என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகை ராக்கி சாவந்துக்கு பஞ்சாப் கோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தாக கூறப்படுகிறது. இது வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நரேந்தர் அதியா என்ற வக்கீல் லூதியானா ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனால் ராக்கி சாவந்த் கோர்ட்டில் ஆஜராகும்படி லூதியானா கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் ஆஜராகாததால் கடந்த மார்ச் மாதம் கைது வாரண்டு பிறப்பித்தது. அந்த வாரண்டை போலீசார் ராக்கி சாவந்த் வசிக்கும் மும்பைக்கு எடுத்து சென்றபோது, அந்த முகவரில் அவர் இல்லை.



    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல், வால்மீகி பற்றி நடிகை தவறாக எதுவும் பேசவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.

    அதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு விசாவ் குப்தா, நடிகை ராக்கி சாவந்த் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை ஜூலை 7-ந் தேதி கோர்ட்டில் ஆஜர் செய்வதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் லூதியானா போலீஸ் கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார்.
    திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று நடிகை அனுஷ்கா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை அனுஷ்கா இதுகுறித்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே?

    பதில்:- சினிமாவில் அறிமுகமானபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்தான் நடிப்பேன் என்ற லட்சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை. அருந்ததி படத்துக்கு பிறகு அதுமாதிரி கதைகளில் என்னால் நடிக்க முடியும் என்று டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் நம்பினார்கள். அதை பயன்படுத்திக்கொண்டேன். சினிமா ஒரு கனவு உலகம். டைரக்டர் இந்த கனவு உலகத்தில் அழகான வானவில்லை உருவாக்குகிறார். அதில் நான் ஒரு வண்ணமாக இருக்கிறேன்.

    கேள்வி:- சினிமாவில் நடிகைகளுக்கு கவர்ச்சி மட்டும் இருந்தால் போதுமா?

    பதில்:- நிறைய பேர் சினிமாவில் நடிப்பதற்கு கவர்ச்சியும், அழகும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் அழகு வந்து விடும். அழகு மனது சம்பந்தப்பட்டது. மகிழ்ச்சியாக இருந்தால் அழகு இல்லாதவர்கள் கூட அழகாக தெரிவார்கள்.



    கேள்வி:- சினிமாவில் கஷ்டப்பட்ட சம்பவங்கள்.?

    பதில்:- நிறைய இருக்கிறது. நடிகைகளுக்கு கண்ணீர், கஷ்டம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறார்கள். அது தவறு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் சிறப்பாக நடித்து இருப்பதாக நடிகைகளை பலரும் பாராட்டலாம். அதற்கு பின்னால் இருக்கும் வலியும், வேதனையும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ‘மேக்கப்’ போடுவதற்காக மணிக்கணக்கில் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து இரவு வீட்டுக்கு போனால் உடம்பு கடுமையாக வலிக்கும். அதை குடும்பத்தினரிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று தனி அறைக்குள் இருந்து வேதனையால் அழுது இருக்கிறேன். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி விட்டு பிறகு குறைக்க கஷ்டப்பட்டேன். இது சாதாரண காரியம் அல்ல.

    கேள்வி:- உங்கள் திருமணம் எப்போது?

    பதில்:- திருமணத்துக்கு நேரம் இல்லை. ஒப்புக்கொண்ட படங்களை முடிப்பதுவரை திருமணம் பற்றி யோசிக்க மாட்டேன். ஆனால் குடும்பத்தினர் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். சினிமா முன்பு மாதிரி இல்லை. திருமணத்துக்கு பிறகும் பலர் நடிக்கிறார்கள். அதுபோல் நீயும் திருமணம் செய்துகொண்டு நடிக்கலாம் என்று அவர்கள் வற்புறுத்துகிறார்கள். கைவசம் உள்ள படங்களை முடிப்பதுவரை திருமணம் பற்றி பேச வேண்டாம் என்று அவர்களிடம் கூறிவிட்டேன்.

    கேள்வி:- திருமண தடை நீங்க கோவிலில் பூஜை செய்ததாக கூறப்பட்டதே?

    பதில்:- எனது குடும்பத்தினருடன் நீண்ட நாட்களுக்கு பிறகு குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன். அதில் வேறு முக்கியத்துவம் இல்லை.

    இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
    எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிப்பில் உண்மை சம்பவத்தை சொல்லும் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் முன்னோட்டம்.
    ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படம் ‘சுவாதி கொலை வழக்கு’.

    சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர் ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ ‘வஜ்ரம்’ படங்களை இயக்கியவர்.

    இந்த படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு - ஜோன்ஸ் ஆனந்த், இசை - ஷாம் டி ராஜ், கலை - ஜெய்சங்கர், எடிட்டிங் - மாரி,தயாரிப்பு - எஸ்.கே.சுப்பையா. கதை, வசனம் - ஆர்.பி.ரவி, திரைக்கதை, இயக்கம் - எஸ்.டி.ரமேஷ் செல்வன்.

    படம் பற்றி கூறிய இயக்குனர்..

    “நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ் யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால், சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம்.மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பவங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவருடைய மனமும் திடுக்கிட்டுப் போகும். இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள்” என்றார்.

    கவுதம் வி.ஆர். இயக்கத்தில் சக்தி - கணேஷ் வெங்கட்ராம் - நிகிஷா படேல் நடித்து வெளியாகி இருக்கும் `7 நாட்கள்' படத்தின் விமர்சனம்.
    சக்தி, நிகிஷா படேல் இருவரும் ஒரே பிளாட்டில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். தொடக்கம் முதலே இருவரும் எலியும், பூனையும் போல சண்டை பிடிக்கின்றனர். எப்.எம்.-ல் ஆர்.ஜே-வாக பணிபுரிகிறார் சக்தி. நிகிஷா, பிரபு நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

    பிரபுவின் வளர்ப்பு மகனான கணேஷ் வெங்கட்ராம், சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரபுவின் சொந்த மகனான ராஜுவ் கோவிந்த பிள்ளை, வழக்கமான தொழிலதிபர்களின் மகன்களைப் போல ஊர் சுற்றி வருகிறார். ராஜுவ், பெண்கள் விஷயத்தில் விஷேச ஈடுபாடு உடையவர். நிறைய பெண்களுடன் பழகி வருகிறார். பல பெண்கள் பின்னால் சுற்றி வருகிறார். இதில் அவர் சுற்றி வரும் பெண்களில் இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.



    ராஜுவ்வின் திருமணத்தை நடத்த ஆசை பட்டு வரும் பிரபு, அந்த பெண்கள் கொலைக்கு பிறகு ராஜுவ்வின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறார். இந்நிலையில், பிரபுவுக்கு ஒரு மர்ம போன் கால் வருகிறது. அதில் அந்த மர்ம நபர், இரு பெண்களின் கொலைக்கு ராஜுவ் தான் காரணம். அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பிரபு, ராஜுவ் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று, இந்த பிரச்சனையை கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்கிறார். இந்நிலையில், பிரபுவுக்கு போன் செய்த அந்த மர்ம நபர் இறந்து போக, அந்த வீடியோ ஆதாரம் சக்தி, நிகிஷா படேல் இருவரில் யாரிடமோ இருக்கிறது என்பது கணேஷ் வெங்கட்ராமுக்கு தெரிய வருகிறது.



    அந்த வீடியோ ஆதாரத்தை அவர்களிடம் இருந்து மீட்க கணேஷ் வெங்கட்ராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? அந்த பெண்கள் எப்படி உயிரிழந்தனர்? சண்டைபிடித்து வரும் சக்தி - நிகிஷா படேல் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.

    சரிவர படங்கள் அமையாததால், வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் சக்திக்கு. இந்த படம் ஒரு திருப்புமுனை படம் என்று சொல்ல முடியாது. கடைசியாக ‘சிவலிங்கா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சக்திக்கு இப்படத்தில் சரியான கதைக்களம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    கணேஷ் வெங்கட்ராம் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க ஸ்டைலீஷ் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை அவரது அனுபவ நடிப்பால் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இதற்கு முன்பு நடித்த படங்களில் நிகிஷா படேலுக்கு பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. அதே போல் இப்படத்திலும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கிறார். மற்றொரு நாயகியான அங்கனா ராய், கதைக்கு பக்கபலமாக குறைவான காட்சிகளில் வந்தாலும், மிகையான நடிப்பை கொடுக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜுவ் கதையின் முக்கிய கருவாக, உடற்கட்டுடன் கலக்கியிருக்கிறார்.



    பிரபு ஒரு தந்தையாக, தொழிலதிபராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வந்து செல்கிறார். நாசர் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர், சினிஜெயந்த் கூட்டணியின் அட்டகாசங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் கடைசியாக நடித்த படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு ரசிக்க வைக்கிறார்.

    கவுதம். வி.ஆர். ஒரு த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சில காட்சிகளில் மிகையான நடிப்பு வெளியாவதை உணரமுடிகிறது. அன்றாட வாழ்க்கையில் நிகழாத சில காட்சிகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது. சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாக ரசிக்கும்படி இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. அது மட்டுமல்லாமல் பாடல்கள் வரும் இடங்களும் சரியானதாக இல்லை. சண்டைக்காட்சிகளில் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. டி.ராஜேந்தர் பாடிய பாடல் ஓகே.

    மொத்தத்தில் `7 நாட்கள்' ரொம்ப நீளம்
    உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ரஜினிகாந்த், கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

    அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    "மதிப்பிற்குரிய கவிக்கோ அப்துல் ரகுமான், ஒரு சிறந்த எழுந்தாளர், அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்". இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் "அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார். என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தே தீருவர்"

    இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
    யுவன், ஸ்ரவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் விமர்சனம்.
    ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் நாயகன் யுவன், நாயகி ஸ்ரவியாவை காதலித்து வருகிறார். இவர்களது காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், யுவனுக்கு வேலை பறிபோகிறது. இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், யுவனை எம்.எல்.எம். கம்பெனியில் இண்டர்வியூவுக்கு செல்லுமாறு தூண்டுகிறாள் நாயகி.

    யுவனும், நாயகியின் பேச்சை தட்டாமல் எம்.எல்.எம் கம்பெனிக்கு இண்டர்வியூவுக்கு போகிறார். அது பிடித்துப் போகவே வேலையில் சேர்ந்து நல்ல நிலைமைக்கு செல்கிறார்.

    இந்நிலையில், யுவன்-ஸ்ரவியாவின் காதல் ஸ்ரவியாவின் அண்ணனும் போலீசுமான ரியாஸ்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கெனவே, யுவனுடன் மோதலில் இருக்கும் ரியாஸ்கானுக்கு இவர்களது காதல் பிடிக்காமல் போகவே, இருவரையும் அழைத்து எச்சரிக்கிறார். ஆனால், ரியாஸ்கானின் எச்சரிக்கையை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால், எப்படியாவது யுவனை பழிவாங்கவேண்டும் என்று ரியாஸ்கான் திட்டம் தீட்டி வருகிறார்.

    அதன்படி, எம்.எல்.எம். கம்பெனி ஒன்றை தொடங்கி, அதில் மோசடிகள் செய்து, அதை யுவன் செய்ததாக சொல்லி மாட்டிவிடுகிறார். இதனால், யுவன் சிறைக்கு செல்ல நேரிடுகிறது.

    கடைசியில், யுவன் இந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டார்? தனது காதலியுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

    எம்.எல்.எம். கம்பெனியில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று பரவலாக ஒரு பேச்சு நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும், இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும் என்பதை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் சூரியனும், விஜய் ஆர் ஆனந்தும். ஆனால், மக்கள் மனதில் எம்.எல்.எம் கம்பெனிகளை பற்றிய தவறான விஷயங்கள் ஆழமாக பதிந்துவிட்ட நிலையில், இந்த நல்ல விஷயம் மக்களை எப்படி சென்றடையும் என்பது ஐயமே. இருப்பினும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு படமாக கொடுத்த இவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

    நாயகன் யுவன் இதுவரையிலான படங்களில் எப்படி அப்பாவித்தனமாக தனது முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ, அதேபோல் இப்படத்திலும் நடித்திருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் இளைஞனாக நம்மால் இவரை யூகித்து பார்க்க முடியவில்லை. அதேபோல், நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.

    நாயகி ஸ்ரவியா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் அழகு கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ரியாஸ்கான் போலீஸ் வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரசிக்க தூண்டுகிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறார். அருண் மொழி சோழனின் கேமரா இன்னும் கொஞ்சம் காட்சிகளை மெருகேற்றியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘விளையாட்டு ஆரம்பம்’ வெற்றிக்கான போராட்டம்.
    சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
    வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடுகிறது. பிராந்திய மொழி படங்கள்தான் இந்தியாவின் பலம்.

    எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன். இந்த அளவிலான ஜி.எஸ்.டி. வரியை இந்தி திரையுலகம் ஏற்றாலும் நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்தி நடிகர் விவேக் ஓப்ராயிடம் ‘சிறு குழந்தையாக இருந்த போது நீங்கள் வீட்டில் எதையாவது திருடி இருக்கிறீர்களா?’ என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலை பார்ப்போம்...
    அஜீத்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடிப்பவர் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய். இவர் ‘பேங்க்சோர்’ என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். இது வங்கி திருட்டு தொடர்பான கதை. இந்த படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ‘சிறு குழந்தையாக இருந்த போது நீங்கள் வீட்டில் எதையாவது திருடி இருக்கிறீர்களா? என்று விவேக் ஓப்ராயிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்....

    “குழந்தையாக இருந்த போதா? இப்போது கூட வீட்டில் திருடிக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு சாக்லெட் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக , என் மனைவி பிரியங்கா என்னை சாக்லெட் சாப்பிடவிடமாட்டர். கொடுக்கவும் மாட்டார். எனவே, குழந்தைகளுக்காக என்மனைவி வாங்கி மறைத்து வைத்திருக்கும் சாக்லெட்டை நான் தேடி கண்டு பிடித்து திருடி சாப்பிடுவேன்.

    சில நேரங்களில் சாக்லெட் திருடும் போது மனைவியிடம் மாட்டிக்கொள்வேன். இது பற்றி தெரிந்து கொண்ட எனது நண்பர்களான நடிகர்கள் ரித்தேஷ் தேஷ்முக், அப்தாப்ஷிவ் தசானி ஆகியோர் என்னை அடிக்கடி கிண்டல் செய்வார்கள்”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வீட்டுக்குள் இருந்த பெரிய மரத்தை வெட்டியதாக நடிகர் ரிஷிகபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்.
    பழம் பெரும் நடிகர் ராஜ் கபூரின் 2-வது மகன் ரிஷிகபூர். 1970-ம் ஆண்டு 'மேரா நாம் ஜோகர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1973-ல் வெளியான 'பாபி' படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.

    தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். தற்போது 64 வயதாகும் ரிஷிகபூர் பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பாலிஹில் பகுதியில் உள்ள பங்களாவை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான கட்டுமானப்பணிக்கு காண்டிராக்ட் விட்டு இருந்தார்.

    அப்போது பங்களாவின் ஒரு ஓரத்தில் வளர்ந்து இருந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டது. மரத்தின் அடிப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.

    இது பற்றி மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். ரிஷிகபூர் கூறும் போது, மரத்தின் கிளைகள் பக்கத்து வீடுகளுக்கு இடையூறாக இருந்ததால் அதன் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டது, அதற்கு உரிய அனுமதி பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் கூறும் போது, மரத்தை வெட்டியது சட்ட விரோதம். ரிஷிகபூரின் விளக்கம் ஏற்புடையது அல்ல என்றனர்.


    இதையடுத்து ரிஷிகபூர் மீது மும்பை போலீசில் முறைப்படி புகார் செய்யப்பட்டது. போலீசார் அவர் மீது மராட்டிய மாநில மரம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும் போது, மும்பையில் இது போன்று மரங்கள் வெட்டப்படும் சம்பவம் நிறைய நடக்கிறது. மும்பை கலெக்டர் அலுவலகத்தின் அருகில் கூட மரத்தை வெட்டினார்கள்.

    இது பற்றி புகார் செய்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை . ஆனால் பிரபல நடிகர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றதும் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றார்.

    டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ‘காதல்கோட்டை’ உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் ராஜகுமாரன். காதல் கோட்டை படத்தில் நாயகியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    டைரக்டர் ராஜகுமாரனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆகும்.

    சென்னையில் வசித்து வந்தாலும் அவ்வப்போது மனைவி தேவயானி மற்றும் குழந்தைகளுடன் டைரக்டர் ராஜகுமாரன் அந்தியூர் வந்து செல்வார்.

    அதேபோல் நேற்றும் டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் ஆலம் பாளையத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை 6.30மணி யளவில் ராஜகுமாரனும் தேவயானியும் தம்பதி சகிதமாக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பிறகு சாமி தரிசனம் செய்த அவர்கள் கோவிலை வலம் வந்தும் வழிபட்டனர்.

    கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் நடிகை தேவயானியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் சென்று பேசினர். அப்போது பெண்களிடம் நடிகை தேவயானி, “அக்கா நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லோரும் சுகமா?” என்று விசாரித்தார்.

    ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருக்கிறார். இதுகுறித்து அனுஷ்கா கூறியிருப்பதாவது...
    பாகுபலி’ படத்தில் நடிக்கும் போது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை 2 பேரும் உடனடியாக மறுக்கவில்லை.

    இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பிவிட்டதற்காக அனுஷ்கா அவரது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது. இப்போது, அனுஷ்காவுக்கு நெருக்கமானவர்களே பிரபாசை அவர் காதலிக்கிறார் என்று கிளப்பி விடுவதாகவும் இதனால் அனுஷ்கா கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருக்கிறார். இதற்கு இயக்குனரிடம் சிபாரிசு செய்ததே பிரபாஸ் தான் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.


    இதனால் பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகிவிட்டது என்று மீண்டும் பேச்சு எழுந்து இருக்கிறது. இதற்கு பதில் அளித்துள்ள அனுஷ்கா...

    “நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளார். நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    ஹரிஷ், யாமினி பாஸ்கர், சித்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘முன்னோடி’ படத்தின் விமர்சனம்
    படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு அடங்காமல் சுற்றும் நாயகன் ஹரிஷ், தனது அம்மா தம்பி மீது மட்டும் அதிக பாசம் காட்டுவதால் அவர் மீது வெறுப்பாக இருக்கிறார். இந்த நிலையில் உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றும் ஹரிஷ், அவருடனேயே இருந்து அடியாள் வேலையும் செய்கிறார்.

    இந்நிலையில் கல்லூரி மாணவியான நடிகை யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழும் ஹரிஷ், அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இதற்கிடையில், தாதா மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும்யும் பிரிக்க நினைக்கிறார்.



    இதற்கிடையில் தான் காதலித்த யாமினி தனது தம்பியை காதலிப்பதாக நினைத்து ஆவேசப்படும் ஹரிஷ், அவனை கொலை செய்வதற்காக கத்தி எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில், தனது தம்பி தனது காதலை சேர்த்து வைக்க முயற்சிப்பது கண்டு நெகிழ்ந்து போகிறார். அதேபோல், தம்பி மீது மட்டும் அவளது அம்மா ஏன் பாசம் காட்டுகிறாள் என்கிற உண்மையும் அவருக்கு தெரிய வருகிறது.

    இதனால், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். அதேநேரத்தில் தாதாவை விட்டும் விலகுகிறார். ஹரிஷ் தங்களைவிட்டு பிரிந்தால் போலீசுக்கு ஏதாவது தகவல் கொடுத்துவிடுவான் என்று சதித்திட்டம் தீட்டி, அவனை கொலை செய்ய அர்ஜுனனை தூண்டிவிடுகிறார் அவரது மைத்துனர். இவனது சதி வலையில் அவரும் விழுந்துவிட, ஹரிஷை கொல்ல ஆள் அனுப்புகிறார்.



    ஆனால், இந்த தாக்குதலில் ஹரிஷின் தம்பியை ரவுடிகள் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவர்களை பழிவாங்க ஹரிஷ் துடிக்கிறார். இறுதியில், தம்பியை கொன்றவர்களை ஹரிஷ் பழிவாங்கினாரா? தம்பியை ஏன் அவர்கள் கொன்றார்கள்? என்பதற்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.

    துறுதுறுவென கதாபாத்திரத்தில் ஹரிஷ் நம்மை கவர்கிறார். படம் முழுக்க யதார்ததமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். சண்டைக் காட்சியிலும் அசர வைத்திருக்கிறார். யாமினி பாஸ்கருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. வழக்கமான கதாநாயகிகள் போலவே இப்படத்தில் நாயகனுடன் ரொமான்ஸ் செய்ய மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.



    தாதாவாக வரும் அர்ஜுனா மிரட்டியிருக்கிறார். கோவிலில் தன்னை சுற்றி வளைக்கும் ரவுடிகளிடமிருந்து இவர் தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. நாயகனின் தாயாக நடித்திருக்கும் சித்தாரா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

    இயக்குனர் குமார் தாதா கதையை குடும்ப பாச உறவுகளுடன் விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் வரும் டுவிஸ்டுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    பிரபு சங்கர் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ’முன்னோடி’ முன்னேற்றம்.

    ×