search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் கருப்பு உடையுடன் புகுந்த கமாண்டோ படையினர்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் கருப்பு உடையுடன் புகுந்த கமாண்டோ படையினர்

    • தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வருகை தருகிறார்கள்.
    • பாதுகாப்பு ஒத்திகை அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா முன்னிலையில் நடந்தது.

    திருச்சி:

    108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ திருத்தலங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது. இங்கே வைகுண்ட ஏகாதசி பெருவிழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கநாதரை வழிபட்டுச் செல்வார்கள்.

    அதுமட்டுமல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வருகை தருகிறார்கள். இதற்கிடையே நேற்று இரவு ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வழக்கம்போல் தங்கள் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை ஒரு மணி அளவில் ஸ்ரீரங்கம் சாலையில் வழக்கத்திற்கு மாறாக சைரன் சத்தத்துடன் வாகனங்கள் மின்னல் வேகத்தில் அணிவகுத்து சென்றதால் மக்கள் தூக்கம் கலைந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தபோது வானுயர காட்சி தரும் ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு வாசல், வெள்ளை கோபுர வாசல் ஆகிய இடங்களில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வந்து நின்றன. அதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கருப்பு உடை கமாண்டோ படை வீரர்கள் கைகளில் துப்பாக்கியை ஏந்தி கொண்டு கோவில் கதவுகளை இடித்து தள்ளியவாறு திபுதிபுவென உள்ளே புகுந்தனர்.

    இதனைப் பார்த்துக்கொண்டிருந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ரெங்கநாதர் கோவிலுக்குள் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கக்கூடும் என நினைத்தனர். மேலும் செல்போன்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பது போன்று என்ன? ஏது? என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

    பின்னர் ஒரு மணி நேரம் கழித்து விசாரித்தலுக்கு விடை கிடைத்தது. கோவிலில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இது பாதுகாப்பு ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டனர். இருந்த போதிலும் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகை அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா முன்னிலையில் நடந்தது. கோவிலுக்குள் பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து விட்டால் அவர்களை எதிர்கொண்டு பக்தர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

    கோவிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து பக்தர்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் நிலையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டு பக்தர்களை மீட்பது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. முதலில் கிழக்கு வாசல் வழியாக தமிழக கமாண்டோ படை வீரர்கள் 42 பேர் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ரப்பர் புல்லட்டுகளால் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.

    இவர்களால் பயங்கரவாதிகளை முழுமையாக தீர்த்துக் கட்ட முடியவில்லை. அதைத்தொடர்ந்து தமிழக கமாண்டோ படை வீரர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். அதைத்தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக தேசிய பாதுகாப்பு படையினர் 142 பேர் அதிரடியாக கோவிலுக்குள் புகுந்து நாலாபுறமும் சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை ரப்பர் புல்லட்டுகளால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

    இதில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடம்பெற்றிருந்தனர். தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை முற்றிலுமாக கொன்றுவிட்டு பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்த பக்தர்களை மீட்டு வருவது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் நைட் விஷன் கேமராக்கள், டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டன.

    துப்பாக்கி சத்தங்கள், குண்டு வெடிக்கும் சத்தங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை என்பதை அறிந்து கலைந்து சென்றனர். இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகை மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×