என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அர்கா மீடியா நிறுவனம் கூறும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று கே புரொடக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    கே புரொடக்‌ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அர்கா மீடியா நிறுவனம் தீங்கிழைக்கும் நோக்கில் கே புரொடக்‌ஷன் மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    அர்கா மீடியா நிறுவனம் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. அந்நிறுவனம் சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் (04.05.2019) அன்று ஹைதராபாத் நகர சிவில் நீதிமன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.

    நாங்கள் அர்கா மீடியா நிறுவனத்திற்கு எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை. அதன் விளைவாக அவர்கள்தான் எங்கள் நிறுவனத்திற்கு பல கோடிகள் தரவேண்டியுள்ளது.

    நாங்கள் அர்கா மீடியா (ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP) மீது சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    இதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்வென்றால் அர்கா மீடியா கூறியுள்ள தவறாக செய்தியை பரப்புவதை பார்த்து அதை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். 

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார்.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.



    தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ரூலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. நான்கு மாதங்களுக்குள்ளாகப் படத்தை முடித்து தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
    கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

    இந்த நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேறு ஒருவரின் ஓட்டை நான் போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். எனவே இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு என்று நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
    நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளிக்கு வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் திரும்பிச் சென்றார். சில மணிநேரம் கழித்து மீண்டும் ஓட்டுபோட வந்த சிவகார்த்திகேயனை வாக்களிக்க ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அனுமதித்தனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் ஓட்டு போட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர் பதிவு செய்தது கள்ள ஓட்டு என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு:-

    நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.



    ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.

    எல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை.

    இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.லோக்கல்'.

    சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஹரிஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ஹப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் & ஆர்தர் ஏ.கிங், படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன், கலை - சுப்ரமணிய சுரேஷ், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், நீராஜா கோனா, பி.செல்வம், சிகை அலங்காரம் - வினோத் சுகுமாரன், பாடல்கள் - கே.ஆர்.தரண், மிர்ச்சி விஜய், ரோகேஷ், நடனம் - தினேஷ்குமார், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - எம்.ராஜேஷ்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்திலேயே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைத்து கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது. 

    இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மென்மேலும் உயர்த்துகிறது என்றார்.

    மிஸ்டர்.லோக்கல் டிரைலர்:

    தேவராட்டம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமாகி இருக்கும் ரகு ஆதித்யா அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
    சிவகார்த்திகேயனின் சீமராஜா, விஜய் சேதுபதியின் தர்மதுரை படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரகு ஆதித்யா. இவர் வில்லனாக நடித்துள்ள தேவராட்டம் படம் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் ரகு ஆதித்யா மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தனது கதாபாத்திரம் மீது மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டுள்ளது என்கிறார் ரகு. இது குறித்து அவர் கூறியதாவது:-

    ’தேவராட்டம் படத்தில் நடிக்க முத்தையா என்னை அழைத்தார். படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரம் என்பது தெரிந்தது. இந்த ரோலில் நடித்தால் நமது பெயர் கெட்டுப்போய் விடுமே என முதலில் தயங்கினேன். ஆனால் முத்தையா தான் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்.



    அவர் சொன்னது போலவே, இந்த கதாபாத்திரம் எனக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுடன் இணைந்து மதுரையில் படம் பார்த்தேன். அப்போது இடைவேளையின் போது கவுதம் என்னை வெட்டிக்கொன்றதும், ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

    இது தான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றி. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தால் தான் வில்லனாக என்னால் உயர முடியும் என்பதை புரிந்து கொண்டேன். எனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. வில்லனாக மட்டுமல்லாமல், காமெடியனாகவும், இன்னும் பல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என ரகு ஆதித்யா கூறினார்.

    மிஸ்டர்.லோக்கல் படம் வரும் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய எம்.ராஜேஷ் சிவகார்த்திகேயன் கேட்டதால் சில காட்சிகளை தவிர்த்ததாக கூறினார்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

    இதில் இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது,

    எனக்கு ரொம்ப எமோஷனலான படம் இது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர். முதல் முறையாக எனது குடும்பத்தில் வெளியே ஒரு நடிகரை வைத்து படம் பண்ணுகிறேன். இந்த படம் எனக்கு பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் இந்த படத்தை ஹிட்டாக்க பல்வேறு விதமாக யோசித்தேன்.



    அப்போது சிவா என்னிடம், இந்த படத்தில் டாஸ்மாக், குடிப்பது போன்ற காட்சி, பெண்களை திட்டுவது போன்ற பாடல்கள் இவையில்லாமல் ஒரு குடும்ப படமாக பண்ணலாம் என்றார். படம் ஆரம்பிக்கும் போது இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

    முதல்முறையாக சந்தானம் இல்லாமல் படம் பண்ணுகிறேன். இருப்பினும் இந்த படத்தில் நான்கு முன்னணி காமெடியன்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு சும்மா வந்து போகிற கதாபாத்திரம் இல்லை. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம், அதை சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்றார்.

    டூலெட் படத்தை இயக்கிய செழியன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரில்லர் கதையில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
    ஒளிப்பதிவாளர் செழியன் டூலெட் படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களே கிடைத்தது.

    இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலையில் செழியன் தற்போது ஈடுபட்டுள்ளார். த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருவருமே இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர்.



    கொலை பின்னணியில் இருக்கும் மர்மத்தை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தலைப்பு என்று சில பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



    விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் சைபர் கிரைம் கலந்த திரில்லர் படத்தில் விஷால் ஜோடியாக சமந்தாவுக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார்.
    விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வந்த நிலையில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார். 

    விஷால் நடிப்பில் அயோக்யா படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இரும்புத்திரை 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு வருடங்களாக தாடி, முடியுடன் சுற்றி வந்த நடிகர் மாதவன், தற்போது அதற்கு விடை கொடுத்து புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
    நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது?' என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.

    ஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். 



    ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்.
    ×