search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி தீயில் எரிந்து நாசம்
    X

    ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்த காட்சி.

    ஆந்திராவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி தீயில் எரிந்து நாசம்

    • தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
    • டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ரெயில்வே என்ஜினியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ரெயில் ஒன்று பெட்டா ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    7-வது பிளாட்பாரத்தின் முடிவில் லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஏலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் ரெயில் பெட்டி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் டீசல் நிரப்பப்பட்ட 10 டிரம்கள், பேட்டரிகள், மின் ஒயர்கள், தண்டவாள பராமரிப்பு பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் டீசல் டிரம்களில் தீப்பிடித்து எரியவில்லை. டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    அதிக வெப்பம் காரணமாக ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டு இருந்த ஒயர்கள் கருகி ஒன்றுடன் ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×