என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரஜினியை அரசியலுக்கு வரவேற்று மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் “நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

    அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன், ஆண்டவன் கட்டளையிட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் வரை காத்திருங்கள்” என்றார். மேலும் மு.க.ஸ்டாலின், சீமான், திருமாவளவன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

    ரஜினியின் இந்த பேச்சு அவர் அரசியலுக்கு விரைவில் வருவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அரசியல் மந்தமாக உள்ள சூழ்நிலையில் ரஜினியின் இந்த பேச்சு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வந்து விட்டதாகவே போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். ரஜினியின் அரசியல் பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று சென்னையில் அவ ரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ரஜினி ரசிகர்களும் போராட்டம் நடத்தினர்.


    இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் ரஜினி ரசிகர்கள் “போருக்கு தயார்” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். அதில் “தர்மத்தின் தலைவா போருக்கு தயார்! எப்போதெல்லாம் ‘தர்மம்’ அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன்” என்று அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பொது மக்களும், வாகன ஓட்டிகளும் நின்று பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து மதுரை ரஜினி ரசிகர்கள் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காரணத்தால் தமிழக அரசியல் ‘களை’ இழந்து காணப்படுகிறது. நாள்தோறும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்.

    போருக்கு (அரசியலுக்கு) தயாராக இருங்கள். போர் வரும்போது அழைக்கிறேன் என்று கூறி உள்ளது எங்களுக்கு உற்சாகத்தை ஏற் படுத்தி உள்ளது என்றனர்.

    விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடித்து வரும் `ஸ்கெட்ச்' படக்குழு அடுத்ததாக படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறது.
    தமன்னா தற்போது விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதில் விக்ரம் பைக் திருடும் வாலிபனாக நடித்துள்ளார். அவருடைய காதலியாக தமன்னா நடிக்கிறார். கவர்ச்சி இல்லாத குடும்ப பெண் வேடம்.

    இருவரும் நடித்த காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டன. அடுத்து, சென்னை பின்னி மில்லில் ஒருபாடலுக்கு விக்ரம் நடனமாடும் காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.



    அடுத்து விக்ரம்-தமன்னா ஜோடியின் டூயட் பாடல் வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது. இதற்காக இருவரும் படக்குழுவினருடன் வெளிநாடு செல்கிறார்கள்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு, சூர்யா-தனுசுடன் ஜோடியாக நடிக்க ஆசையாக இருக்கிறதாம்.
    தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

    தனது சினிமா அனுபவம் பற்றி கூறிய ஸ்ரீதிவ்யா...

    “சினிமாவில் ஒரு படம் ஓடினால் பரபரப்பாக பேசுவார்கள். 2 படம் ஓடவில்லை என்றால் மார்க்கெட் அவுட் என்பார்கள். எனவே, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. சமீபத்தில் ஜீவாவுடன் நான் நடித்து வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ஈட்டி’ படத்துக்கு பிறகு அதர்வாவுடன் நான் நடித்துள்ள ‘ஒத்தைக்கு ஒத்த’ படமும் வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன். மீண்டும் பட வாய்ப்புகள் என்னை தேடி வரும்.



    தமிழ் சினிமாவில் பல முன்ணணி நாயகர்களுடன் நடித்துவிட்டேன். தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சூர்யா, தனுஷ் எனக்கு பிடித்தமான ஹீரோக்கள். எனவே, அவர்களுடன் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன்.

    நான் சினிமாவில் காலடி வைத்த போது இத்தனை படங்களில் நடிப்பேன். இவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. என் வாழ்க்கை யில் நான் நினைக்காதது எல்லாமே நடக்கிறது” என்றார்.

    என்னை மாமா என்று சமந்தா அழைப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாக நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.
    நாகர்ஜுனா தயாரிப்பில் நாகசைதன்யா- ராகுல் பிரீத்திசிங் நடித்துள்ள ‘ராரண்டோய் வேதுகா சுதம்’ பட அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி நாகர்ஜுனா அளித்த பேட்டி....

    “நாகசைதன்யா நடித்துள்ள இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இதில் ஜகபதிபாபு அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார். நான் இன்னும் கதாநாயகனாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்கவில்லை. சினிமாவை நான் கடவுள் போல நேசிக்கிறேன். உழைத்தால் பயன் கிடைக்கும் என்பதை ‘பாகுபலி-2’ நிரூபித்து இருக்கிறது. இது ரூ.1500 கோடி வசூலை கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனை. அடுத்து இதுபோன்ற படம் எப்போது வரும் என்று தெரியாது.



    எனது மகன் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இதற்கு சமந்தாவை மணக்க இருப்பது காரணமாக இருக்கலாம். சமந்தாவை எங்கள் குடும்பத்தின் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சமந்தா முன்பு என்னை ‘சார்’ என்று அழைப்பார். இப்போது மாமா என்று அழைக்கும்படி கூறி இருக்கிறேன். தெலுங்கில் அழைத்தால் ‘மாமய்யா’ என்று சொல்ல வேண்டும்.

    நான் தெலுங்கு படநாயகனாக நடிக்கிறேன். ‘மாமய்யா’ என்றால் எனக்கு வயதான பீலிங் வரும். எனவே ‘மாமா’ என்று தான் அழைக்க வேண்டும் என்று சமந்தாவிடம் சொல்லிவிட்டேன். அப்படித்தான் இப்போது அழைக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது”.
    சமுத்திரகனி நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தொண்டன்’ படத்தை பார்க்க வரும் பொதுமக்களுக்கு ரசிகர்கள் இலவச நீர் மேர், இளநீர் கொடுத்து அசத்தியுள்ளனர்.
    சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘தொண்டன்’. இப்படத்தில் விக்ராந்த், சுனைனா, கஞ்சா கருப்பு, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 300 திரையரங்குக்கும் மேல் வெளியாகியிருக்கும் இப்படத்தின் மீதான விமர்சனங்கள் எல்லோரும் பாராட்டும்படியாகவே அமைந்திருக்கிறது.

    ‘அப்பா’ படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. திரையரங்கிலும் ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமுடன் வந்து படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.



    சென்னையில் முக்கியமான திரையரங்கமாக கருதப்படும் உதயம் திரையரங்கில் ‘தொண்டன்’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. படத்தை பார்க்க வந்த பொதுமக்களுக்கு ‘தொண்டன்’ படத்தின் ரசிகர்கள் இலவசமாக நீர் மோரும், இளநீரும் வழங்கினர். ‘தொண்டன்’ ரசிகர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்களும் கிடைத்துள்ளது.



    இப்படத்தை வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் சார்பில் சமுத்திரகனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 
    ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி - தான்யா - விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் `பிருந்தாவனம்' படத்தின் விமர்சனம்.
    தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து விடுகிறார். அவ்வாறாக சேர்த்துவிடப்படும் சிறுவர்களில் ஒருவர் தான் அருள்நிதி. தனது சிறுவயதிலிருந்தே காது கேட்காத, பேச முடியாத அருள்நிதி ஊட்டியில் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், தனது நண்பன் செந்திலுடன் இணைந்து முடிதிருத்தும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

    சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி தான்யா, சிறுவயதிலிருந்தே அருள்நிதியுடன் பழகி வருகிறாள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதி, அவ்வப்போது தான்யாவை சந்திப்பார். ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதிக்கு நடிகர் விவேக்கின் காமெடி தான் உறுதுணையாக இருந்துள்ளது. அவரது காமெடி தான் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.



    இவ்வாறாக ஒருநாள் நடிகர் விவேக்கை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைத்தது. விவேக்கின் நெருங்கிய நண்பரான சுப்பு பஞ்சுவுக்கு உடல்நிலை சரியில்லை. சுப்புவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க நினைத்த விவேக், ஊட்டியில் இருக்கும் நண்பன் சுப்புவின் வீட்டுக்கு செல்கிறார்.

    இவ்வாறாக ஊட்டியில் கொஞ்ச காலம் தங்கியுள்ள விவேக், ஒருநாள் வெளியே செல்லும் போது அவரது கார் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. அப்போது அந்த வழியாக வரும் அருள்நிதி, விவேக்கின் காரை மீட்க உதவி செய்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் இடையே நட்பு ஏற்படுகிறது. இதில், தான் விவேக்கின் தீவிர ரசிகன் என்பதை அருள்நிதி தனது சைகை பாஷையில் தெரிவிக்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் - செந்தில் - தான்யா உள்ளிட்டோர் அடிக்கடி சந்திக்கின்றனர்.

    என்னதான் நட்புடன் பழகி வந்தாலும் ஒருமனதாக அருள்நிதியை காதலித்து வருகிறார் தான்யா. ஆனால் தனது காதலை தெரிவிக்காமல் இருக்கும் தான்யாவிடம் காதலை வெளிப்படுத்தச் சொல்லி விவேக் ஊக்கப்படுத்துகிறார். விவேக்கின் பேச்சைக் கேட்டு தான்யா, தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்துகிறாள். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, தான்யாவின் காதலுக்கு அவளது அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சில காணங்களை கூறும் அருள்நிதி, தான்யாவிடம் கோபமாக பேசி காதலை ஏற்க மறுக்கிறார்.



    இதனிடையே அருள்நிதிக்கு பேச்சு வரும் என்ற உண்மை தெரிய வருகிறது. தனது சிறு வயதிலேயே அருள்நிதிக்கு பேச்சு வந்துள்ளது. ஆனால் யாரிடமும் அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார். இவ்வளவு நாளாக நடித்ததாகக் கூறி அருள்நிதி மீது கோபம் கொள்ளும் தான்யா, செந்தில் அருள்நிதியிடம் சண்டைபிடித்து பிரிகின்றனர். இதையடுத்து விவேக்கின் அறிவுரையின் பேரில், தனக்கு பேச்சு வரும் என்ற உண்மையை அருள்நிதி அனைவரிடமும் தெரிவிக்கிறார்.

    அருள்நிதி பேசுவதைக் கேட்ட, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவர் மீது கோபங் கொள்கின்றனர். தனக்கு பேசமுடியும் என்பதை அருள்நிதி ஏன் மறைக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையில் இருக்கும் மர்மம் என்ன? அருள்நிதி - தான்யா இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.



    காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞனாக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. கவலை தெரியாத இளைஞனாக படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
    மொழி படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல வாய்பேச முடியாத ஒரு ஆண் என்ன செய்வான். தனது கருத்தக்களை எப்படி வெளிப்படுத்தான் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.

    விவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே வாழ்ந்திருக்கிறார். தனது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்கு பிறகு அவரது காமெடிகள் பட்டாசாய் வெடித்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.



    தான்யா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அருள்நிதியுடனேயே பயணம் செய்யும் செந்தில் தனது பங்குங்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

    சமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரயும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக கூறியிருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.



    பாட்டு, சண்டைக்காட்சிகள் என்று ஏனோதானோவென்று படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான வழியில் செல்லும் இயக்குநர் ராதா மோகன், இப்படத்தையும் பூக்களை தொட்டுச் செல்லும் தென்றல் போல ரசிக்க வைத்திருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தையும் ஒருங்க ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் இடமாக பிருந்தாவனத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற எதார்த்தமான கதையை இயக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். படத்தை தயாரிப்பதோடு நிற்காமல் படத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முயற்சியை மேற்கொண்டால் இது போன்ற இயக்குநர்களை ஊக்குவிக்க முடியும்.

    எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `பிருந்தாவனம்' அழகு.
    தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.
    கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது.

    தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. யார் வரவேண்டும்? யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் அரசியலுக்குள்தான் வந்திருக்கிறேன்.



    அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை எங்களுக்காக பணியாற்ற வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதைவிடுத்து தியாகம் செய்ய வாருங்கள் என்று சொன்னால், அவர்கள் அதை வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

    மேலும், ரஜினி அரசியலுக்குள் வந்தால் அவரை ஆதரிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. அது வேறு என்று சொல்லி பேட்டியை முடித்தார்.

    தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் கூறியதை வைத்து பார்க்கும்போது, அவர் மறைமுகமாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்படுகிறது. 
    சமுத்திரக்கனி இயக்கத்தில், அவரும் சுனைனா - விக்ராந்த் - அர்த்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் `தொண்டன்' படத்தின் விமர்சனம்.
    ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், சமுத்திரக்கனியின் அம்மா இறந்த விட தனது ராணுவ பணியை உதறித் தள்ளிவிட்டு முதலில் ஊரைப் பார்ப்போம் என்று வந்து விடுகிறார். இதையடுத்து கஞ்சா கருப்புடன் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, முதலுதவி செய்து வருகிறார். அதிலும் தனது ஆம்புலன்சில் ஏறியவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற கொள்கையுடனும் இருக்கிறார் சமுத்திரக்கனி.

    அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக செயல்படும் ஒருவரை, தனது ஆட்களை ஏவி வெட்டி விடுகிறார். அவருக்கு முதலுதவி அளிக்கும் சமுத்திரக்கனி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறார். இதனால் சமுத்திரக்கனியை பழிவாங்க வேண்டும் என்று நமோ நாராயணா முயற்சி செய்து வருகிறார்.



    இதுஒருபுறம் இருக்க, சமுத்திரக்கனியை காதலிக்கும் சுனைனா, தனது காதலை சமுத்திரக்கனியுடன் தெரிவிக்க அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது குடும்பத்துடன் சமுத்திரக்கனி பெண் கேட்க செல்கிறார். இதில் சுனைனாவின் தம்பி நசாத் தனது சாதுரியத்தால் அவனது அப்பாவின் சம்மதத்தை பெற வைக்கிறான். பின்னர் இருவருக்கும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மறுபுறத்தில் விக்ராந்த், சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனாவை காதலிக்கிறார். ஆனால் அர்த்தனா விக்ராந்தின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.

    ஒரு கட்டத்தில் தவறான வழிக்கு செல்லும் விக்ராந்துக்கு சில அறிவுரைகளை கூறி, முதலுதவி செய்யும் பணியில் ஈடுபடுத்திவிடுகிறார் சமுத்திரக்கனி. இதில் ஒரு உயிரை காப்பற்றும் விக்ராந்துக்கு மகிழ்ச்சியுடன், மனநிறைவும் கிடைக்க அந்த பணியிலேயே நீடிக்க விரும்புகிறார்.



    மேலும் அர்த்தனாவின் தோழிக்கு நமோ நாராயணா தம்பி சவுந்தர்ராஜன் காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் பொது இடத்தில் வைத்து அவனை அடித்து விடுகிறாள். இதையடுத்து அவளது கல்லூரிக்கு செல்லும் சவுந்தர் ராஜன் அர்த்தனாவின் தோழியை கட்டையால் அடிக்க, மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சவுந்தர்ராஜனை தாக்கி விடுகின்றனர். இந்நிலையில் சவுந்தர்ராஜனுக்கு முதலுதவி கொடுக்கும் சமுத்திரக்கனி, மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, சவுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.

    தனது தம்பியை, சமுத்திரக்கனி தான் கொன்றாதாக நினைத்து அவரை பழிவாங்க துடிக்கும் நமோ நாராயணா சமுத்திரக்கனி வீட்டில் குண்டு வைக்க, கர்ப்பமாக இருக்கும் சுனைனாவின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுகிறது. இந்நிலையில், நமோ நாராயணாவை சமுத்திரக்கனி பழிவாங்கினாரா? நமோ நாராயணாவுக்கு அறிவுரை கூறி திருத்தினாரா? விக்ராந்த் - அர்த்தனா காதல் வெற்றி பெற்றதா? என்பது படத்தின் மீதிக்கதை.



    படம் முழுக்க துடிப்புடன் இருக்கும் சமுத்திரக்கனி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, சமூக பொறுப்பாளியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற படங்களைப் போல இல்லாமல், இந்த படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல் சுனைனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சுனைனாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.  

    தொடர்ந்து வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ராந்த் இப்படத்தில் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக வலம் வருகிறார். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கோபத்தில், காப்பற்றிய மகிழ்ச்சியில் அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. படம் முழுக்க அர்த்தனா அழகு தேவதையாக வலம் வருகிறார். உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்படியாக நடித்திருக்கிறார்.



    தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நமோ நாராயணா ஒரு வில்லனுக்கு தேவையான கெத்துடன் கலக்கியிருக்கிறார். படம் முழுக்க சமுத்திரக்கனியுடனேயே பயணம் செய்யும் கஞ்சா கருப்பு கதைக்கு உறுதுணையாக காமெடி, செண்டிமென்ட் என அனைத்து பிரிவிலும் கலக்கியிருக்கிறார். சூரி, தம்பி ராமைய்யா, நசாத் நகைச்சுவைக்கு அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றபடி ஞானசம்பந்தம், வேல ராமமூர்த்தி, அனில் முரளி, சவுந்தர்ராஜன், படவா கோபி, திலீபன் தங்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர்.

    இயக்குநராக சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தற்போதைய முக்கிய பிரச்சனைகளான விவசாயம், அரசியல் நிலவரம், காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு, ஜாதி திணிப்பு என அனைத்து பிரிவிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கியருக்கிறார். மருத்துவம் எவ்வுளவு முக்கியம், ஒரு உயிரின் மதிப்பு என்னஎன்பதை தொண்டன் மூலம் உணர்த்தியிருக்கும் சமுத்திரக்கனியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். காமெடி, செண்டிமென்ட், என கோபம், சீற்றம் அனைத்தையும் சரியான இடைவெளியில் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. ஒரு பொறுப்பான இயக்குநராக நின்றிருக்கிறார். படத்தில் வசனங்கள் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    ஏகாம்பரம், ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `தொண்டன்' மரியாதைக்குரியவன்.
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் `காலா' படத்தில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இணைகின்றனர்.
    `கபாலி' பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. `காலா' கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். படத்தில் அவரை `காலா' என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக சென்னையில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.



    இதுஒருபுறம் இருக்க `காலா' படக்குழுவில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தயாரிப்பாளர் தனுஷ் - நடிப்பு - `ஆடுகளம்', தயாரிப்பு - `காக்கா முட்டை', `விசாரணை'

    எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் - `ராக்', `ரக் பிராக்', `நாக்கா கரிட்ராமு', `தி டெரரிஸ்ட்', `வானபிரசாதம்', `கண்ணத்தில் முத்தமிட்டாள்', `ஃபிராக்' உள்ளிட்ட 7 படங்களில் சிறந்த எடிட்டராக தேசிய விருது பெற்றிருக்கிறார்.



    நடிகை அஞ்சலி பாட்டீல் - `நா பங்காரு தள்ளி' என்ற படத்திற்காக சிறப்பு தேசிய விருது பெற்றிருந்தார்.

    நடிகர் சமுத்திரக்கனி - சிறந்த துணை நடிகராக `விசாரணை' படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.

    சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. `காலா' குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்' படத்தின் முன்னோட்டம்.
    ரஜினியின் ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 9-வது படத்தை, ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும், அவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    இசை - டி.இமான், ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், கலை - விதேஷ், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், சண்டைப்பயிற்சி - திலிப் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் - வெங்கட்.கே, நிர்வாகத் தயாரிப்பு - எஸ்.பிரேம், இயக்கம் - கவுரவ் நாராயணன்.



    சென்னை, அலஹாபாத், ஐதராபாத், பெங்களூர், திருவண்ணாமலை, ஓமன் என பல இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. `இப்படை வெல்லும்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படம் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படுகின்றன.
    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.
    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.

    தலைப்பிரசவ அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜீவாவுக்கு மூன்று மாதம். டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டும், செக்கப் செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குத்

    தோன்றவில்லை."தோன்றவில்லை'' என்றில்லை; எனக்குத் தெரியாது!

    அம்மாதான் இருக்கிறார்களே! அவர்களுக்குத் தெரியாதா? கவனித்துக் கொண்டார்கள். இருந்தாலும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜீவாவே செய்து வந்தாள்.

    நான் எப்போதும் போல் கம்போசிங், ரெக்கார்டிங், மிïசிக் எழுதுவது என்றிருந்தேன்.

    ஜீவாவுக்கு மகப்பேறு நேரம் வந்தது. அவளுக்கு வலி எடுத்தது. அது பிரசவ வலி என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று.

    அம்மா, கலாவின் வீட்டுக்கு போயிருந்தார்கள். நான்தான் வீட்டில் இருந்தேன்.

    "வலிக்கிறது'' என்றாள், ஜீவா. "என்ன செய்யவேண்டும்?'' என்று நான் கேட்க, "ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும்'' என்றாள்.

    "சரி'' என்று கூறிவிட்டு, ரிக்ஷா ஒன்றை அழைத்து வந்தேன். அவளே அதில் ஏறினாள்; அவளே கல்யாணி ஆஸ்பத்திரிக்குப்போனாள்; அவளே `அட்மிட்' ஆனாள்!

    "கூட யாரும் வரவில்லையா?'' என்று ஆஸ்பத்திரியில் கேட்டிருக்கிறார்கள். "இல்லை'' என்று இவள் கூற, அட்மிட் செய்து கொண்டார்கள்.

    என் மனைவி - என் வாழ்க்கைத்துணை, பிரசவ வலி எடுத்தபோது, `எல்லோருக்கும் ஏற்படுவதுதான் போலிருக்கிறது' என்று மிகவும் சாதாரணமாக எண்ணிய மூடன்!

    `பாவம், எப்படி தனியாகப் போவாள்? இடையில் ரிக்ஷாவில் போகும்போது வலி அதிகமாகி வேறு ஏதாவது

    ஆகிவிட்டால்...' என்றுகூட எண்ணாத கொடியவன்!

    - இப்படியெல்லாம் என்னைப்பற்றி இப்போது எண்ணத் தோன்றுகிறதே தவிர, அப்போது ஒன்றும் தோன்றவில்லை.

    ஜீவாவுக்கு குழந்தை பிறந்தது.

    அம்மா, பாஸ்கர் எல்லோரும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். நானும் போய்ப் பார்த்தேன்.

    பச்சை உடம்போடு வீட்டுக்கு வந்தாள் ஜீவா. பிஞ்சுக் குழந்தை கைகளையும், கால்களையும் ஆட்டுவது, அழு வது, மழலைக் குரல் கேட்பது - இதெல்லாம் விவரிக்க முடியாத விஷயங்கள்தான்.

    பிரசவம், தாய் வீட் டில் நடப்பதுதான் வழக்கம். நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்பதால், அது ஒரு விஷயமாக எண்ணிப் பார்க்கப்படவில்லை. இப்போது குழந்தை பிறந்து விட்டது. இந்த நேரத்தில் ஜீவா பிறந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று அக்கா, அத்தான் எல்லோரும் விரும்பியதால், அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

    ஜீவாவையும், குழந்தையையும் பாஸ்கர், பண்ணைபுரத்தில் கொண்டு போய் விட்டு வந்தார்.

    அப்போது, இந்த "ராஜா தி கிரேட்''டுக்கு உடன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் "ராஜ்யம்'' எப்படி நடக்கும்!

    மூன்று மாதம் கழித்து, அழைக்கப் போகவேண்டும் அல்லவா? அப்போதும் இந்த "ராஜா தி கிரேட்'' போகவில்லை! போனால் "ராஜ்யம்'' கவிழ்ந்து விடும் பாருங்கள்!

    பாஸ்கர்தான் போய் ஜீவாவையும், குழந்தையையும் அழைத்து வந்தார்.

    மதுரையில், அண்ணன் பாவலரிடம் குழந்தையைக் காட்டியிருக்கிறார்கள். குழந்தையை கையில் எடுத்து, அப்படியே வெகுநேரம் அண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று பாஸ்கர் கூறினார்.

    என் தாய்க்கு நான் நல்ல மகனா? என் மனைவிக்கு நல்ல கணவனா? உடன் பிறந்தார்க்கு நல்ல சகோதரனா?

    நானல்லவோ பாரதியார் பாடாத வேடிக்கை மனிதன்!

    குழந்தையின் ஜாதகத்தைக் கணித்து, இரண்டு மூன்று பெயர்களை பாஸ்கர் சொன்னார்.

    "கார்த்திக்'' என்ற பெயரை நான் தேர்ந்தெடுத்தேன்.

    அப்போது நான் வாங்கியிருந்த புது சவுண்ட் சிஸ்டத்தில், புதிய இசைத்தட்டுகளை காலை 4 மணிக்கே எழுந்து போடுவேன். மெதுவாக சத்தத்தை குறைத்து வைத்து இசைத்தட்டுகளைப் போடுவேன். எல்லாம் கார்த்திக்கிற்காகத்தான்!

    இப்படி அதிகாலையிலும், பிறகு நேரம் இருக்கும்போதும், இரவு 10 மணிக்கு மேலும் இசை ஒலிக்கும். அந்த இசைத்தட்டில் இசைத்தவர்களும், கம்போஸ் செய்தவர்களும் வந்திருந்து கவனிப்பார்கள். ரசித்து, ரசித்து, அவர்களை நேசிக்கும் என்னையும், என் குழந்தையையும் ஆசீர்வதித்துப் போவார்கள்.

    அந்த இசையைக் கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். நம் நாட்டில் எத்தனை பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் இதற்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள்?

    இசை இல்லாத இவர்கள் வாழ்வு - வறண்ட பாலை!

    கார்த்திக் குழந்தையாக இருக்கும்போதே இந்த இசையைக் கேட்கிறான். எனக்கு இந்த இசையை கேட்க 30 ஆண்டுகள் அல்லவா ஆகியிருக்கிறது! பியானோவை பார்க்கவே எனக்கு 27 ஆண்டுகள் ஆயிற்றே! கார்த்திக் பிறந்த மூன்று மாதத்திலேயே இசையைக் கேட்கிறானே!

    ஜி.கே.வெங்கடேஷ் மிïசிக் கம்போஸ் செய்யும்போது ஓய்வு கிடைத்தால், பழைய பாடல்களின் உயர்தரமான அமைப்புகளை விளக்குவார்.

    அவர் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு வீணை வாசித்தவர்.

    எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "மீரா'' உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், எஸ்.வி.வெங்கட்ராமன்.

    மீரா படத்தில் ஒரு காட்சி. ஒட்டகத்தின் மீது போய்க்கொண்டே எம்.எஸ். ஒரு பாட்டு பாடுவார்.

    இதற்கு இசை அமைக்கும் முன், உயிரியல் பூங்காவுக்கு ("ஜு'') வெங்கட்ராமன் சென்றார். அங்கு காசு கொடுத்து ஒரு ஒட்டகத்தின் மீது சவாரி செய்தார். ஒட்டகம் நடந்த நடையை தாள கதியாக வைத்து, மிïசிக் கம்போஸ் செய்தார் என்று சொல்வார், ஜி.கே.வி.

    "சிலையே நீ என்னுடன் பேசவில்லையோ?'' என்ற பாடலை ஜீ.கே.வி. பாடினால் மிக அழகாக இருக்கும்.

    பாலுவுக்கு சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்புகள் வந்தன.

    ஏற்கனவே என் கல்யாணத்துக்கு வராவிட்டால், நட்பு பொய்யாகிவிடும் என்று ப Öலுவிடம் சொல்லியிருந்தேன். அவன் வராததால், எனக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்தாலும் சிங்கப்பூர் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

    என்னை சமாதானப்படுத்த, வைத்தியை பாலு என்னிடம் அனுப்பி வைத்தான். நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.

    அவர்கள் சிங்கப்பூர் போனார்கள்; வந்தார்கள். அதுபற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    ஒரு சாதாரண வாத்தியக் கலைஞனுக்கு, முதன் முதலாக "வெளிநாட்டுப் பயணம்'' போக வாய்ப்பு வந்தால் அதைத் தவற விடுவானா? ஆனால், நான் தவறவிடுவேன்! அது எனக்குப் பெரிதில்லை. மரியாதையும், ஒழுங்கும், பண்பும்தான் முக்கியம்!

    பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
    சென்னை:

    கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. 

    இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினர். 

    இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

    இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட மேற்சொன்ன 8 பேருக்கும் உதகை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மே 23-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

    இதனையடுத்து, பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் 8 நடிகர், நடிகைகளும் உதகை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, சத்யராத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உதகை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 8 பேரின் பிடிவாரண்ட்டை நீதிபதி செந்தில் குமார் ராஜவேல் உறுதி செய்துள்ளார். இதனால் பிடிவாரண்டில் இருந்து தப்பிப்பதற்கு விரைவில் சூர்யா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் விரைவில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 



    ஆனால், உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா உள்ளிட்டோரின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

    மனுவை விசாரித்த நீதிபதிகள் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
    ×