என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

    கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    அமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தின் மூலம் விஸ்வாசம் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.
    விஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்தில் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



    மேலும் விஸ்வாசம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றியும், படத்தொகுப்பை கவனித்த ரூபனும் சூர்யா படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வருகிற ஆகஸ்டில் சிவா இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்‌ஷ்மண் இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார்.
    ஜெயம் ரவி 25-வது படத்தை தொடுகிறார். அந்த படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    ‘என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச வி‌ஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2’ பண்ணலாம்னு சொல்லியிருக்கார். என்னை எனக்குக் காட்டிய படங்களில், `பேராண்மை’யும் ஒண்ணு.



    இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமை. மத்தபடி, நானும் ஒரு அரசியலை பாலோ பண்றேன். அந்த அரசியலுக்குள்ள தான் இருக்கேன். அதுக்காகத்தான் தேர்தல்ல ஓட்டு போடுறேன். நான் எந்தக் கட்சியிலும் இல்லை; தனிப்பட்ட நபர் யாரையும் ஆதரிக்கவில்லை’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தாய் என்ற அமைப்பை துவங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதற்கான விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார்.
    நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கியுள்ளார்.

    தங்கள் பெற்றோர்களை யாரும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 



    அன்னையர் தினத்தை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இவ்விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் அடுத்த படத்தில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார் லாரன்ஸ்.


    அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ், சிம்புவுக்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.
    டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்குப் பின்னர் அனைவரின் கேள்வி சிம்புவின் திருமணம் எப்போது என்பதுதான். அதே போல சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற கேள்வியும் இருக்கிறது.

    இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார். இவர் சிம்புவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நண்பரான சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர், டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.



    அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவருக்கு பார்த்துள்ள மணப்பெண் யார்? எப்போது கல்யாணம் என்று எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறினார்.
    நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் மே 14-ந்தேதி மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஆறு மாதங்களுக்கு அப்போது தள்ளி வைத்தனர்.

    தற்போது ஆறு மாத காலக்கெடுவும் முடிவடைந்து விட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போதைய தலைவரான நாசர் மீண்டும் போட்டியிடுவது உறுதியான நிலையில், அவரை எதிர்த்து யார் தலைமையிலான அணி களமிறங்க உள்ளது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

    இந்நிலையில் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், மே 14-ந்தேதி மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து விட்டதால், தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகவே இந்த அவசரக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
    தமிழில் வீரம், பைரவா படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி இன்று மதியம் காலமானார்.
    விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி  அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் பி.பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி என்று இரு மகள்களும் உள்ளனர்.

    பி.வெங்கட்ராம ரெட்டி தமிழில் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். இவரது 6வது படமான சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது.
    தமிழில் அம்புலி, கதம் கதம், சவாரி படங்களில் நடித்த சனம் ஷெட்டி, இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.

    'பர்மா' படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. சாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.



    சனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள 'டிக்கெட்' என்கிற பேண்டஸி படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

    படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள் தான் வேறு. தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார். 
    சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஆதிக்கம் செலுத்தும் வேடத்தில் நிகிஷா படேல் நடித்துள்ளார்.
    ஆரவ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். சரண் இயக்கி வரும் இப்படத்தில் தற்போது நிகிஷா படேல் இணைந்து நடித்து வருகிறார்.

    இதுகுறித்து நிகிஷா படேல் கூறும்போது, ‘நான் இந்த படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் பேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார்’ என்றார்.



    மேலும், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திலும் நிகிஷா படேல் இணைந்து நடித்துள்ளார்.
    ருத்ரா, நொஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அந்த நிமிடம்’ திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆர்.குழந்தை ஏசு இயக்கி இருக்கிறார்.
    ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’. இந்தப் படத்தில் சில தமிழ் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வில்லனாக லால் வீரசிங், போலீஸ் அதிகாரியாக சன்ன பெராரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.



    இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கி தமிழ்த்திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணாக் கோட்டை போன்ற பல பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

    தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசையமைத்திருக்கிறார்.
    ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் ருத்ரா - நொஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அந்த நிமிடம்’ படத்தின் முன்னோட்டம்.
    எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’.

    இந்தப் படத்தில் சில தமிழ், மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கியவருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    ஒளிப்பதிவு - தங்கையா மாடசாமி, இசை - எஸ்.என்.அருணகிரி, பின்னணி இசை - சஜித் ஆண்டர்சன், எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ், சண்டைப்பயிற்சி - எஸ்.ஆர்.முருகன், நடனம் - ரேகா, கலை - செல்வராஜ், பாடல்கள் - அருண்பாரதி, தயாரிப்பு - ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா, எழுத்து, இயக்கம் - ஆர்.குழந்தை ஏசு.



    ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கி தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
    தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
    ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.

    பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.



    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.

    பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.



    ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

    கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.



    பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.

    தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.

    ×