என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஷால், ஜீவா, அதர்வா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீசில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    ஜெய் நடித்துள்ள நீயா 2 படம் மே 10-ந் தேதியான இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 24-ந் தேதிக்கு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்திற்கும் பிரச்சனை வந்தது. நேற்று வெளியாக வேண்டிய அந்த படம் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. 

    அதனை சரிசெய்து ஒருநாள் தள்ளி இன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் படம் தள்ளிப்போயுள்ளது. அதேபோல் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீசும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீவா நடித்துள்ள கீ படம் மட்டும் பிரச்சனைகளை கடந்து இன்று சற்று தாமதமாக ரிலீசானது. மேலும் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாகிறது.



    இந்த நிலையில், திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பார்த்த எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார்.

    மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர்.

    இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களுக்கும் வரவேற்பு பெறும்.

    நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishal #Anisha
    விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    பதில்:- முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன்.

    ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து.

    கே:- அனிஷாவுடனான திருமணம் எப்போது?

    ப:- அக்டோபர் 9-ந் தேதி திருமணம், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    கே:- மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 2 உறுதியாகிவிட்டதா?

    ப:- ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்.

    கே:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதே?

    ப:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது.



    கே:- உங்கள் அணியில் இருந்து விலகிய ஆர்கே.சுரேஷ், உதயா இருவரும் நீங்கள் சிறு படங்கள் ரிலீஸ் செய்ய உதவவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

    ப:- அவர்களுடைய படங்கள் நன்றாக இல்லை. அதனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுதான் உண்மையான காரணம். ஒரு படத்தை 4 பேர் தான் பார்க்க வருகிறார்கள் என்னும்போது அந்த படத்தை 2 வாரங்கள் ஓட்டியே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை நான் கட்டாயப்படுத்த முடியாது. அது ரஜினி படமோ புதுமுகத்தின் படமோ இதுதான் நிலைமை.

    கே:- தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்கு கமிட்டி ஏன் தோல்வி அடைந்தது?

    ப:- என் படத்தை நிறுத்துவதற்கு நீ யார் என்ற கேள்வி வரும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு படத்தை உருவாக்க போதிய நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ரிலீஸ் செய்ய மட்டும் அவசரப்படுகிறார்கள். மற்றவர்கள் வருமானத்தை சாப்பிட ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை இந்த பிரச்சினை தீராது.

    கே:- தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் மீண்டும் போட்டியிடுவீர்களா?

    ப:- மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vishal #Anisha #VishalAnisha #VishalWedsAnisha 

    கீர்த்தி சுரேஷ் பா.ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து அவரது தாயார் மேனகா சுரேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். #MenakaSuresh #KeerthiSuresh
    நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா. தமிழில் ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கீர்த்தி சுரேசின் தந்தை சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். இந்நிலையில் மேனகா சுரேஷ் டெல்லியில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தது பரபரப்பாகி இருக்கிறது.

    இதுகுறித்து மேனகா சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ‘என் கணவர் சுரேஷ் பா.ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான்.

    கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டார்கள்.

    சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்’ என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது.



    கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதுவரை இல்லை’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MenakaSuresh #KeerthiSuresh
    தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமித்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவுக்கு தடை கேட்டு வி‌ஷால் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். #ProducerCouncil #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வகித்து வந்தனர்.

    விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் மீது சங்க உறுப்பினர்கள் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி போர்க்கொடி தூக்கினார்கள். இதற்கிடையே விஷால் அணியின் பதவி காலம் கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என்.சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

    விஷால் அணி செயலாளரான எஸ்.கதிரேசன் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்ட விரோதமாகும். எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே தமிழக அரசு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவை 2 நாட்களுக்கு முன்னர் நியமித்தது. இதற்கும் விஷால் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். தமிழக அரசு தரப்பில் இருந்து தரப்பட்ட இந்த குழு ஆலோசனை வழங்க மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று இந்த வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது தற்காலிகமாகவே. இந்த குழு தனிப்பட்ட முறையில் செயல்படக்கூடாது. நிர்வாக பிரச்சினையில் தலையீடு இருக்கக்கூடாது’. என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். #ProducerCouncil #Vishal #ChennaiHighCourt

    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #KombuVatchaSingamda
    ‘குற்றம் 23’, ‘தடம்’ படங்களை தொடர்ந்து ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர்குமார் தயாரிப்பில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. 

    ‘சுந்தரபாண்டியன்’ வெற்றியை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் - சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.



    இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஹரீஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், செண்ராயன் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குநர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    1990-1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


    ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள செய்துள்ள இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், அன்பறிவ் ஸ்டன்ட் காட்சிகளையும் கவனிக்கின்றனர். #KombuVatchaSingamda #Sasikumar #MadonnaSebastian

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படம் பற்றி பரவி வந்த வதந்திக்கு பிரபல மலையாள நடிகர் செம்பன் விளக்கம் அளித்துள்ளார். #Darbar #Rajinikanth #Nayanthara
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    மேலும் பாலிவுட் நடிகர்கள் பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல மலையாள வில்லன் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தர்பார் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது.



    இதுகுறித்து செம்பன் கூறுகையில், தர்பார் படத்தில் நான் நடிப்பதாக செய்திகள் பரவி வருவதை நானும் பார்த்தேன். ஆனால் தர்பார் படக்குழு என்னை தொடர்பு கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. எனினும் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ChembanVinodJose

    ‘களவாணி-2’ பட விவகாரத்தில் படத்தை வெளியிடுவது குறித்து சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அடியாட்களை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இயக்குநர் சற்குணம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #Sargunam
    ‘களவாணி-2’ பட இயக்குனர் சற்குணம், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘களவாணி-2’ படத்தை நானே தயாரித்து இயக்கி உள்ளேன். நடிகர் விமல் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். இம்மாதம் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தேன். அதுபோல விளம்பரமும் செய்திருந்தேன்.

    ஆனால் படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துவிட்டது. தற்போது அந்த தடையை ஐகோர்ட்டு விலக்கிவிட்டது. படத்தை வெளியிடலாம் என்றும் ஐகோர்ட்டு கூறிவிட்டது. இந்த நிலையில் ‘களவாணி-2’ படத்தை எப்படி நீ வெளியிடுகிறாய், பார்ப்போம்? என்று என்னை போனில் சிலர் மிரட்டுகிறார்கள். அடியாட்கள் நேரடியாக என்னிடம் அனுப்பி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.



    இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு இயக்குனர் சற்குணம் கூறினார். #Kalavani2 #Sargunam #Vemal #Oviyaa

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழகமெங்கும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைத்துள்ளார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாக இருந்த `அயோக்யா' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'. விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படம் இன்று (மே 10) திரைக்கு வர இருந்தது.

    ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கியை செலுத்திய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை  ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. #Ayogya #Vishal #Raashikhanna

    நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தன்று சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறார். #RaghavaLawrence
    நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கவுள்ளார்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார் ராகவா லாரன்ஸ். அங்கு ஒரு மூதாட்டி இவரைப் பார்த்ததும் என் மகன் வந்துவிட்டான் என்று ஓடி வந்து கட்டி பிடித்திருக்கிறார். இதைப் பார்த்ததும் நம்மை பார்த்த மகிழ்ச்சியில் இப்படி செய்கிறார் என்று நினைத்திருக்கிறார்.



    அடுத்து வேறொருவர் வந்திருக்கிறார். அவரைப் பார்த்தும் அந்த மூதாட்டியும் அதேபோல் கட்டிபிடித்திருக்கிறார். இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர், இவர்களை இங்கு விட்டுச்சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்துவிட்டான் என்று கட்டி பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் அவர்களின் மனதிற்குள் எவ்வளவு வலி இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வார்கள். இந்த சம்பவத்தின் பாதிப்பே இந்த அமைப்பு உருவாகிட காரணமாக இருந்தது. இனிமேல் இதுபோல் யாரும் தங்கள் பெற்றோர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

    இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது. என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாட்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து வீடியோவாக வெளியிடவுள்ளார். இப்பாடல் வருகிற மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடித்திற்கும் `100' படத்திற்கான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. #Atharvaa #Hansika
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

    ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குனர் இன்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், 100 திரைப்படம் நாளை (மே 10, 2019) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.



    ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika
    இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu
    இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

    இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.



    'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
    ×