என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள்.
    தமிழ்நாட்டில் பல சிறப்புகளைக் கொண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் முக்கியமான திருத்தலமாக விளங்குவது, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்.

    தல வரலாறு

    தொடக்க காலத்தில் சிவனைப்போல பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என்று பிரம்மன் ஆணவம் கொண்டார். இதையடுத்து அவருடைய ஒரு தலையை கிள்ளி எடுத்தார், ஈசன். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.

    ஈசன் கிள்ளிய பிரம்மனின் தலை, சிவபெருமானின் கையில் மண்டை ஓடாக மாறி ஒட்டிக்கொண்டது. அவர் ஒரு கையில் கபால திருவோடு, மற்றொரு கையில் சூலாயுதம் தாங்கியபடி, உடலெங்கும் சாம்பலை பூசிக்கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். அதன் ஒரு பகுதியாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் குடிகொண்டிருக்கும் இத்தலத்துக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். இதையடுத்து சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

    கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிக்க தேவர்கள் அனைவரும் தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்தனர். தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகை களாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர் என்பது கோவில் வரலாறு.

    இந்த ஆலயம் அமாவாசைக்கு பிரசித்தி பெற்றது. அந்த நாட்களில் ஆலயத்தில் குறி சொல்லப்படும். நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள். இதைக் கேட்பதற்காகவே இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    இந்தக் கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச் சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிப்பார். பின்னர் கற்பூரத்தை கொளுத்தி, அதை பேய் பிடித்தவர்களிடம் கொடுப்பார். அதை வாயில் போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் உடலும், மனதும் அமைதியாகிவிடும்.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் திருத்தலம் உள்ளது.
    7, 8, 9, 12-ந் தேதிகளில் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறை வழங்கக்கூடாது என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
    ராமேசுவரம் பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின், சுகாதார அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பாலன், நிஜாமுதீன் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் சங்க தலைவர் சந்திரன், பாலா, அயோத்தி உள்பட உறுப்பினர்களும், துறைமுக வீதி வர்த்தக சங்க தலைவர் ராஜாமணி, நாகேந்திரன் மற்றும் உறுப்பினர்களும், புரோகிதர்கள் சங்க பொறுப்பாளர்கள் ரமணி, கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராமேசுவரம் பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் தாசில்தார் மார்ட்டின் கூறுகையில், வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி மாலை வரை அக்னிதீர்த்த கடற்கரையில் எவ்வித தர்ப்பண பூஜையும் செய்யக்கூடாது. மேலும் 12-ந் தேதி ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்றைய தினமும் அக்னித்தீர்த்த கடற்கரையில் தர்ப்பண பூஜைக்கு அனுமதி கிடையாது.

    அதேபோல 7, 8, 9, 12-ந் தேதிகளில் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறை வழங்கக்கூடாது என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை மீறி லாட்ஜ்களில் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும்.

    சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொருட்கள் வழங்க வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அனைத்து சங்கத்தினரும் தெரிவித்தனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான களப பூஜை தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான களப பூஜை நேற்று முன்தினம் தொடங்கி. 13-ந் தேதி வரை நடக்கிறது. முதல்நாள் காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மடாதிபதி திருக்கைலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி முன்னிலையில் தங்க குடத்தினால் அம்மனுக்கு களபாபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்பு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

    மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபித்து வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும்.
    நாமத்ரய மந்திரமானது நாமத்ரய அஸ்த்ர மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இம்மந்திரம் எல்லா வகையான நோய்களையும் அஸ்திரமாக நின்று அழிக்கவல்லது. மகா விஷ்ணுவின் மூன்று திவ்ய நாமங்களை கொண்டதே இந்த நாமத்ரய மந்திர அஸ்திரம்.

    நாமத்ரய மகா மந்திரம்:- ஓம் அச்சுதாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் கோவிந்தாய நம:

    சர்வ ரோக நிவாரண மந்திரம் என்றும் இதனை கூறுவர். எத்தகைய  கொடிய நோயாக இருப்பினும் அதனை இத்திவ்ய நாமத்தை ஜெபிப்பத்தின் மூலம் சரி செய்துவிட முடியும் என்று வியாச மகரிஷி கூறியுள்ளார்.  

    இம் மந்திரத்தை ஜபம் செய்ய தனிப்பட்ட உபதேசங்களோ தீக்ஷைகளோ தேவையில்லை. முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபித்து வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும்.  இதனை சாதாரண ஜபமாகவோ அல்லது லிகித ஜபமாகவோ ( ஏட்டில் எழுதுவது) ஓர் நாளுக்கு குறைந்தபட்சமாக 108 முறை ஜபித்து வர வேண்டும்.

    ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம்.
    ஆடி-18-ஐ முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தவாறே காவிரி தாயாருக்கு நேற்று நம்பெருமாள் சீர் கொடுத்தார்.

    ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம். இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலையில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார்.

    அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை நடைபெறும். அப்போது பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ஆனால் இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் ஆடி-18-ம் நாளான நேற்று நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கிருந்தவாறே காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு மாலை 4 மணியளவில் அலங்காரம், அமுது கண்டருளினார்.

    பின்னர் நம்பெருமாள் அங்கிருந்தபடியே மாலை 4.45 மணிக்கு காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் அர்ச்சகர்கள் மங்கல பொருட்கள் அடங்கிய தட்டை தலையில் சுமந்தவாறு ராஜகோபும் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக அம்மாமண்டபம் வந்து காவிரி தாயாருக்கு சீர் கொடுத்தனர்.

    பின்னர் மாலை 5.45மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    இவைகள் பொதுவானவை ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
    நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோஷமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது. அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும்.

    * படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படிப்படியாக குறையும்.

    * அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

    * வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

    * ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.

    * சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் / குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

    * திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.

    * ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமை தோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.

    * நாகங்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன் — இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும்.

    * பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

    இவைகள் பொதுவானவை ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருவிழாக்கள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

    இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, 9.15 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு மேல் சாஸ்தா பிறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

    ஆடிக்கொடை விழாவில் நேற்று அபிஷேக அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு கும்பம் புறப்படுதல், கும்பம் உள்பிரகாரம் சுற்றி வருதல், தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மேல் கும்பம், தீச்சட்டி புறப்படுதல், உள்பிரகார பவனியைத் தொடர்ந்து படப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவிலுக்கு வெளியே தடுப்புகள் முன்பு நின்றவாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முளைப்பாரியை தீர்த்தத்தில் கரைத்தல், அலங்கார தீபாராதனை, கும்பம் புறப்பட்டு உள்பிரகாரம் சுற்றி வருதல், மஞ்சள் நீராடுதல், தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஆடிக்கொடை ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கலைவாணன் செய்திருந்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை :

    ஆடிப் பெருவிழாகளால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிவிட கூடாது என்ற காரணத்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீட்டிப்பு செய்து நேற்று இரவு திடீரென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய கோவில்களிலும் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோவிலில் வழக்கம்போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.
    கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள்கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் காளப்ப நாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர்.

    பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3 கிலோ மீட்டர். ஆனால் மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட சுமார் 3,700 படிகள் உள்ளன. மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத அமையா தீர்த்தம், அரிவாள் பாழி, பெரிய பாழி என மூன்று தீர்த்தங்கள் மட்டும் உள்ளன.

    மலை முடியும் இடத்துக்குப் பத்துப் படிகள் கீழே நமக்கு அருள்தரும் வண்ணம் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வணங்கிய பின்பு சில படிகள் ஏறினாலே இறைவனின் சந்நதி வந்துவிடும்.  பெருமாளின் சந்நதிக்கு எதிரே கொடிமரத்துக்கு அருகில் பெரிய திருவடி கருடாழ்வார் இறைவனைக் கைகூப்பித் தொழுதவராகக் காட்சிகொடுக்கிறார். கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். அவரை கண்குளிர தரிசித்து வழிபட நாம் படிகளேறி வந்த களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெறும் அதிசயம் நிகழும்.

    சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் உள்ள தூணில் நயன மகரிஷி தவம் செய்வதுபோன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. பெருமாளை தரிசித்து வெளியே வர அன்னையின் சந்நிதி வரவேற்கிறது. குவலயவல்லித் தாயார் கருணையே உருவான திருவுருவம் கொண்டு அந்தச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அதே போல தமிழ் மறை பாடிப் பெருமாளைச் சேவித்த ஆண்டாளுக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. சுவாமி சந்நிதியை அடுத்த மகாமண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சமேதராகவும், நவநீதகிருஷ்ணரும், ராதா, ருக்மணி சமேதராகக் காட்சி கொடுக்கும் ஶ்ரீ வேணுகோபாலரும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

    ஆலயத்துக்கு வெளியில் இருக்கும் கல்மண்டபமும் மிகப் பழைமையானது. மண்டபத்துத் தூண்களில் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குரு லிங்க சித்தர் போன்ற சித்த புருஷர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இன்றளவும் இங்குச் சித்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்து இறைவனைச் சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப வருடத்தில் உத்ராயண புண்யகாலமான தை முதலான ஆனி மாதம் வரையிலான ஆறுமாதமும் சூரியனின் ஒளி மூலவரின் முகத்தில் படுவதுபோல் கோவிலின் அமைப்பு அமைந்துள்ளது. இதைக் காணும் பக்தர்களுக்குச் சூரிய நாராயணர், வரதராஜப் பெருமானை தன் கிரணங்களால் ஸ்பரிசித்து வழிபடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல  இந்திரனும் இங்கு இடி ரூபமாக வந்து இறைவனை வழிபடுவதாகவும் ஐதீகம்.

    நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது என்றும், தெலுங்கு பேசும் நாயக்கர்கள் இந்தத் தலத்து இறைவனைத் தங்கள் தந்தையாகப் பாவித்த காரணத்தினால் நைனாமலை என்று பெயர் பெற்றதாகவும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. சர்வபாவங்களையும் நீக்கி நற்கதியும், நல்வாழ்வும் அருளும் திருத்தலங்களுள் ஒன்றுதான் நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில். பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வது உகந்தது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் அலுப்பின்றிப் படியேறி இறைவனை வழிபட்டுப் பயனடைகின்றனர்.
    ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடி வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா உயர தொடங்கியதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆடி கிருத்திகை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி, பேரூர் பட்டீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளிட்ட 4 முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றங்கரையோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடி வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வாயிலான நெல்லித்துறை அலங்கார வளைவு பக்தர்கள் செல்லாதவாறு மூடப்பட்டிருந்தது. இதேபோல கோவில் கிழக்கு வாசல், பின்புறம் உள்ள வாயில் மூடப்பட்டு இருந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நெல்லித்துறை அலங்கார வளைவு முன்புள்ள அம்மன் உருவம் முன்பு தேங்காய் உடைத்து அம்மனை வேண்டி வழிபட்டனர்.

    மேலும் பவானி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாததால் நெல்லித்துறை பாலத்தின் கீழ் 7 கற்களை எடுத்து வைத்து அவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்து வணங்கினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் கொடியேற்று விழாவிற்கு வருகை தந்தவர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
    108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப் படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

    இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடியேற்ற விழா களை இழந்தது.

    பட்டாசாரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம் தேதியும், கருட சேவை 9-ம் தேதியும் நடைபெறும்.

    முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.
    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதியும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் இன்று முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.

    இதன்மூலம் இந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். மேலும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ந் தேதி வரையும், வருகிற 10, 13-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

    மேற்கண்ட தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
    ×