என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தோசை, இட்லி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் தொக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - ஒன்று
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

    கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும்.

    கலவையில் தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும்.

    சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக இருக்கும். அதன் வாசத்தின் தூரம் மிகவும் நீண்டதாக இருக்கும். பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை வரும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது.

    வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.



    * கடைக்கு வெளியே வாசனையை பரிசோதிக்க மறக்கவேண்டாம், கடையின் ஏசி மற்றும் வாசனையின் தன்மை இருக்காது. இது உண்மையான மணத்தை சொல்லிவிடும்.

    * கோடையில் கலப்படமற்ற வாசனை திரவியத்தை தேர்வு செய்வது அவசியம். அது நீண்ட நேரம் வியர்வையையும் தாண்டி நிற்கும்.

    * இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதினா அல்லது 'சிட்ரஸ்' நறுமணங்களை தேர்வு செய்யலாம். இது புத்துணர்ச்சியூட்டும்.. அதிக நறுமண தொனியை விரும்பினால், சாண்ட்லவுட் (சந்தனம்) போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

    * வெப்பத்தினால் தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு நம்மை மிகவும் எளிதில் ஆளாக்கிவிடும். எனவே பெர்பியூமின் உள்ளடக்கங்களை சருமத்திற்கு தீங்கு இல்லாதவையா என்று சரிபார்ப்பது முக்கியம்.

    * உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களா என்பதை உறுதிப்படுத்தவும். 
    பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் சில வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

    குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

    வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் அறிவியல் ரீதியான உண்மைகளைப் பக்குவமாக சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப்பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

    தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுறுத்துவது நல்லது.

    மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.

    ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

    குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாட்டைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.  
    டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - ஒரு கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்
    முளைகட்டியகொண்டைக்கடலை - கால் கப்
    முளைகட்டிய கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்
    முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3
    தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கேரட் துருவல் - கால் கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு அரிசியுடன், முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

    சத்தான மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாது பக்கவாட்டில் தான் படுக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ சில உண்மைகள்..!
    கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது

    * முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.

    * மல்லாந்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.



    * 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.

    * அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.

    * தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).

    அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

    கபாலபதி பிராணாயாமம் செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
    முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும்.

    இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    மூச்சை இழுத்து விடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இரத்தத்துக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைப்பதால் ரத்தம் சுத்தமாகிறது. செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

    கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும். மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.
    காலையில் எழுந்தவுடன் நீங்கள் கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் அந்த நாளை நல்லவிதமாக செலவிட வழிவகை செய்யும்.
    காலையில் எழுந்தவுடன் நீங்கள் கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் அந்த நாளை நல்லவிதமாக செலவிட வழிவகை செய்யும். நேர்மறையான எண்ணங்களையும், அமைதியான மன நிலையையும் ஏற்படுத்தி பரபரப்பான வாழ்க்கை சூழலை சமாளிக்கவும் உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்!

    இது ஸ்மார்ட்போன் யுகம். இரவில் தூங்க செல்லும்போதும், காலையில் கண் விழுத்த உடனேயும் செல்போனில் நேரத்தை செலவிடுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். காலையில் அலாரம் ஒலியின் சத்தம் கேட்டு சிரமப்பட்டு எழுபவர்கள் ஒரு மணி நேரமாவது செல்போனை ஒதுக்கி வைப்பது நல்லது. சமூக ஊடகங்களின் தாக்கம் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது என்றாலும் எழுந்ததும் காலை வேளையில் அதனை தவிர்ப்பது அமைதியான சூழலுக்கு வழிவகை செய்யும்.

    காலை எழுந்ததும் சில நிமிடங்களை உங்களுக்காக செலவிடுவது மன உறுதிக்கு பயனுள்ளதாக இருக்கும். மனதுக்குப்பிடித்தமான இசையை கேட்பது மனதை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும்.

    அலுவலகத்திற்கு செல்ல நேரமாகி விட்டதே என்று அவசர அவசரமாக குளிக்கக்கூடாது. குளிப்பதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதனை சரிவர பின்பற்ற வேண் டும். அது மனதை ரிலாக்‌ ஷாக வைத்துக்கொள்ள உதவும்.



    ஒவ்வொரு நாளும் என்னென்ன விஷயங்களை செய்யப்போகிறோம் என்பது பற்றி முன் கூட்டியே திட்டமிட்டு அட்டவணை தயாரித்து அதன்படி செயல்படுவது நல்லது. குறிப்பெடுத்து எழுதி, நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமானது. அது சுய விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும். உடல்நலம் மற்றும் மன நலத்திற்கும் நன்மை தரும்.

    உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகிய மூன்றுக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது உடல் நலத் துக்கும், மன நலத்துக்கும் இன்றியமை யாதது. மன அழுத்தத்திற்கு நடைப்பயிற்சி சிறந்த மருந்து இரவில் நன்றாக தூங்குவதற்கும் உதவி புரியும். காலை வேளையில் ஏதாவதொரு யோகாசனம் செய்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற் கும் பயனுள்ளதாக இருக்கும்.

    காலை வேளையில் தியானம் மேற்கொள்வதும் சிறப்பானது. தளர்வான நிலையில் உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானிப்பது தெளிவான மன நிலையை ஏற்படுத்தும்.

    காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போதே எந்த காரியத்தை முதலில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதனை முதலில் நிறைவேற்றிய பிறகே அடுத்த வேலைகளில் கவனம் பதிக்க வேண்டும். அவ்வாறு செய்வது மற்ற வேலைகள் காலதாமதம் ஆவதை தவிர்க்க உதவும்.

    காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை வேளையில் சத்தான உணவை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் வளர்சிதை மாற்றங்களை சீராக்கி உடல் நலம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு துணை புரியும். 
    உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.
    சம்பளம் வாங்கியவுடன் அந்த மாதத்திற்கான தேவைகள் மற்றும் செலவுகள் என்னென்ன என்று பட்டியலிட்டு அளவோடு வாங்கி வளமோடு வாழ்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பொருளின் பின்னே அலையும் பொருளற்ற வாழ்க்கையை தேடி போய்க் கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

    உயர் வர்க்கத்தினர் மட்டுமின்றி நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களும் போலி கவுரவத்திற்காக பொருட்களை வாங்கி விட்டு பின்பு பெருங்கடனில் சிக்கிக் கொண்டு நிம்மதியை தொலைக்கின்றனர். நுகர்வோரின் இந்த தீராப் பசிக்கு தீனி போடுவதற்காகவே நகரின் மைய பகுதிகளில் புதிதாக பல பேரங்காடிகள் முளைத்து பண்டத்தை மொய்க்கும் ஈக்களாய் மக்களை மாற்றி இருக்கின்றன. வார இறுதி நாட்களில் இவ்விடங்களுக்கு சென்று பொழுதுபோக்கிற்காக பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கும் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கும் கேடு விளைவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.

    இதில் என்ன தவறு இருக்கிறது? நன்றாக பொருளட்டுகிறோம், மகிழ்ச்சியாய் செலவு செய்கிறோம் என்பதே பெரும்பாலானோரின் வாதமாய் இருக்கிறது. ஆனால் இப்படி தேவைக்கு அதிகமாய் பொருட்களை வாங்கி குவிப்பது சிகிச்சை எடுக்க வேண்டிய அளவுக்கு பெரிய உளவியல் சிக்கல் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போதை பழக்கத்தை போன்றே அடிமையான பின்னர் மீள்வது கடினம் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

    இப்படி சமீப காலங்களில் அதிகரித்து விட்ட இந்த நுகர்வு கலாசாரத்திற்கு, மக்களை இலக்காகி குறிவைக்கும் வணிக நிறுவனங்களே காரணம். கடைகள், அங்காடிகள் மட்டுமின்றி ஆன்லைன் வர்த்தகத்தின் மீதான மோகமும் மக்களிடேயே அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாம் எதை பார்க்கிறோம், எதன் மீது ஆர்வம் காட்டுகிறோம், கூகுளில் எதை தேடுகிறோம் என்று ஒரு தனி நபர் பற்றிய அத்தனை, தகவல்களையும் அறிந்து அது தொடர்பான பொருட்களை அடிக்கடி கண்ணில் படும்படி கவர்ச்சியாக விளம்பரப்படுத்தி நம்மை வாங்க வைத்து விடுகின்றனர்.

    இந்த யுக்திகள் எதையும் அறியாமல் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததாய் எண்ணிக் கொண்டு நாமும் அறியாமையில் பொருள் வாங்குகிறோம். முன்பெல்லாம் வீட்டிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினால் அவை முற்றிலும் பழுதாகும் வரையில் உபயோகிப்பது வழக்கம். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களுடன் கூடிய நவீன கருவிகளை அடிக்கடி மாற்றுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏற்படும் பொருட்செலவை பற்றியோ நஷ்டத்தைப் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை.

    அதுவும் குறிப்பாக செல்போன் விஷயத்தில் இளைஞர்கள் அவ்வப்போது வெளியாகும் புது மாடல் போன் வைத்து கொள்வதே கவுரவம் என்று நினைக்கின்றனர். மாறி வரும் மக்களின் இந்த மனோபாவத்தை அறிந்த வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வாரி வழங்குகின்றன. அதை உபயோகித்து செலவு செய்யும் போது இருக்கும் மகிழ்ச்சி, மாதத் தவணை கழுத்தை நெரிக்கும் போது காணாமல் போய் விடுகிறது. தனியார் துறை ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது , பணவரத்து நின்று போகும் போது தாராளமாய் செலவு செய்து பழக்கப்பட்டவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    சேமிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.பணத்தை ஈட்டுதல் எவ்வளவு முக்கியமோ, பாதுகாப்பது அதனினும் இன்றியமையாதது. திடீரென ஏற்படும் மருத்துவ மற்றும் அவசரத் தேவைகளுக்கு அடுத்தவரை எதிர்பார்க்காமல் நாமே சமாளிக்கும் சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடுபட்டு சேர்த்த பணத்தை தேவையற்ற முறையில் விரயமாக்காமல் முதலீடும் காப்பீடும் செய்து வைத்து கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அனாவசியமாக செலவழிக்காமல் அத்தியாவசியமாக பொருள் வாங்குவதே புத்திசாலித்தனம்.

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அவதி நிச்சயம் என்பதே நிதர்சனமான உண்மை.

    எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
    “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. மீன் பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்ட அருமையாக இருக்கும். இன்று மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
    கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழச்சாறு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.

    இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.
    நம்முடைய முன்னோர்கள் காலத்தில் திருமணத்தில் பெண்கள் வயது குறைந்தவர்களாகவும் ஆண்கள் வயதில் பெரியவர்களாகவும் இருந்தார்கள். அதற்குப் பல்வேறு அறிவியல் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.

    பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் பெண்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாகவே இருந்தபோதிலும் அவர்களின் சிந்தனையை அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பதை தடுத்தார்கள். எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்றார்கள். அதனால் வயதிலும் தன்னைவிட பெண் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகத்தான் தங்களைவிட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற கருத்தொன்று உண்டு.  

    உடல்ரீதியாக பார்த்தால் ஆண்கள் அதிக காலம் இளமையாக இருப்பார்கள். பெண்கள் பிரசவத்திற்கு பிறகு இளமைப் பொலிவை சற்று இழக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் உடற்கட்டு குலையும். ஆகவே நிகரான ஜோடியாக திகழ மனைவி, கணவரைவிட வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்றார்கள். ‘பெண்கள் குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மையடையவேண்டும். ஆண்களுக்கு அப்படி எந்த வரம்பும் இல்லை. அதனால்தான் பெண்ணுக்கு, ஆணைவிட குறைந்த வயதிலே திருமணம் செய்துவைக்கப்படுகிறது’ என்ற கருத்தும் உண்டு.

    இப்படி சொல்லப்பட்ட காரணங்களை எல்லாம் இன்றைய சமூகம் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டது. இப்போது வயது ஒரு பொருட்டில்லை. தன்னை விட வயதில் மூத்த பெண்ணாக இருந்தாலும் விரும்பி மனம் ஒத்து திருமணம் செய்துகொண்டு ஆண்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

    காலம் மாறிவிட்டது. அதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன. காலத்திற்கேற்ப மனிதர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.

    மருத்துவ குணம் நிறைந்த துளசியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் தயாரித்து, சரும பிரச்சனைகள் நீங்கலாம் என தெரிந்து கொள்வோம்.
    ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள்.
     
    சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்டன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.


     
    சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
     
    துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.
    சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு, பச்சைப்பயறு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - ஒரு கப்,
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்,
    துருவிய வெல்லம் - அரை கப்,
    தேங்காய்த்துருவல் - அரை கப்,
    நெய் - ஒரு தேக்கரண்டி.



    செய்முறை:

    வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

    ஆறிய மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறி கொள்ளவும்.

    புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்ற வகையில் அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு - பச்சைப்பயறு புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×