search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்"

    • ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ரெங்கநாதருக்கு தயிர் சாதம், மாவடு, கீரை படைக்கப்பட்டது.

    ஜீயபுரம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-ம் நாளான நேற்று ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னொரு காலத்தில் ரெங்கநாதரின் பக்தையான மூதாட்டியின் பேரன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, பேரன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனால் மூதாட்டி ரெங்கநாதரை நோக்கி அழுதுள்ளார்.

    மூதாட்டியின் பக்தியால் மனம் உருகிய ரெங்கநாதர் பேரனாக தானே மூதாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் மூதாட்டியின் கையால் தயிர் சாதம், மாவடு வாங்கி சாப்பிட்டதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சி தேரோட்ட திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நடத்தி காண்பிக்கப்படும்.

    இதற்காக நேற்று அதிகாலையில் ரெங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜீயபுரம் சென்றார். அங்கு ரெங்கநாதருக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் வைத்து அமுது படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ரெங்கநாதர் பல்லக்கில் அமர்ந்து அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை, போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் நண்பகலில் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தின் அருகில் உள்ள புன்னாகம் தீர்த்த குளத்தின் அருகில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்தில் சர்க்கரை பொங்கல் இட்டு அமுது படைத்தனர்.

    பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு சொந்தமான ஆஸ்தான மண்டபத்தில் பாண்டியன்கொண்டை, அடுக்கு பதக்கம், நீலநாயகம், காசுமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார். இதில் ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் மாலையில் பல்லக்கில் அமர்ந்து காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.

    4-ம் நாளான இன்று (புதன்கிழமை) தங்க கருட வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 22-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.

    23-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 24-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார். 25-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள்.
    • திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், விமான பதக்கம், முத்துமாலை, பவள மாலை, காசு மாலை, ரத்தின அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்.
    • அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பின்தொடர பக்தர்கள் புடைசூழ ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    • பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.
    • ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள்.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவ தும் பல்வேறு திரு விழாக்கள் வெகு விமரிசையாக நடை பெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வை குண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து,இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்ட கம் நிகழ்ச்சியுடன் நேற்று (12-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங் கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

    இரவு 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

    இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (22-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்ச வத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத் தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

    29-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

    • ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது.
    • திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஸ்ரீரங்கம்:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா ஜனவரி 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. 22-ந்தேதி மோகினி அலங்காரமும், 23-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கைமன்னன்வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறகாவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

    புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதாசி திருவிழாவில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். இந்த ஆண்டு சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். பகல்பத்து மற்றும் ராப்பத்தின் போது திருச்சி மாநகர போலீசார் 380 பேர் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரைவீதி மற்றும் உத்திரவீதியில் நிறுத்த அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 கண்காணிப்பு கேமராக்கள்,

    கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 102 கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 14 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை 13-ந்தேதியிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
    • திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார்.

    காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 22-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

    ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 25-ந்தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.
    • விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது.

    தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

    இதில் கடந்த 25-ந்தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.

    இதனால் அந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும், மேற்கூரை பூச்சுகளும், அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் இருந்தது.

    இந்த பகுதியை பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். கார்கள், ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் அவ்வழியாக சென்று வந்தன.

    இந்த நிலையில் தற்காலிகமாக கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் ஒருவித அச்சத்துடன் அந்த பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மின் விளக்கு கம்பங்கள் சேதமடைந்தன. நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இடிந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.

    இடிந்து கீழே விழுந்த செங்கல் மற்றும் கொடுங்கையின் இடிபாடுகளையும், சேதம் அடைந்த மின் கம்பத்தையும் அங்கிருந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரத்தில் உள்ள கொடுங்கை இடிந்து விழுந்தது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆகவே கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் கூறும் போது,

    ரூ.98 லட்சம் செலவில் கொடுங்கை சரி செய்து கோபுரத்தை புனரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.

    • தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வருகை தருகிறார்கள்.
    • பாதுகாப்பு ஒத்திகை அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா முன்னிலையில் நடந்தது.

    திருச்சி:

    108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ திருத்தலங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது. இங்கே வைகுண்ட ஏகாதசி பெருவிழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கநாதரை வழிபட்டுச் செல்வார்கள்.

    அதுமட்டுமல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வருகை தருகிறார்கள். இதற்கிடையே நேற்று இரவு ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வழக்கம்போல் தங்கள் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை ஒரு மணி அளவில் ஸ்ரீரங்கம் சாலையில் வழக்கத்திற்கு மாறாக சைரன் சத்தத்துடன் வாகனங்கள் மின்னல் வேகத்தில் அணிவகுத்து சென்றதால் மக்கள் தூக்கம் கலைந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தபோது வானுயர காட்சி தரும் ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு வாசல், வெள்ளை கோபுர வாசல் ஆகிய இடங்களில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வந்து நின்றன. அதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கருப்பு உடை கமாண்டோ படை வீரர்கள் கைகளில் துப்பாக்கியை ஏந்தி கொண்டு கோவில் கதவுகளை இடித்து தள்ளியவாறு திபுதிபுவென உள்ளே புகுந்தனர்.

    இதனைப் பார்த்துக்கொண்டிருந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ரெங்கநாதர் கோவிலுக்குள் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கக்கூடும் என நினைத்தனர். மேலும் செல்போன்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பது போன்று என்ன? ஏது? என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

    பின்னர் ஒரு மணி நேரம் கழித்து விசாரித்தலுக்கு விடை கிடைத்தது. கோவிலில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இது பாதுகாப்பு ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டனர். இருந்த போதிலும் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகை அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா முன்னிலையில் நடந்தது. கோவிலுக்குள் பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து விட்டால் அவர்களை எதிர்கொண்டு பக்தர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

    கோவிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து பக்தர்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் நிலையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டு பக்தர்களை மீட்பது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. முதலில் கிழக்கு வாசல் வழியாக தமிழக கமாண்டோ படை வீரர்கள் 42 பேர் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ரப்பர் புல்லட்டுகளால் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.

    இவர்களால் பயங்கரவாதிகளை முழுமையாக தீர்த்துக் கட்ட முடியவில்லை. அதைத்தொடர்ந்து தமிழக கமாண்டோ படை வீரர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். அதைத்தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக தேசிய பாதுகாப்பு படையினர் 142 பேர் அதிரடியாக கோவிலுக்குள் புகுந்து நாலாபுறமும் சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை ரப்பர் புல்லட்டுகளால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

    இதில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடம்பெற்றிருந்தனர். தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை முற்றிலுமாக கொன்றுவிட்டு பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்த பக்தர்களை மீட்டு வருவது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் நைட் விஷன் கேமராக்கள், டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டன.

    துப்பாக்கி சத்தங்கள், குண்டு வெடிக்கும் சத்தங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை என்பதை அறிந்து கலைந்து சென்றனர். இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகை மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • திருச்சி மாவட்டத்துக்கு 2-ந் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு 2-ந் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும். ஆயினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

    இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
    • நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும், இன்றையை தலைமுறை குழந்தைகளும் ரோட்டோரங்களில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். அதற்கேற்ப ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

    இதற்கிடையே பழமை, பாரம்பரியத்தை போற்றும் வகையில் கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு பயணம் செய்து தங்களது குலதெய்வமான ரெங்கநாதரை தரிசிக்க வருகிறார்கள்.

    அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அதற்கான வரலாற்று நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டனர். அருகிலுள்ள தென்னந் தோப்புகளில் தங்கி, கொள்ளிடக்கரையில் முடி காணிக்கை கொடுத்து வம்சம் செழித்து, தொழில் பெருகி, விவசாயம் தழைக்க வழிபாடு நடத்துகிறார்கள்.

    அந்த வகையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1,500 பக்தர்கள் சுமார் 200 இரட்டை மாட்டு வண்டியில் நேற்றிரவு புறப்பட்டு இன்று காலை (சனிக்கிழமை) ஸ்ரீரங்கம் வந்து சேந்தனர்.

    அவர்களது பயணம் அல்லித்துறை, சோமரசம்பேட்டை, புத்தூர் நால்ரோடு சிக்னல், தில்லைநகர், கரூர் பைபாஸ் மேம்பாலம், அண்ணா சிலை, காவிரி பாலம் வழியாக அம்மா மண்டபம் ரோடு, ராகவேந்திரா வளைவு, மேலூர் ரோடு வழியாக மணி தோப்பை சென்று அடைந்தது.

    நாளை (12-ந்தேதி) வட காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து பெருமாளுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்திய பின்பு பெருமாளை தரிசிக்க உள்ளனர்.

    நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும், இன்றையை தலைமுறை குழந்தைகளும் ரோட்டோரங்களில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    ×