என் மலர்
பொது மருத்துவம்
- மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன.
- அதிக எண்ணெய் சத்துள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது மைதா.
பென்சாயில் பெராக்ஸைடு' என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். 'அலாக்ஸான்' என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் 'அலாக்ஸான்' கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.
மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.
பரோட்டா மட்டுமல்லாமல் அதற்கு ஊற்றப்படும் குழம்பில் அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.எனவே கவனம் அவசியம்.

கேக், நாண், பிஸ்கட், ரொட்டி வகைகள், சிற்றுண்டிகள், பிரதான உணவுகள்... என அனைத்திலும் இன்றைக்கு மைதாவின் ஆதிக்கம் இருக்கிறது. `கோதுமையில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வியாபார கட்டாயத்தினால் மங்கிய நிறத்தை வெண்மையாக்க ரசாயனத் தாக்குதலால் 'பிளீச்' செய்யப்பட்டு, இறுதியில் வெண்மையாக வெள்ளந்தியாகக் காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம்' என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்'. பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு
இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது. இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது.
கொழுப்பு படிதல்
மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
செரிமானப் பிரச்சனைகள்
புரோட்டா பொதுவாக மைதா எனப்படும் வெள்ளை மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. மைதாவில் நார்ச்சத்து குறைவு. இதனால், அதிகம் புரோட்டா சாப்பிட்டால் மலச்சிக்கல், வயிற்றுப்பூச்சம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். புரோட்டாவில் எண்ணெய் அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் சத்துள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
இதய நோய்கள்
புரோட்டாவில் கெட்ட கொழுப்பு (saturated fat) அதிகம் இருக்கும். அதிக கெட்ட கொழுப்பு ரத்தத்தில் LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும். இது இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். புரோட்டாவில் சர்க்கரை சேர்க்கப்படலாம். அதிக சர்க்கரை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கு ஒரு ஆபத்து காரணியாகும்.

உடல் பருமன்:
புரோட்டா கலோரிகள் நிறைந்த உணவு. அதிக கலோரிகள் உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடல் பருமன் இதய நோய்கள், சர்க்கரை நோய், கீல்வாதம் போன்ற பிற நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
பிற பிரச்சனைகள்
சிலருக்கு, புரோட்டாவில் உள்ள கிளூட்டன் என்பதால் அலர்ஜி இருக்கலாம். கிளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, புரோட்டா சாப்பிட்டால் வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட புரோட்டா உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது.
- நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.
மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகளில் மட்டுமே நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட எந்திரங்களின் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது. மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோலில் கூட துணை பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும். மேலும் மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன. தொழிற் காரணங்களை தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

உயிரைப் பறிப்பது எப்படி?
கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.
மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். தொழிற்துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மெத்தனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய விஷமாகும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் நியூரான்களில் கலக்கும் போது உயிரிழப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும், இவை மூளையின் செல்களை அழிப்பதால் மெத்தனாலை உட்கொள்ளும் போது நிரந்தரமாக கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் குறிப்பிட்ட தர நிா்ணயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அதில் மெத்தனால் இருக்காது.
ஆனால், சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் தயாரிக்கும்போது நொதி நிலையில் மெத்தனால் உருவாகக்கூடும். பொதுவாக ஒருவா் அருந்தும் சாராயத்தின் அளவில் 10 மில்லி லிட்டர் மெத்தனால் இருந்தாலே பாா்வை பறிபோய்விடும். அதுவே 40 மில்லி லிட்டருக்கு மேல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தினால் 12-ல் இருந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே அதன் விளைவுகள் வீரியமடையும்.

வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், காது கேளாமை, பாா்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். மனித உடலில் மெத்தனால் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது 'பாா்மால்டிஹைட்' என்ற நச்சு பொருளாக மாற்றமடையும். அதன் பின்னா் அது 'பாமிக்' அமிலாக மாறும்.
இந்த வகையான அமிலம்தான் 'பாா்மாலின்' எனப்படும் திரவமாக மாற்றப்பட்டு இறந்தவா்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறாக மெத்தனால் 'பாமிக்' அமிலாக மாறிவிட்டால் உடனடியாக நரம்பு மண்டலத்தைப் பாதித்து பாா்வை இழப்பு ஏற்படும்.
அதன் தொடா்ச்சியாக, கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும். பின்னா் மற்ற உறுப்புகளின் இயக்கமும் முடங்கக்கூடும்.
இத்தகைய நிலையை எட்டுவதற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் உயிரைக் காப்பாற்றி விடலாம். ஆனாலும், எதிா்விளைவுகளாக பாா்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் ஆகியவை வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருக்கும்.
எனவே மெத்தனால் கலந்த சாராயம் குடித்தவர்கள் வாழ்நாள் முழுக்க நோயுடன் போராடும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
- UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.
- அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சிறுநீர் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தும். வயிற்றில் அல்லது உடலில் பல பிரச்னைகள் இருக்கும்போது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை சரியாக கவனிக்காததால், பலர், குறிப்பாக பெண்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில், தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்த பிறகும், UTI வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவுகிறது.

சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்
சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம். இது உங்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதனுடன், சிறுநீரில் ரத்தப் பிரச்சனையும் அதிகரிக்கிறது.
எனவே, இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சிறுநீர் தொற்று மிகவும் சங்கடமாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப்படாவிட்டால், அது வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும். சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிப்பதில் நீர் மிகவும் முக்கியமானது. எனவே UTI ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றவும் மற்றும் UTI களை தடுக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று
UTI -ன் மிகவும் பொதுவான காரணம் பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவால் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க, நீங்கள் சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அல்லது அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியம்.
- ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும்.
- பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
45 நாட்கள் கர்ப்பம் இருக்கும் போது போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கருசிதைவு ஏற்படாமல் தடுக்கும். ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும். அவை நீரில் கரையக்கூடியவை ஆகும்.
அதிக அளவு பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு பெரும்பாலும் ஃபோலிக்-அமில மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

திருமணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை என்றாலும் கருத்தரிப்பதற்கு முன்பில் இருந்து ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த மருந்து உடலில் ரத்த அணுக்கள் சரியாக முதிர்ச்சியடையத் தவறிவிடுகின்ற (மெகாலோபிளாஸ்டிக் அனீமியா) என்கிற ஒரு குறிப்பிட்ட வகை ரத்த சோகையைத் தடுப்பதற்கும் மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உடல் குறைபாடுள்ள நிலையில் சோர்வினை போக்குவதற்கு ஃபோலிக் அமில மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. வாய்ப்புண், நோயால் ஏற்படும் வெளிறிய தோற்றம், தொடர்ச்சியான பலவீனம் மற்றும் சோம்பல் ஆகியவற்றை குறைக்க ஃபோலிக் அமில மாத்திரை பயன்படுகிறது.

கவனிக்க வேண்டியவை:
ஆரோக்கியமான உணவு: கர்ப்ப கால பழங்கள் மற்றும் கர்ப்ப கால காய்கறிகளை தினமும் உணவுகளில் எடுத்துகொள்ளுங்கள். அவை கொஞ்சம் உங்களுக்கு மன உறுதியைத் தருவதோடு மட்டுமில்லாமல், உங்கள் சுவை மொட்டுகளையும் உங்களுள் இருக்கும் குழந்தையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.
தவிர்க்க வேண்டியவை:
கர்ப்ப காலத்தில், சில உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உணவுகளை நன்கு சமைப்பது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் உண்மையில் நன்றாக இருக்கும். மிக குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
UTI அறிகுறிகளைக் கவனியுங்கள்
சிறுநீர் கழிப்பதில் வலி ஏற்பட்டாலோ அல்லது நீங்கள் கழிவறை சென்றும் சிறுநீர் வரவில்லை என்றால், உங்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருக்கலாம். எனவே அப்படி இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சரிபார்க்கவும்.
உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருந்தால், உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கலாம். கர்ப்பத்தின் ஆறாவது வாரத்திற்குப் பிறகு, இந்த வகை தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது.
எனவே கர்ப்பம் உறுதி செய்தவுடன் அதற்கான உணவுமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வரப்போகும் குழந்தைக்கான ஆரோக்கியமான வாழ்க்கையினை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
- அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.
- குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும்.
பெண்கள் பெரும்பாலும் 45 நாட்கள் கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பல குழப்பத்தில் இருப்பார்கள். 45 நாட்கள் கர்ப்பம் என்பது 6 வாரங்கள் அதாவது இரண்டு மாதம் ஆகும்.
45 நாட்களில் உங்கள் குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும். அதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.
கண்கள் மற்றும் நாசிகள் போன்றவை சிறிதாக உருவாக தொடங்கும். அவர்களின் சிறிய வாய்க்குள், நாக்கு மற்றும் குரல் நாண்கள் உருவாகத் தொடங்கி இருக்கும்.
கைகள் மற்றும் கால்கள் சிறிய துடுப்புகளாக வளரத் தொடங்கி, அவை நீண்டு, மூட்டுகளாக வளரும். முதுகெலும்பு ஒரு சிறிய வால் போன்று நீண்டு இருக்கும். அது சில வாரங்களில் மறைந்துவிடும்.

அறிகுறிகள்
* காலை நோய் என்பது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படும் குமட்டல் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 5 அல்லது 6 வது வாரத்தில் தொடங்கி முதல் மூன்று மாதங்களின் முடிவில் குறையலாம்.
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் அதிக ரத்தம் பாய்வதால் உங்கள் சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை சமாளிக்க வேண்டிய நிலை வருகிறது.
* கர்ப்பகால ஹார்மோன்களும் இதில் பங்கு வகிக்கின்றன. நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமற்றதாக இருந்தால், உங்கள் உடலில் நன்கு நீரேற்றமாக இருக்கும்.
* பல கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 10 வாரங்களில் தங்கள் மனநிலை மாற்றம் அதிகரிக்கிறது. ஒரு தாயாக மாறும் உணர்வினை அவர்கள் அதிகம் உணர்வார்கள். சில நேரங்களில் எதையாவது நினைத்து திடீரென்று மனம் நோகும் நிலையில் இருப்பார்கள்.
* கர்ப்பிணிகளை அவர்களது துணை கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் மேலும் மனச்சோர்வடைந்திருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் அவர் உங்களுக்கு தேவையான விஷயங்களை பரிந்துரைப்பார்.
* மார்பக மென்மை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். அதிகரித்த ஹார்மோன் அளவுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, இது உங்கள் மார்பகங்களில் வீக்கம், வலி, கூச்சம் அல்லது தொடுவதற்கு வழக்கத்திற்கு மாறாக மென்மையாக்கும்.
* பல பெண்களுக்கு, சோர்வு கர்ப்பத்தின் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும். ஆரம்பகால கர்ப்பத்தில் சோர்வு ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இது புரோஜெஸ்ட்டிரோனின் வியத்தகு அதிகரிப்பு போன்ற ஹார்மோன் மாற்றங்களால் இந்த சோர்வு இருக்கலாம்.
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு உங்கள் வாயில் ஒரு உலோக சுவையை ஏற்படுத்தும். 1 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது, புளிப்பு அல்லது அமில உணவுகளை உண்பது அல்லது புதினா பசையை மெல்லுவதன் மூலம் இந்த சுவை உணர்வை கட்டுப்படுத்தலாம்.
குறிப்பாக கர்ப்ப காலத்தில் தலைவலி பொதுவானது. கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதத்தை அடைந்தவுடன் தலைவலி குறையலாம். யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் இந்த தலைவலியினை குறைக்கலாம்.
- தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
- மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
வாதநீர் பிரச்சினை இல்லாமல், எப்போதும் உடல் வலி, சோர்வு இருந்தால் அது தசை வாதம் எனப்படும் பைப்ரோமயால்ஜியா நோயாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, உடல் வலி, தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
காரணங்கள்:
1. மூளை மற்றும் முள்ளந்தண்டுவடத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வலி மற்றும் வலியற்ற சமிக்ஞைகளை மிகைப்படுத்தலாம்.
2. மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
3. நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் பிரச்சினையை தூண்டும் அல்லது மோசமாக்கும்.
4. சில நேரங்களில் காயங்கள், விபத்து போன்ற உடல்ரீதியான நிகழ்வுகளால் தூண்டப்படலாம். நீடித்த உளவியல் அழுத்தமும் இந்த நிலையைத் தூண்டலாம்.

சித்த மருத்துவ தீர்வுகள்:
சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மில்லிகிராம், சிவனார் அமிர்தம் 200 மில்லிகிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் இவைகளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
2) அமுக்கரா லேகியம் 5 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.
3) வலியுள்ள இடத்தில் சிவப்பு குங்கிலிய தைலம், கற்பூராதி தைலம் கலந்து மெதுவாக தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
4) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, பாதாம், பிஸ்தா, முருங்கை கீரை, பாலக் கீரை, வால்நட் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
5) உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும், மனச்சோர்வு நீங்க இறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- சரியாக சுத்தம் செய்யாவிட்டால் கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
- வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
ஹேலிடோஸிஸ்' என்று மருத்துவ மொழியில் சொல்லப்படும் வாய் துர்நாற்றம், வாய் ஆரோக்கியம், பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் தான் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது தான், இந்த பிரச்சினைக்கான சிகிச்சையின் ஆரம்பமாகும்.

காரணங்கள்:
1) வெங்காயம், பூண்டு போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டவுடன், அவை ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கின்றன. இந்த உணவுப் பொருட்கள் வயிற்றில் இருக்கின்ற காலம் வரை, இந்த உணவுகளின் நாற்றம் சுவாசம் வழியாக வந்து கொண்டேதான் இருக்கும்.
2) வாய் மற்றும் பற்கள் பராமரிப்பு இல்லாமை, சாப்பிட்ட பின்னர் பல் துலக்காமல், வாயை கொப்பளிக்காமல் இருப்பது, அவ்வப்பொழுது பல் டாக்டரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவைகளும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
3) செயற்கை பல் செட் மாட்டி இருப்பவர்கள் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் கிருமிகள் சேர்ந்து கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
4) வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேருவது, ஈறுகளில் சீழ்பிடித்து, வீங்கி நோய் ஏற்பட்டால், வாய் நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
5) வாய் உலர்ந்து போதல், இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும். மூக்கின் வழியாக சுவாசிக்காமல், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வாய் வழியாக சுவாசிப்பது இவைகளினால் ஏற்படலாம்.
6) சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். நெஞ்சில், மூக்கில், சுவாசக்குழாயில் நாள்பட்ட சளி, சைனஸ் நோய் இருப்பவர்களுக்கும், ஜீரண மண்டல பிரச்சினை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

சிகிச்சை என்ன?
பற்கள், வாய், ஈறு, பற்காறை, பல்லில் கறை முதலிய பிரச்சினைகளினால் வாய் நாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
சாப்பிட்ட பிறகு பற்களை துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது, நாக்கை சுத்தம் செய்வது நல்லது. தினமும் இருமுறை பல் துலக்கினால் கெட்ட பாக்டீரியாக்கள் சேர வாய்ப்பு இருக்காது. பல்செட் போட்டிருப்பவர்கள், அதை கழற்றி நன்றாகக் கழுவிய பின்னர் மறுபடியும் உபயோகியுங்கள்.
சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறமாதிரி உள்ள புளிப்பு உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட், ஆப்பிள் போன்றவைகளை கடித்து, மென்று சாப்பிடுங்கள்.
தினமும் சிறிதளவு பச்சை புதினாக் கீரை, பச்சை கொத்தமல்லி தழை, மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குறையும்.

நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிதளவு கிராம்பு, சீரகம், ஏலக்காய் இவைகளில் ஏதாவது ஒன்றினை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கலாம்.
மேலும் வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.
- புழுங்கல் அரிசி சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை உடனடியாக ஏறாது.
- சாப்பிட்டவுடன் ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசி தயாரிக்க நெல்லை வேக வைக்கும் போது உமியில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், பினோலிக் ஆசிட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக விளங்குகிறது.
கீழ்கண்ட காரணங்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது என்று கருதப்படுகிறது.

1) புழுங்கல் அரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 60, பச்சரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 72. இதனால், புழுங்கல் அரிசி சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை உடனடியாக ஏறாது.
2) பச்சரிசியை ஒப்பிடும் போது புழுங்கல் அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி1, பி3, பி6, பி9 ஆகியவை அதிகமாக இருப்பதாலும் பச்சரிசியை விட சர்க்கரை நோயாளிகளுக்கு புழுங்கல் அரிசியே அதிக நன்மைகளை தரும்.
3) புழுங்கல் அரிசி பெருங்குடலில் ப்ரீபயாடிக்ஸ் மற்றும் பியூட்டைரேட் அளவை அதிகப்படுத்தி பெருங்குடலில் உள்ள செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.
4) புழுங்கல் அரிசியை வேக வைக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறி செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டவுடன் ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
5) புழுங்கல் அரிசி சமைக்கும் போது உண்டாகும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ப்ரீபயாடிக்ஸ் (நன்மை தரும் பாக்டீரியா) உருவாவதற்கும் துணை புரிகிறது.
மேற்கூறிய காரணங்களால் சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி உட்கொள்வதே நல்லது.
- நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான்.
- நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும்.
நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். நம் பாட்டி காலத்தில் வீடுகளில் மூலிகை செடிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் நாம் அழகு சார்ந்த செடிகளையே தற்போது வளர்க்கிறோம். முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே மூலிகை செடிகளை வைத்து கசாயம் வைத்தோ அல்லது பத்து போட்டோ சரிசெய்து விடுவார்கள்.
ஆனால் விஞ்ஞானம் வளர வளர அனைவரும் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்ற தொடங்கிவிட்டோம். இப்போதும் ஒரு சில மூலிகைகளை வைத்து நமது வீடுகளிலேயே சளி, இருமல், காய்ச்சல், அடிப்பட்ட காயங்களுக்கு மருந்து என நாமே சில விஷயங்களை செய்யலாம். அப்படி எந்த மூலிகை செடிகள் நமது வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம் வாங்க...

நொச்சி
நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.
ஆடாதொடை: பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
தூதுவளை
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
கற்பூரவல்லி
கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அருகம்புல்
அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
நிலவேம்பு
நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.
நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.

சோற்றுக் கற்றாழை
கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.
மஞ்சள் கரிசாலாங்கண்ணி
இது தலை முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
துளசி
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
- சியா விதைகளில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.
- பழங்களையும் பாலையும் கலந்து ஸ்மூதி செய்யும்போது அதில் சிறிதளவு சியா விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சியா விதைகள் பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். அவை கறுப்பு, வெள்ளை, பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். சியா விதைகளைத் தண்ணீரில் ஊற வைக்கும்போது களிமம் அதன் மேல் உருவாகும். சியா விதைகள் பல்வேறு நன்மைகள் கொண்டவை.
பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் வகைகள், கொட்டைகள், விதைகள் போன்ற உணவு வகைகளில் அதிகம் இருக்கும். சியா விதைகளிலும் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. மூளைச் செயல்பாடு, இருதய நலம் ஆகியவற்றுக்கு சியா விதைகள் மிகவும் நல்லது.

நம் உடலில் இருக்கும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க சியா விதைகளை உட்கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள உணவு வகைகளைச் சாப்பிடும்போது புற்றுநோய், இதய நோய், 'டைப் 2' நீரிழிவு, செரிமானக் கோளாறு போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
சியா விதைகளில் அதிகளவில்புரதச்சத்து உள்ளது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று சியா விதை.
இதற்கிடையே சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய வழிகளும் உண்டு.
இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை அரை கப் பாலில் சேர்த்து அதை ஒரு ஜாடியில் நன்றாக மூட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து ஜாடியை நன்றாகக் குலுக்கி அதைக் குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்து விட்டு சாப்பிட்டு வரலாம்.
40 கிராம் சியா விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதை 30 நிமிடத்திற்கு ஊற வைத்துக் குடிக்கலாம்.
பழங்களையும் பாலையும் கலந்து ஸ்மூதி செய்யும்போது அதில் சிறிதளவு சியா விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக கேக் வகைகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சிறிதளவு சியா விதைகளைச் சேர்த்துக்கொண்டால் கேக்கில் இருக்கும் நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 அளவு ஆகியவை அதிகரிக்கும்.
பொதுவாக பழ ஊறல் செய்யும் போது அதில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படும். அதற்குப் பதிலாக சியா விதைகளை சேர்த்து சர்க்கரைக்குப் பதிலாக தேனைச் சேர்க்கலாம்.
முட்டை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்குப் பதிலாக சியா விதைகளைச் சாப்பிடலாம். 15 கிராம் சியா விதைகளை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது ஒரு முட்டைக்குச் சமம்.
இருப்பினும், சியா விதைகளை உட்கொள்ளும் ஒருசிலருக்குச் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதும் உண்டு. அதனால், சிறிதளவு சியா விதைகளை உட்கொண்டு, பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதை முதலில் பார்ப்பது சிறப்பு.
- 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
- ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது.
விபத்தின்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ, வேறு ஏதேனும் வகையில் ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்படும்போது அவரது உயிரை காக்கவும், இழந்த ரத்தத்தை ஈடு செய்யவும் பிறரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படுகிறது. உயிரை காக்கும் அருங்கொடையான ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய நாளில் மட்டும் ரத்த தானம் செய்வதற்கு ஆர்வம் காட்டாமல், ஆரோக்கியமான மனிதர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் 470 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை தானமாக வழங்கலாம். ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது. ஏராளமான நன்மைகளைத்தான் வழங்கும். அவற்றுள் சில...

1. மாரடைப்பை தடுக்கும்
உடலில் இரும்புச்சத்து அதிகமாக குவிந்து விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவது உடலில் இரும்பு சத்தை குறைக்கவும், அதனை சீராக நிர்வகிக்கவும் உதவும். எனவே அடிக்கடி ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
உடலில் அதிக அளவு இரும்புச்சத்து புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். ரத்த தானம் செய்வது இரும்பு அளவை பராமரிக்க உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். அதிலும் அடிக்கடி ரத்த தானம் செய்வது கல்லீரல், வயிறு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தொண்டை புற்றுநோய் போன்ற முக்கியமான புற்றுநோய்களை நெருங்க விடாது.
3. கல்லீரலை காக்கும்
ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை நீக்குவதே கல்லீரலின் முக்கியமான செயல்பாடாகும். ஆனால் கல்லீரலில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரும்புச்சத்து அதிகம் இருந்தால் அதனால் திறம்பட செயல்பட முடியாது. மேலும் அதிகப்படியான இரும்புச்சத்து செல் சேதத்துக்கும் வழிவகுக்கும். அதனால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும். ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான இரும்பை அகற்றுவதோடு கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
4. உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதிலும் ரத்த தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது 450 மில்லி லிட்டர் ரத்த தானம் செய்வது உடலில் 650 கலோரிகளை எரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தினசரி உணவில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். மீண்டும் ரத்தம் உற்பத்தியாகுவதற்கும் வழிவகை செய்துவிடலாம்.
5. புதிய ரத்த அணு உற்பத்தி
ரத்த தானம் செய்வது புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ரத்த தானம் செய்ததும் 48 மணி நேரத்திற்குள் எலும்பு மஜ்ஜையின் உதவியுடன் உடல் அமைப்பு துரிதமாக செயல்படத் தொடங்கும். 30 முதல் 60 நாட்களுக்குள் ரத்த சிவப்பணுக்கள் மாற்றப்பட்டு புதிய ரத்த அணுக்கள் உருவாக தொடங்கிவிடும்.
- பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க பயன்படுகிறது.
- மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.
தமிழில் முள்ளுக்கீரை அல்லது முள்ளிக்கீரை என்று அழைக்கப்படும் 'அமராந்தஸ்' என்ற தாவரவியல் இனத்தை சேர்ந்த கீரை, முட்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும்.
சிவப்பு நிற நிமிர்ந்த தண்டுகள், சில சமயங்களில் ஏறுவரிசை, 30-150 செ.மீ. நீளத்தில் கிளைத்திருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருந்து நீள்வட்டம், ஈட்டி-நீள் சதுரம், வடிவில் இருக்கும். மென்மையான இலை தண்டு 1 முதல் 9 செ.மீ. பூக்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.
இந்த மூலிகை கீரையின் மருத்துவ குணங்கள் ஏராளம். சிறுநீர் நன்றாக வெளியேற உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முறிந்த எலும்பு சேர துணையாக இருக்கிறது. மலமிளக்கியாக செயல்படுவதுடன் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுகிறது.
வெப்பம் மற்றும் விஷத்தை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கை கட்டுப்படுத்துகிறது. சில நாடுகளில் பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க இந்த கீரையை பயன்படுத்துகின்றனர்.
சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் தோல் அழற்சிக்கான வெளிப்பூச்சு மருந்தாகவும் தீக்காய தீவிரத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
இது தவிர மூலம், குடல் அழற்சி, பித்தப்பை அழற்சி, சீரண மண்டல பாதிப்பை குறைக்க பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் பெருக்கத்தை தடுக்க உதவுவதுடன், மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.
புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இதை மெக்சிகோ போன்ற நாடுகளில் உணவுப் பயிராகவும், ஆஸ்திரேலியாவில் கீரைக்கு மாற்றாகவும், சீனாவில் காய்கறியாகவும் பயன்படுத்துகிறார்களாம்...!. ஆனால், தமிழ்நாட்டில் மழை பெய்தால் எங்கு பார்த்தாலும் முளைத்து கிடக்கும் இந்த முள்ளுக்கீரையை பற்றி தெரியாமல் பலரும் பயன்படுத்தாமல் தவற விட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.






