என் மலர்
சினிமா செய்திகள்
நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் என்று நடிகர் உதயா விஷால் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vishal #Udhaya
நடிகர் விஷால் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் நடிகர் உதயா. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
உதயா நடிப்பில் கடந்த ஆண்டு உத்தரவு மகாராஜா என்ற படம் வெளியானது. இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் காரணம் என்று உதயா குற்றம்சாட்டினார். நேற்று விஷால் அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறி இருந்தார்.
அந்த படம் நன்றாக இல்லை. அதனால் ஓடவில்லை என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஷாலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உதயா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் தாங்கள் அளித்த பேட்டியில், உத்தரவு மகாராஜா திரைப்படத்தை சரியான கதைகளம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே இப்படத்தை பார்த்ததாக கூறியிருந்தீர்கள். நான் அனைவருடைய கருத்துகள், விமர்சனங்கள் அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதை மதிக்கிறேன், பாராட்டுகிறேன்.
விமர்சனங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. துரதிருஷ்டவசமாக எனது படத்தை குறித்த உங்கள் விமர்சனமும் அவ்வாறானதே. ஏனென்றால், நீங்கள் அந்தப்படத்தை பார்க்கவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

எனது படத்தை திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுற்றேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அந்த பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான்.
இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றி உள்ளவனாக இருப்பேன். எனது படத்திற்கு திரைத்துறையினர்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து ஊடகங்களிடம் இருந்தும் நேர்மையான விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது.
இந்த நேர்மையான விமர்சனங்கள் எனக்கு திருப்தி அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. ஏனென்றால், இந்தப்படம் சராசரிக்கும் அதிகமான வியாபாரத்தை எனக்கு தந்திருக்கிறது. மிக குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்த போதும், மக்கள் அதை ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனி நபர் தாக்குதலாகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ இருக்க கூடாது.
ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும். சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. ‘விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்’ என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vishal #Udhaya
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் `100' படத்தின் விமர்சனம். #100TheMovie #Atharvaa #Hansika
நாயகன் அதர்வா போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது காதலியான ஹன்சிகா டெலிகாலராக வேலை பார்க்கிறார். இதற்காகவே ஹன்சிகாவை கிண்டல் செய்து வருகிறார்.
அதர்வாவின் நண்பர் மகேஷ் போலீஸ் வேலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ரவுடிகள் மற்றும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கனவோடு பணியில் சேரும் அதர்வாவிற்கு, அவசர உதவி எண்ணான 100-க்கு வரும் அழைப்புகளை எடுக்கும் டெலிகாலராக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.

தொலைப்பேசியில் அவசர உதவிக்கு அழைப்பவர்களை காவல் நிலையத்திற்கு மாற்றாமல், தானே நேரில் சென்று உதவி செய்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், இறந்ததாக கருதப்படும் அதர்வாவிற்கு தெரிந்த பெண் ஒருவர் 100 நம்பரை அழைக்கிறார். அவருடன் பேசும் அதர்வா அதிர்ச்சியடைகிறார். மேலும் அந்த பெண் தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதை அறியும் அதர்வா, தன்னுடைய நண்பன் மகேஷ் இதில் ஈடுபட்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.
இறுதியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா? நண்பன் மகேஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவிற்கு அதிகமாக வேலை இல்லை. பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார்.
நண்பராக வரும் மகேஷ் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.

போலீஸ் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். அவசர எண்ணான 100 பற்றியும், அதன் பின் செயல்படுபவர்களை பற்றியும் விளக்கி இருக்கிறார் இயக்குனர். அதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
த்ரில் காட்சிகளுக்கு ஏற்றவாறு வரும் சாம் சி.எஸ்-ன் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘100’ அவசரம். #100TheMovie #Atharvaa #Hansika #YogiBabu
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் அவரது காதலரை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தன் காதலன் யார் என்று தனக்கு சொல்லும்படி ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். #AishwaryaRajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், மெய் என தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார்.
Hey guys I have been hearing rumours on my love story... pls let me also know who tat guy is .. very much eager to know🤪🤪🤪 pls stop spreading such fake news ... if something happens I would be first person to inform u all .. very much single an happie have a great weekend
— aishwarya rajessh (@aishu_dil) May 10, 2019
இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ராஜேசுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும். காதலித்தவரையே கரம் பிடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஐஸ்வர்யா ராஜேஷ் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். #AishwaryaRajesh
காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி - அனேகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கீ' படத்தின் விமர்சனம். #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
கல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.
பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.

இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது.
இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.
இதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.

கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே கீ படத்தின் மீதிக்கதை.
ஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.
கோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் `கீ' சாவி. #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
பாலிவுட்டில் பிரபலமாகி இருக்கும் டாப்சி, தமிழ் சினிமாவில் கேம் ஓவர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார். #TaapseePannu #GameOver
இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து `கேம் ஓவர்' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.
Glad to announce that prolific filmmaker @anuragkashyap72 will present the Hindi version of #GameOver. #YouHaveSeenNothingLikeThis@sash041075@taapsee@RelianceEnt@Ashwin_saravana@chakdynpic.twitter.com/euadB0x3ju
— Y Not Studios (@StudiosYNot) May 10, 2019
தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரான் ஈதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பையும், சிவா சங்கர் கலைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். #TaapseePannu #GameOver
ஆர்.வி.பாண்டி இயக்கத்தில், தருண், ராபியா, அனன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ படத்தின் விமர்சனம்.
நாயகன் தருண் ஊரில் வேலை இல்லாமல் இருக்கிறார். இவருடைய அப்பா ஆர்.வி.பாண்டி போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார். தருணுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த கனவு தினமும் தொடர்கிறது. கனவில் காதலியுடன் பல இடங்களுக்கு செல்கிறார் தருண்.
அந்த பெண் யார் என்று நிஜத்தில் தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கனவில் சென்ற இடங்களை நிஜத்தில் பார்க்கிறார். மேலும் அந்த பெண் அருகில் எங்கையோதான் இருக்கிறார் என்று உணர்கிறார்.
இந்நிலையில், தொழில் அதிபர் கேபிஜே-வின் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்கிறார் தருண். கனவில் வரும் காதலி ஒருநாள் ஒருவரை கொலை செய்ய தூண்டுகிறார். தன்னுடைய முதலாளிதான் கொலை செய்யும் நபர் என்று தருணுக்கு தெரியவருகிறது.

இறுதியில் நாயகன் தருண் தன்னுடைய முதலாளியை கொலை செய்தாரா?, கனவில் வரும் நாயகியை நேரில் சந்தித்தரா? நாயகி தொழில் அதிபரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் தருண், நாயகி ராபியா ஆகியோர் தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் போலீஸ் ஏட்டாகவும் நடித்திருக்கிறார் ஆர்.வி.பாண்டி. தொழில் அதிபராக வரும் கேபிஜே, மற்றொரு நாயகியாக வரும் அனன்யா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.வி.பாண்டி, நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் என்ன தரமுடியோ அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். குழப்பம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கோல்டு சந்துருவின் ஒளிப்பதிவும், ஏ.கே.ராம்ஜியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ பார்க்கலாம்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவ காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடந்து வருகிறது. லைப் ஆப் ராம் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
சினிமா உலகிற்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படம் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தனுஷ் திரையுலகிற்கு வந்து 17ம் ஆண்டு நிறைவையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எதுவும் தெரியாத சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறீர்கள். நடிகனாகக்கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள், எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.
17 years !! Thank you all 🙏🙏🙏 pic.twitter.com/nAcqNjy19g
— Dhanush (@dhanushkraja) May 10, 2019
என்னுடைய வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நான் சரியான மனிதன் கிடையாது ஆனால் உங்களுடைய அளவுகடந்த அன்பு, என்னை பன்படுத்தி வளர்த்திருக்கிறது.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள், இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை ரசிகர்களாகிய நீங்கள் வெளியிட்டிருந்த போஸ்டர்களை பார்த்து நான் இன்னும் ஊக்கம் அடைந்திருக்கிறேன். இந்த அன்பு எப்போதும் வேண்டும், அன்பை பரவச் செய்யுங்கள் அன்பு மட்டும் உலகத்தை உருவாக்கும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, அடுத்ததாக நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
`அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார்.

அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதுகிறார். ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். அதுபோல் தமன்னாவுக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை அவர் நண்பர்களுடன் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்? என்பது, இந்த படத்தின் கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’ என்றார்.
தமிழ், இந்தியில் மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று கூறியிருக்கிறார். #SameeraReddy
தமிழில் கவுதம் மேனன் இயக்கி சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. மீண்டும் அவர் இயக்கத்திலேயே ‘நடுநிசி நாய்கள்’ படத்திலும் நடித்தார். அஜித்துடன் அசல் படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் அக்ஷய் வர்தே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் படங்களில் நடித்தபோது தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக சமீரா ரெட்டி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகினேன் என்பதை தெரிந்துகொள்ள ஒருவர் கூட ஆர்வம் காட்டவில்லை. இதனால் திரையுலகமே இப்படித்தான் என்று முடிவு செய்துகொண்டேன்.

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் ஒருபோதும் இருந்தது இல்லை. என்னை பல தடவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட படுக்கைக்கு அழைத்தனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத்தான் நடக்கும்.” இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி இயக்கத்தில் மனோ ஜெயந்த், ஊர்வசி ஜோசி நடிப்பில் வெளியாகி இருக்கும் வேதமானவன் படத்தின் விமர்சனம். #Vedhamanavan
ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி எழுதி இயக்கி இருக்கும் படம்.
மனோ ஜெயந்த் ஒரு கிராமத்துக்கு மீன் விற்க வருகிறார். அந்த கிராமத்தில் பெண்கள் நகைக்காக கொல்லப்படுகிறார்கள். மீன் விற்கும் மனோ ஜெயந்துக்கும் ஊர்வசி ஜோசிக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் நகைக்காக பெண்களை கொலை செய்வது மனோ தான் என்பது தெரிய வருகிறது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தண்டனைக்கு பின் வெளியே வரும் மனோ திருந்தி வாழ முயற்சிக்கிறார்.
அவரை இந்த சமூகம் திருந்தி வாழ விட்டதா? அவர் ஏன் பெண்களை கொலை செய்து நகையை திருடுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
மனோ ஜெயந்த், ஊர்வசி ஜோசி இருவரும் புதுமுகங்கள் என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடத்தில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மூ.புகழேந்தி தான் தீர்ப்பு வழங்கிய ஒரு உண்மை சம்பவத்தையே கதையாக எழுதி இயக்கி இருக்கிறார். கதை, திரைக்கதை எதிலுமே அழுத்தம் இல்லை. மனோ கொலைகள் செய்வதற்கும் விடுதலையாவதற்கும் வலுவான பின்னணி காரணங்கள் இல்லை. குற்றவாளிகள் திருந்தி வாழ நாம் சந்தர்ப்பம் தரவேண்டும் என்ற சமூக கருத்தை சொன்ன விதத்தில் வேதமானவனை பாராட்டலாம்.
எஸ்.கண்ணனின் ஒளிப்பதிவும், சவுந்தர்யன் இசையில் வரும் பாடல்களும் ஓரளவுக்கு ஆறுதல். பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன.
மொத்தத்தில் `வேதமானவன்' சந்தர்ப்பம். #Vedhamanavan #VedhamanavanReview
விஷால், ஜீவா, அதர்வா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீசில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜெய் நடித்துள்ள நீயா 2 படம் மே 10-ந் தேதியான இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 24-ந் தேதிக்கு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்திற்கும் பிரச்சனை வந்தது. நேற்று வெளியாக வேண்டிய அந்த படம் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது.
அதனை சரிசெய்து ஒருநாள் தள்ளி இன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் படம் தள்ளிப்போயுள்ளது. அதேபோல் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீசும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா நடித்துள்ள கீ படம் மட்டும் பிரச்சனைகளை கடந்து இன்று சற்று தாமதமாக ரிலீசானது. மேலும் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாகிறது.

இந்த நிலையில், திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பார்த்த எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார்.
மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர்.
இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களுக்கும் வரவேற்பு பெறும்.






