இலைகள், மீதமான உணவுகளை தின்று வருகின்றன.

    மேலும் தெருக்களில் சுற்றிவரும் பசுக்களை கோமாதாவாக எண்ணி வீட்டில் உள்ள பெண்கள் பசுகளுக்கு பழம், வீட்டில் மீதமான உணவுகள், அகத்திக்கீரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் 8 மாத சினை பசு ஒன்று நடக்க முடியாமல், சாணம் மற்றும் கோமியம் கழிக்க முடியாமல் அவதி அடைந்து வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வலியால் அவதிப்பட்ட சினை பசுவை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பசுவை பரிசோதித்தபோது வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கால்நடை டாக்டர்கள் சுதாகர் ரெட்டி அபிலாஷ் ரெட்டி ஆகியோர் பசுவிற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தனர். பசுவின் வயிற்றில் 60 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

    பசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை டாக்டர்கள் அகற்றினர்.

    மேலும் பசுவின் வயிற்றில் இருந்த கன்றுக்கு இயற்கையான உணவு கிடைக்காததால் இறந்து இருந்தது. தொடர்ந்து பசுவும் பலியானது.

    ஒரு சில ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி குப்பையில் போடுகின்றனர்.

    இவற்றை உண்ணும் கால்நடைகளில் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்து விடுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்க நேரிடுகிறது.

    எனவே பிளாஸ்டிக்கை அரசு முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    • நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். இவரது சகோதரிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்காக நெல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் சகோதரியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு துணையாக இளம்பெண் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்து கவனித்து வந்தார். நேற்று சகோதரிக்கு மருந்து வாங்கி வரும்படி தெரிவித்தனர்.

    மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இளம்பெண் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டார். அவர் நெல்லூர் காந்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது.

    இளம்பெண்ணை பின்தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

    அவர்கள் இளம்பெண்ணின் அருகில் சென்று வழி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது இளம்பெண் ஆட்டோவிற்கு அருகில் சென்று அவர்களிடம் பேசினார்.

    அந்த நேரத்தில் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இல்லை. திடீரென ஆட்டோவில் இருந்த கும்பல் இளம்பெண்ணை இழுத்து ஆட்டோவில் தூக்கி போட்டனர்.

    மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க கைகளால் வாயை பொத்திக்கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது. நெல்லூர் அடுத்த கோலக சாலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றனர்.

    அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெரிய புதர் பகுதி உள்ளது. அந்த பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்றனர். அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    மேலும் இளம்பெண்ணை அவர்களது நண்பர்களுக்கும் விருந்தாக்க முடிவு செய்தனர்.

    இளம்பெண்ணை கடத்தி வைத்திருப்பது குறித்து அவர்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அவரது நண்பர்கள் 5 பேர் காரில் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர்.

    இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி அழுதார்.

    சத்தம் கேட்டு அந்தப்பகுதி வழியாக சென்ற சிலர் அங்கு வந்தனர். அவர்களை 9 பேர் கொண்ட கும்பல் மிரட்டி விரட்டி அடித்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பிய பொதுமக்கள் இதுகுறித்து வேட்டையப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அதற்குள் இளம்பெண்ணை அங்கேயே போட்டுவிட்டு கும்பல் ஆட்டோ மற்றும் கார்களில் தப்பி சென்று விட்டனர். போலீசார் புதர் பகுதியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் ஆட்டோ மற்றும் கார்களின் பதிவு எண் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அன்ன பிரசாதம் தயார் செய்து கோவில்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்க வேண்டும்.
    • அன்ன பிரசாதம் திருடப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஸ்ரீ வராஹ சாமி, பேடி ஆஞ்சநேயர் சாமி, அலிபிரி நடைபாதையில் நரசிம்ம சாமி, ஆகாச கங்கா பாலம் அருகே ஆஞ்சநேயர் சாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய்வேத்தியம் செய்வதற்காக அன்ன பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதனை வாகனங்கள் மூலம் அனுப்புகின்றனர்.

    அன்ன பிரசாதம் தயார் செய்து கோவில்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்க வேண்டும்.

    ஆனால் சில வாரங்களாக அன்னபிரசாதம் தயார் செய்யும் பணியில் உள்ள ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக அன்னப்பிரசாதங்களை கோவில்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேவஸ்தான அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    விசாரணையில் அன்ன பிரசாதங்களை ஊழியர்கள் திருடி வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். இதில் ஈடுபடுவது யார் என்பதை அறிய ரகசியமாக கண்காணித்தனர்.

    அலிபிரியில் உள்ள நரசிம்ம சாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட அன்ன பிரசாத வாகனத்தை விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அன்னபிரசாதம் கொண்டு சென்ற பாத்திரத்தில் மேலிருந்த துணி அகற்றப்பட்டு இருந்தது.

    மேலும் அன்ன பிரசாதம் திருடப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் அன்னபிரசாதம் கொண்டு சென்ற ஊழியரை கைது செய்தனர்.

    எத்தனை நாட்களாக அன்னப்பிரசாதங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறைகேட்டில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 29-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை மற்றும் உற்சவங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகிற தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதம் (பவித்ரம்) பாதிக்கப்படாமலும் இருக்க வேவேண்டி சாஸ்திர முறைப்படி ஆண்டுக்கொரு முறை பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதற்காக 29-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    முதல் நாளான வருகிற 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலச பூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 2-வது நாளான ஜூலை மாதம் 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ர சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 3-வது நாளான ஜூலை மாதம் 2-ந்தேதி காலை மகாபூர்ணாஹுதி, கலசோற்வாசனம், பவித்ர சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது.

    • அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
    • கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, படமடா ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உள்ளார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக லட்சுமணன் இரவு நேரங்களில் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார்.

    லட்சுமணனும் அவரது நண்பரும் நேற்று பைக் டாக்ஸியில் பானு நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். சீனிவாச ராவ் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் சீனிவாச ராவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் வந்த வாலிபர்கள் சிலர் காரில் ஒட்டப்பட்டு இருந்த எம்.எல்.சி. ஸ்டிக்கரை கிழித்து எடுத்துச் சென்றனர்.

    கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    காரை ஓட்டி வந்தவர் அவரது உறவினர் ஜமீல். அவர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் காரில் 2 மது பாட்டில்கள் இருந்தன.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது எம்எல்சி யின் கார் இல்லை. ஜமீலின் சகோதரி ஷேக் நாகினாவின் கார் என தெரிவித்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.

    ×