என் மலர்
சினிமா செய்திகள்
சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி கேவலமாக பேசியவரை நடிகை டாப்சி வறுத்தெடுத்து கோபமாக பேசியிருக்கிறார்.
நடிகை டாப்சியை சமூக வலைத்தளத்தில் சிலர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். அவரது நடிப்பையும் தோற்றத்தையும் கேலி செய்கின்றனர். இதனால் டாப்சி கோபத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஒருவர் உங்கள் உடல் மீது எனக்கு விருப்பம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்சி எனக்கு மூளையில் ஒரு பகுதியை பிடிக்கும் என்றார்.
வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் இன்னொருவர் டாப்சி அணியும் ஆடைகளை பற்றி கேவலமாக பேசி வந்தார். இதுவும் அவரை ஆத்திரப்பட வைத்தது. டாப்சி கலந்து கொள்ளும் டி.வி நிகழ்ச்சியொன்றுக்கு சமூக விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி அந்த நபரை அழைத்து வந்தனர். டாப்சி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று அவரிடம் சொல்லவில்லை.

நிகழ்ச்சி தொடங்கியதும் டாப்சி அரங்குக்குள் வந்தார். அவரை பார்த்ததும் அந்த நபர் அதிர்ச்சியானார். அவரை பார்த்து டாப்சி ஆவேசமாக பேசினார். நடிகைகள் என்றால் கேவலமாக நினைத்து விட்டீர்களா. அவர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் வாழ்க்கை என்று இருப்பது தெரியாதா? என்றெல்லாம் கேட்டு அந்த நபரை கடுமையாக சாடினார்.
உடனே அவர் இனிமேல் உங்களை பற்றி கேவலமாக பேசமாட்டேன் என்று சொல்லி டாப்சியிடம் மன்னிப்பு கேட்டார். இது அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர்கள் பாராட்டை பெறுவது சுலபமானது இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ள தேவி-2 படம் விரைவில் திரைக்கு வருகிறது.
தமன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனது படங்கள் நன்றாக ஓடினால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லோரும் லாபம் அடைவார்கள். அதை பார்த்து நான் சந்தோஷப்படுவேன்.
அதே மாதிரி நான் நடிக்காத படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். சினிமா துறை நன்றாக இருக்க வேண்டுமானால் எல்லா படங்களுமே ஓட வேண்டும்.

சினிமா துறை செழிப்பாக இருந்தால்தான் அனைத்து நடிகர், நடிகைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சினிமா துறையில் வெற்றிகள் ரொம்ப முக்கியம். 100 படங்கள் வெளிவந்தால் அவற்றில் 10 படங்கள் கூட வெற்றிபெறுவது இல்லை. இது வருத்தமளிக்கும் விஷயம். போட்டியில் ரசிகர்கள் பாராட்டை பெறுவதும் சுலபமானது இல்லை.
இந்த மாதிரி சூழ்நிலையில் ஒவ்வொரு படமும் வெற்றி பெறுவது முக்கியம். ஜெயித்த படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்று பார்க்க மாட்டேன். எந்த படம் வெற்றி பெற்றாலும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சினிமா எனது துறை. இங்கு தனியாக யாரும் வளர முடியாது. ஒரு படத்தின் வெற்றிக்கு பின்னால் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது” இவ்வாறு தமன்னா கூறினார்.
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 64’ படத்தை யார் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகாஜான், இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும், விரைவில் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார்.
மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் கமலி என்ற சிறுமியின் குறும்படம் இடம்பெற்றுள்ளது.
மகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி. ஸ்கேட்டிங்கில் அசாத்திய திறமை கொண்டவர். கமலி கவுன் அணிந்து ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் சர்வதேச அளவில் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது. காலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர கமலி உலக அளவில் பிரபலமானார்.
இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை பற்றி கமலி என்ற பெயரிலேயே 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.

அந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது. 6 வாரங்களாக படமாக்கப்பட்ட அந்த குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது.
கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கமலியின் தாய் சுகந்தி இதுபற்றி கூறும்போது ‘என் மகளுக்கு பின் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது’ என்றார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த கவுசல்யா, நட்பே துணை படத்திற்குப் பிறகு தொடர்ந்து அம்மா வேடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.
காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன் உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கவுசல்யா. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்தவர் அடுத்து லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.
பூதோபாஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கவுசல்யா, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார். பேயை மையமாக கொண்ட திகில் படமாக உருவாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் பற்றிய செய்திக்கு நடிகை அமலாபால் ஆதங்கமாக பதிலளித்திருக்கிறார்.
ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்திருப்பார். அவரைப்போல தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது’ என அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இதை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார்.

மேலும் இதுகுறித்து, ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை’ என ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பதால், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
‘எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார்.அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது.
ஒருவேளை மதம் மாறிவிட்டாரா? என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
‘அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்கு பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.
Edho was having crush on @PriyaAnand but she is fasting for ramzan. Paavam nut kazhanda case pola
— Hawkeye (@hawkeyeview) May 10, 2019
Why aways assumythe worst? Maybe it's not fake! Maybe I do respect and value all of it!??! Common u guys let's be loving and lovable! 🤗
— Priya Anand (@PriyaAnand) May 11, 2019
மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது. இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த முயற்சி’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுராக் காஷ்யப், விக்ரமுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அவரது கதாபாத்திரத்திற்குநல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுராக் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணா' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `கடாரம் கொண்டான்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை சீதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் கோவாவில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை சீதா ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார். கார்த்தி, ஜோதிகா இந்த படத்தில் அக்கா, தம்பியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `மான்ஸ்டர்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பா.இரஞ்சித்துடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து "நீலம் புரொடக்ஷன்ஸ்" சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகி இருக்கும் `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் சமூக கருத்துடன் குடும்ப படமாக உருவாக இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து `உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் `மான்ஸ்டர்' படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது பதவியில் இருக்கும் விஷால், நாசருக்கு எதிராக புதிய அணி களம் காண இருக்கிறது.
நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.
தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான தேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.

தேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
எதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.






