என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய படத்தை யாரும் குழந்தைகளுககு காட்டாதீர்கள் என்று கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பிரியமான நடிகை, தமிழிலும் தளபதி நடிகருடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதன்பிறகு, தமிழ் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை. பாலிவுட் படங்களில் கொடிகட்டி பறந்தவருக்கு ஹாலிவுட்டும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.

    பாலிவுட்டிலேயே கவர்ச்சியில் எல்லை மீறியவர், ஹாலிவுட் சென்றால் சும்மா இருப்பாரா? இவரை ஹாலிவுட் கலைஞர்களும் தங்களுக்கு தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டனர். அப்படித்தான் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கிற ஹாலிவுட் படமொன்றில் ரொம்பவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம்.



    அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் அவர் நிறைய கெட்ட வார்த்தைகள் வேறு பேசியிருக்கிறாராம். இதையெல்லாம் பார்க்க நடிகைக்கே ரொம்பவும் கூச்சமாக இருந்ததாம். எனவே, என்னுடைய படத்தை யாரும் குழந்தைகளுக்கு காட்டாதீர்கள் என்று தற்போது அறிவித்திருக்கிறாராம். இந்த அக்கறை படத்தில் நடிக்கும்போதே இருக்கவேண்டாமா? என்று நடிகையை பலரும் சாடி வருவதாக ஒரு பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் நிலவி வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

    ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
    ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று அழைத்தார்களோ, அதேபோல் இப்படத்தில் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி ‘காலா’ என்ற பெயரில் தலைப்பாக வெளியிட்டுள்ளார்கள்.

    தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலும் ‘கபாலி’ படத்தைப் போன்று நரைத்த தாடியுடன் இப்படத்திலும் வருகிறார்.

    ஒரு போஸ்டரில் முகத்தில் ரத்தக்கறையுடனும், காயங்களுடனும் ரஜினி கோபத்துடன் இருப்பதுபோல் இருக்கிறது. மற்றொரு போஸ்டரில் மும்பை தாராவி பின்னணியாக வைத்து, நடுவில் சாதாரண லுங்கியுடன், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு ஜீப்பின் மீது ரஜினி அமர்ந்துகொண்டு இருப்பதுபோல் வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு நடிகையான பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 28-ந் தேதி தொடங்கவிருக்கிறது. மும்பையை மையப்படுத்திய கதையாக இது உருவாகவிருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் நடத்தவிருக்கிறார்கள். இப்படம் குறித்த மேலும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 
    திருட்டுத்தனமாக விஜய் 61 படத்தின் காட்சிகள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாவதால் அப்படக்குழு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு பீதியை கிளப்பியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய்-காஜல் அகர்வால் ஆடிப் பாடும் பாடல் படமாகும் காட்சி வீடியோவாக வெளிவந்தது.



    அதைத் தொடர்ந்து நேற்று விஜய் சம்பந்தப்பட்ட காட்சி இடம்பெறும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விஜய் வேஷ்டி அணிந்து ரொம்பவும் பவ்யமாக நின்றுகொண்டிருப்பது போல் உள்ளது. இப்படியாக அடுத்தடுத்து படக்காட்சிகள் வெளியாவது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    எனவே, இனிமேல் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு நிறைய பாதுகாப்பும், கட்டுப்பாட்டையும் படக்குழு வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். 
    தங்கல் மற்றும் பாகுபலி-2 படங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் வலியுறுத்தியுள்ளார்.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தங்கல்'. இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய படங்களிலேயே உலக அளவில் அதிகமான வசூலை பெற்ற படம் என்ற புதிய சாதனையை படைத்திருந்தது.

    இந்த சாதனையை சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் முறியடித்து ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து, ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியாகி அங்கேயும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அங்கு ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து ‘பாகுபலி-2’ சாதனையை தொடுவதற்கு முன்னேறிக் கொண்டு வருகிறது.



    ‘தங்கல்' படத்தின் வசூல் சாதனையை அடுத்து, ‘பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீனாவிலும் ‘தங்கல்’ படத்தின் சாதனையை ‘பாகுபலி-2’ முறியடிக்கும் என்று இரு படங்களை ஒப்பிட்டு செய்திகள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், தங்கல் மற்றும் பாகுபலி-2 படங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கான் பேசுகையில், “தங்கல் படம் சீனா மற்றும் உலக அளவில் இந்த அளவிற்கு பாராட்டுக்களை பெற்று வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் படங்களில் எந்தவொரு ஒப்பீடும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ‘தங்கல்’,
    ‘பாகுபலி-2’ ஆகிய இரண்டு படங்களும் நாட்டிற்கு பெருமை சேர்த்த நல்ல படங்கள் ஆகும்.

    நான் இன்னும் ‘பாகுபலி-2’ படத்தை பார்க்கவில்லை. அது மிகவும் வெற்றிகரமான படம். அந்தப் படத்தைப் பற்றி பல நல்ல செய்திகளை கேட்டு வருகிறேன்” என்றார்.

    ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    மலையாளத்தில் மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள மகாபாரதக் கதையை ரூ.1000 கோடி செலவில் பி.ஆர்.ஷெட்டி என்பவர் படமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும், படத்திற்கான ப்ரீ புரோடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க படத்திற்கான திரைக்கதையும் வேகமாக தயாராகி வருகிறது.

    ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில், மகாபாரத் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நாகர்ஜுனாவும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.



    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நாகர்ஜுனா தெரிவித்ததாவது,

    "நான் தற்போது `ராஜு கரி கதீ-2' படத்தில் நடித்து வருகிறேன். எனது அடுத்த படம் மகாபாரதக் கதையாக இருக்கலாம். கடந்த 4 வருடங்களாக மகாபாரதக் கதையை இயக்க, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும், ஸ்ரீகுமார் 2 வருடங்களுக்கு முன்பே, கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது என்னை தொடர்பு கொண்ட வாசுதேவன் மகாபாரதக் கதையில் நடிப்பதற்காக எனது தேதிகளை கேட்டிருக்கிறார். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால், நான் நடிக்க தயார் என்று கூறினேன். அதற்கு பதில் அளித்த வாசுதேவன், எனக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கவுள்ளதாக கூறினார். இதுகுறித்து படக்குழு என்னை மீண்டும் தொடர்பு கொள்ளும் போது அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கிறேன்"

    இவ்வாறு நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.



    இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியதக வெளியாக உள்ளது. 2018-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

    அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

    போராட்டம், கொடும்பாவி எரிப்பு என வரம்பு மீறி நடந்தால் மன்றத்தில் இருந்து நீக்கிவிடுவதாக ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார். ரஜினியின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிததனர். அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டன. ரஜினிக்கு எதிராக போராட்டமும் நடந்தது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் குதித்தனர். ரஜினியை எதிர்ப்பவர்களின் கொடும்பாவியை எரித்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-


    அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்.

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் `காலா' படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி - பா.ரஞ்சித் இணையும் புதிய படத்திற்கு ‘காலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘காலா’ என்றால் காலன், எமன், தூதன் என்று பொருள் கொள்ளலாம். ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் சுருக்கம் தான் ‘காலா’. இப்படத்தில் ரஜினிகாந்தின் பெயர் கரிகாலன், அவரை சுருக்கமாக ‘காலா’ என்று அழைப்பார்கள்.

    வுண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே.28-ந் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    ‘காலா’ சந்தோஷ் நாராயணன் இசையில், ஆண்டனி பிஜே ரூபனின் படத்தொகுப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. படத்தின் சண்டைப்பயிற்சிகளை திலீப் சுப்பராயனும், பாடல் வரிகளை கபிலன் மற்றும் உமாதேவியும் மேற்கொள்கின்றனர். சாண்டி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றவிருக்கிறார்.

    படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன. படக்குழு அதனை உறுதிப்படுத்தாத நிலையில், ‘காலா’ படத்தில் தான் நடிக்க இருப்பதாக பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீல், அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அஞ்சலி பாட்டீல் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. `காலா' படத்தில் ரஜினி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறாரா? அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் பட வில்லனான விவேக் ஓபராய், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
    உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 26). கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்ப பகை காரணமாக இவரது உறவுக்கார இளைஞர்கள் சிலர் இவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லலிதாவின் முகம் முழுவதும் கருகிவிட்டது. இதையடுத்து, அவரது முகத்தில் இதுவரை 17 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.

    முகம் கருகிவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த லலிதா சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி நம்பருக்கு தனது செல்போனில் இருந்து போன் செய்துள்ளார். எதிர்முனையில் ராகுல் (வயது 27) என்பவர் அந்த போனை எடுத்து பேசியுள்ளார். தவறான அழைப்பில் ஆரம்பித்த இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது.



    தனக்கு நடந்த கொடூரமான விஷயங்களை எல்லாம் லலிதா, ராகுலிடம் மனம் திறந்து கூறியுள்ளார். ராகுலும் லலிதாவின் வெளி அழகாக பார்க்காமல், அவரது நல்ல மனதை பார்த்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், இவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இவர்களின் காதலை அறிந்த இந்தி திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் அவர்களது திருமணத்திற்கு பணஉதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கும் மேலாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் லலிதா-ராகுல் திருமணத்தில் நேரடியாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர்களுக்கு அடுக்குமாடி வீடு ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இதனால், மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    விவேக் ஓபராய் தற்போது அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

    ரஜினி படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள ‘காலா' தலைப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.
    ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-பா.ரஞ்சித் இணையும் புதிய படத்திற்கு ‘காலா’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே.28-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இந்நிலையில் ‘காலா’ படத் தலைப்பு குறித்து இயக்குனர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘காலா’ என்றால் காலன், எமன் என்று பொருள் கொள்ளலாம். ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் சுருக்கம்தான் ‘காலா’. இப்படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளோம்.



    முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதனைத் தொடர்ந்து சென்னையிலும் நடத்தவுள்ளோம். இப்படத்தின் கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ‘காலா’ என்ற தலைப்பை சொன்னதும் ரஜினிக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ‘கரிகாலன்’ அவருக்கு மிகவும் பிடித்த பெயர். படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளோடு ‘காலா’ இருக்கும் என்றார்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தனுஷ் தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 
    ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கு நடிகர் தனுஷ் அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன் அரசியல் சிஸ்டம் சரியில்லை” என்று கூறினார்.

    ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்று பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். ரஜினியின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.


    திரைஉலகை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், ரஜினியின் மருமகன் தனுஷ் எந்த கருத்தையும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுசிடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு தனுஷ் அளித்த பதில் வருமாறு:-

    அரசியல் குறித்து மட்டுமல்ல, ரஜினி எது பற்றி முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களால் எங்கள் குடும்பத்துக்கு எந்தவித அழுத்தமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் உங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்று கேட்ட போது தனுஷ் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றார்.

    பின்னணி பாடகர் சோனு நிகம் டுவிட்டரில் இருந்து முழுவதுமாக விலகி கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    குறிப்பிட்ட மதத்தினர் அன்றாடம் காலை ஒலிப்பெருக்கி மூலம் வழிபாடு நடத்துவது பற்றி பின்னணி பாடகர் சோனு நிகம், சமீபத்தில் டுவிட்டரில் ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தார். இதனால், அந்த மத தலைவர் ஒருவர், சோனு நிகமுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவரது தலையை மொட்டையடிப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, சிகை அலங்கார நிபுணரை வரவழைத்து சோனு நிகமே தனது தலையை மொட்டையடித்து கொண்டு, அந்த மத தலைவருக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், டுவிட்டரில் இருந்து முழுவதுமாக விலகி கொள்வதாக சோனு நிகம் நேற்று திடீரென அறிவித்தார். இந்த முடிவை மிகவும் விரக்தியுடனும், ஏமாற்றத்துடனும் எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 பேர் நேற்று ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
    சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிக்கையில் 3.9.2009 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஊட்டியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரோசாரியோ மரியசூசை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது ஊட்டி குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் விசாரித்து 8 பேரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பினார். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அடுத்த மாதம் (ஜூன்) 17-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.



    இந்த நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 8 பேர் சார்பில், பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ஊட்டி கோர்ட்டில் வக்கீல் விஷ்வநாத் என்பவர் மூலம் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இது குறித்து வக்கீல் விஷ்வநாத் கூறியதாவது:-

    நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பணி காரணமாக ஊட்டி கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. எனவே அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்து உள்ளோம். எங்களது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×