என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இந்த்ரா இயக்கி, இசையமைத்து, நடித்து வெளியாகி உள்ள டியூப்லைட் படத்தின் விமர்சனம்.
    நாயகன் இந்த்ரா அவனது நண்பர்களுடன் இணைந்து, சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை ஏமாற்றி வருகிறார். இவ்வாறாக ஒரு இளைஞரை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, கார் விபத்தில் சிக்கி இந்த்ராவின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பு துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து யார் பேசினாலும், அது 5 நொடிகள் கழித்தே இந்த்ராவின் காதுக்கு கேட்கும் என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

    இதனை சரிசெய்ய பல மருத்துவர்களை நாடியும், அதற்கான தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து பல்வேறு மருத்துவர்களை சந்தித்து வரும் இந்த்ரா, ஒரு கட்டத்தில் மருத்துவராக வரும் பாண்டியராஜனை சந்திக்கிறான். ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிய பாண்டியராஜனிடம் சிகிச்சைக்காக யாரும் செல்வதில்லை.



    ஆனால் இந்த்ரா மட்டும் பாண்டியராஜிடம் சிகிச்சை பெறுகிறான். இது ஒருபுறம் இருக்க நாயகி அதிதி, படம் வரையும் கலைஞராக இருந்து வருகிறார். நாயகன் சென்ற அதே மருத்துவமனையில் மனரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் பேசி, அப்படியே வரையும் கலைஞராக பணியாற்றி வருகிறாள். இந்நிலையில், அதிதியை சந்திக்கும் இந்த்ராவுக்கு அவள் மீது காதல் வருகிறது.

    இதனிடையே இந்த்ராவிடம் பேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்ட இளைஞர் தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்க முயற்சி செய்கிறான். மறுபுறத்தில் தனது காதலை அதிதியிடம் வெளிப்படுத்த முடியாமல் இந்த்ரா தவிக்கிறான். கடைசியில் இந்த்ராவின் காதல் வெற்றி பெற்றதா? அவனது பிரச்சனை சரியானதா? பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் இந்த்ராவை பழிவாங்கினானா? என்பது படத்தின் மீதிக்கதை.



    இந்த்ரா படத்தில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார். ஓரளவுக்கு கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருந்தாலே போதுமானது. இருப்பினும், ஒருசில இடங்களில் இவரது நடிப்பும், முகபாவணையும் ரசிக்கும்படி இருக்கிறது.

    கேரள வரவான அதிதி படம் முழுக்க அழகு பதுமையாக வலம்வந்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பாண்டியராஜன் தனது அனுபவ நடிப்பில் தனக்கே உண்டான நக்கலுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும், அவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பிற நடிகர்களும் படத்தின் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

     

    நாயகன் இந்த்ராவே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் இந்த்ரா அதனை காட்சிப்படுத்துவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். ஒன்று இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம், அல்லது நடிப்பிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். அப்படியில்லாமல் இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தாமல் படத்தை சொதப்பியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    எஸ்.ஜே.சூர்யா பாஷையில் சொல்ல வேண்டுமானால், இருக்கு.... ஆனால் இல்லை... அந்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் என்ன இருக்கு என்றும் சொல்லமுடியவில்லை. என்ன இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. எனினும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.  

    படத்தின் பின்னணி இசையில் இந்த்ராவின் பங்கு சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பலம் அளித்தாலும், பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படம் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘ட்யூப்லைட்’ பளிச்சிடவில்லை.
    சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் விதார்த் - ரவீணா ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் விமர்சனம்.
    நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா.

    அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். நடுவில் அந்த லாரியை விதார்த் ஓட்டி செல்லும்போது,  சடாரென்று பிரேக் போடுகிறார். என்னவென்று எல்லோரும் யோசிக்கையில், இவர்கள் லாரிக்கு கீழே ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடப்பது தெரிகிறது.



    இறந்த நிலையில் கிடக்கும் அவரை பார்த்ததும் அனைவரும் பதற்றமடைகிறார்கள். அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அந்த விபத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு விதார்த்தின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடைசியில் இறந்த நபரை விபத்து நடந்த இடத்தின் பக்கத்திலேயே மறைத்து வைக்கிறார்கள்.

    அதன்பின்னர், நடந்த சம்பவத்தை தனது மாமாவான வழக்கறிஞர் ஜார்ஜிடம், விதார்த் போனில் கூறுகிறார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, தனது மருத்துவ நண்பரை வரவழைக்கிறார். மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை பரிசோதிக்கிறார். அப்போது இறந்து போனவர்  விஷம் அருந்திதான் இறந்து போயிருக்கிறார் என்றும், விபத்தில் அவர் உயிரிழக்கவில்லை என்றும் ஜார்ஜிடம் கூறுகிறார். ஆனால், இந்த உண்மையை விதார்த்திடம் கூறாமல் மறைக்கிறார் ஜார்ஜ்.

    லாரி ஏற்றியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், இதில் யாராவது ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று விதார்த்திடம் ஜார்ஜ் கூறுகிறார். ஆனால், இந்த விஷயம் எப்படியோ போலீசுக்கு தெரியவர, லாரியில் சென்ற அனைவர் மீதும் வழக்கு பதியப்படுகிறது.



    இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? அல்லது அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? ஜார்ஜ் ஏன் விதார்த்திடம் உண்மையை மறைத்தார்? அதன் பின்னணில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கிராமத்தில் வாழும் ஒரு இளைஞனாக விதார்த் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாசத்தை காட்டுவதிலும், பிரச்சனைகளை சமாளிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிக்கும் விதார்த், தனது வயது குறித்து கேலி செய்பவர்களிடம் சண்டை பிடிப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

    ரவீணா தனது முதல் படத்திலேயே நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். அவரது நடிப்பும், முக பாவனைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. ரவீணாவுக்கு படத்தில் அதிகளவில் நடிப்பு இல்லாவிட்டாலும், தான் வரும் காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.



    படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் காரணமான ஜார்ஜ், வழக்கறிஞராக புதுமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மற்றபடி ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அனைவருமே படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

    ஒரு ஆட்டை பலிகொடுக்க செல்லும் ஒரு குடும்பம் ஒரு விபத்தால் என்னென்ன பிரச்சினைகள் சந்தித்தது என்பதை இப்படத்தில் இயக்குனர் சுரேஷ் சங்கையா. சொல்லியிருக்கிறார். உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதை இப்படத்தில் வித்தியாசமான கதையுடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

    வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் நாயகனே வசனங்கள் என்று கூறுமளவுக்கு, அந்த பகுதி மக்களின் பேச்சுக்கு ஏற்றபடி வசனங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு.  ஜார்ஜின் கதாபாத்திரத்தை முழுமையாக்காதது படத்தில் ஒரு குறையாக கூறலாம். மற்றபடி அன்பு, பாசம், வளர்ப்பு பிராணிகள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு என சிறுசிறு காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கிறது.

    ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஆர்.ரகுராமின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    தாஜ் இயக்கத்தில் நட்டி நடராஜ் - ரூஹி சிங் - அர்ஜுனன் நடிப்பில் வெளியான போங்கு படத்தின் விமர்சனம்.
    நட்டி நடராஜ், ரூஹி சிங், அர்ஜுனன் மூன்று பேரும் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். எம்.எல்ஏ. ஒருவர் தனது மகளுக்கு கார் ஒன்றை பரிசளிக்க எண்ணி, நட்டி பணிபுரியும் கார் கம்பெனியில் ஒரு காரை புக் செய்கிறார். அந்த காரை எம்.எல்.ஏ-வின் வீட்டில் கொண்டு டெலிவரி செய்ய நட்ராஜ், அர்ஜுன் இருவரும் செல்லும்போது, மர்ம நபர்கள் வழிமறித்து அந்த காரை கடத்திச் செல்கின்றனர்.

    அந்த காரை நட்ராஜும் அர்ஜுனனும் சேர்ந்துதான் கடத்தியதாக போலீஸார் இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் அந்த கார் கம்பெனியில் இருந்து ரூஹி சிங், நட்ராஜ், அர்ஜுனன் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அதேவேளையில் அவர்கள் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி கருப்பு முத்திரையும் குத்தப்படுகின்றனர்.



    இதையடுத்து ஜெயிலில் இருக்கும் இருவரையும் ரூஹி சிங் பெயிலில் எடுக்க, தனது ஜெயில் நட்பின் மூலம் நட்டி தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றார். அதில் முதல் திருட்டிலேயே அவருக்கு ரூ.10 கோடி பணமும் கிடைக்கிறது. அதன் பின்னர் முனிஸ்காந்தும் இவர்களது கூட்டணியில் சேருகிறார்.

    இந்நிலையில், மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா கைவசம் இருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி நட்டிக்கு உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்லும் நட்டி, சரத் லோகித்ஸ்வாவின் கார்களை கடத்த திட்டம் போடுகிறார். அப்போது நட்டியிடம் இருந்து மர்மநபர்கள் கடத்தி சென்ற காரும் அங்கு இருக்க, அதை பார்த்த நட்டி அந்த காரையும் மீட்க போராடுகிறார்.



    இறுதியில், நட்டி தன்னிடமிருந்து கடத்தப்பட்ட காரை மீட்டு அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்தாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் உள்ள 10 சொகுசு கார்களையும் அவர் திருடினாரா? நட்டியிடம் இருந்து சரத் லோகித்ஸ்வா ஏன் காரை கடத்தி வந்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.

    ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்ற கதைக்களம். அது சிறப்பாக அமைந்ததால், அதற்கேற்றவாறு இவரது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நட்டியின் படபட பேச்சும், வசனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.



    நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை ரூஹி சிங்கிற்கு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன் காமெடியிலும், நடிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். முனிஸ்காந்த் அவருக்கே உரிய பாணியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    சரத் லோகித்ஸ்வா ஒரு மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டிக்கு எதிராக அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளிலே வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் அவரது நடிப்புக்கு தீனி போடும்படியான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நட்டி, அர்ஜுனின் கதாபாத்திரம் திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். தனது வாழ்க்கையை கெடுத்த சரத் லோகித்ஸ்வாவை பழிவாங்கும் நட்டியின் துடிப்பும், அதற்கேற்ற காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது.

    மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘போங்கு' கெத்தான கேங்கு.
    மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது தவறானது. மாட்டிறைச்சி சாப்பிட்டதால் நீங்கள் ஒன்றும் ‘ஹீரோ’ இல்லை என்று நடிகை கஸ்தூரி கண்டித்து உள்ளார்.
    நடிகை கஸ்தூரி டுவிட்டரில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்கள் மத்தியில் சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்கு தயாராக இருங்கள் என்று பேசியதையும் டுவிட்டரில் விமர்சித்தார். வருவேனா மாட்டேனா என்று வருட கணக்கில் யோசிக்கிறார். போர் போர் அக்கப்போர் என்று அவர் குறிப்பிட்டார்.

    இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி காரசாரமாக மோதிக்கொண்டனர். இந்த நிலையில் மாட்டிறைச்சி குறித்தும் சர்ச்சை கருத்தை நடிகை கஸ்தூரி வெளியிட்டு இருக்கிறார்.

    மாட்டிறைச்சி தடை குறித்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவிலும், தமிழகத்திலும் மாட்டிறைச்சி திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-



    “மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தியது தவறானது. மாட்டிறைச்சி திருவிழா என்பது தவறான சிந்தனை. ஒரு தரப்பினரிடம் கோபத்தை தூண்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாணவர்கள் மீது தாக்குதலும் நடந்து இருக்கிறது. இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதை நான் எதிர்க்கிறேன்.

    ஆனால் எனது உணவுப்பழக்கம் என்னை சுற்றி இருக்கும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. மாட்டிறைச்சி சாப்பிட்டதால் நீங்கள் ஒன்றும் ‘ஹீரோ’ இல்லை. முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?. ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். அவர்களுக்கு வன்முறை கைகொடுக்கவில்லை”.

    இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

    நடிகை கஸ்தூரி கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அவரை கண்டித்து பலர் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
    சொத்து பிரச்சினையால் சினிமா தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மருமகள் புகார் கூறியிருக்கிறார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த தாசரி நாராயணராவ் இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மரணம் அடந்தார். அவருக்கு வயது 75. இவர் 151 படங்களை டைரக்டு செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 53 படங்களை தயாரித்து இருக்கிறார். 2000-ஆம் ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

    இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். தாசரி நாராயணராவ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று முன்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கான அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திரைத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் தாசரி நாராயணராவ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மருமகள் சுசீலா புகார் கூறியுள்ளார்.



    தாசரி நாராயணராவின் மூத்த மகன் ஹரிபிரபுவை சுசீலா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். ஆனாலும் இன்னும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. தாசரி நாராயணராவ் மரணம் குறித்து சுசீலா நிருபர்களிடம் கூறியாதாவது:-

    “நான் தாசரி நாராயணராவை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். அப்போது அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். எனது மகன் நாராயணாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதியும் அளித்தார். இந்த நிலையில் திடீரென்று அவர் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    எனக்கும் தாசரி நாராயணராவ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. தாசரி நாராயணராவ் சொத்தில் எனக்கும் எனது மகனுக்கும் உரிய பங்கை தருவதாக உறுதி அளித்து இருந்தார். சிறிய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி இருப்பதாகவும் அது முடிந்ததும் சொத்தை பிரித்து தருகிறேன் என்றும் என்னிடம் கூறியிருந்தார். எனவே அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி'' மகத்தான வெற்றி! எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.
    இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி'' மகத்தான வெற்றி! எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.

    பலருடைய எதிர்ப்பையும் மீறி, "அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் வழங்கினார்.

    படம் வெளிவரும் வரை இளையராஜாவுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலை ("ரீரிக்கார்டிங்'') நடந்தபோதுகூட "இளையராஜாவுக்கு ரீரிகார்டிங் தெரியவில்லை. படத்தைக் கெடுக்கிறார்'' என்று சிலர் கூறினார்கள்.

    பஞ்சு அருணாசலத்துக்கும், டைரக்டர் தேவராஜ×க்கும் இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பிடித்திருந்தது. எனவே, இளையராஜா பற்றி குறை சொன்னவர்களிடம் "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். இந்தப்பக்கம் வராதீர்கள்'' என்று கண்டிப்புடன் சொல்லி அவர்களை விரட்டி அடித்தார், பஞ்சு அருணாசலம்.

    பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன், ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம், இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பற்றி குறை கூறியிருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வி, "அந்தப் பையனை எனக்குத் தெரியும். என் ரெக்கார்டிங்கில் வாசித்து இருக்கிறான். அவனுக்கு இசை பற்றி எல்லாம் தெரியும். தொந்தரவு செய்யாமல் அவனை விட்டு விடுங்கள். படத்துக்கு என்ன வேண்டுமோ அது வந்துவிடும்'' என்று சூடான பதில் கூறியிருக்கிறார்.

    இளையராஜாவின் இயற்பெயர் ராஜையா. அதை "ராஜா'' என்று மாற்றியவர் தன்ராஜ் மாஸ்டர்.

    இப்போது "அன்னக்கிளி'' டைட்டிலில் பெயரை எப்படிப் போடுவது என்று கேள்வி எழுந்தது. கச்சேரிகளில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயர் பிரபலமாகியிருந்ததால், அந்தப் பெயரையே பயன்படுத்தலாம் என்று கூறினார் இளையராஜா.

    "அது, ஆலத்தூர் பிரதர்ஸ், டி.கே.எஸ். பிரதர்ஸ் என்பது மாதிரி ரொம்பப் பழைய ஸ்டைல்!'' என்று பஞ்சு அருணாசலம் கூறினார். சற்று நேரம் யோசித்து விட்டு, "உன் பெயர் ராஜா. ஏற்கனவே, சினிமாவில் ஏ.எம்.ராஜா இருக்கிறார். பின்னணி பாடுவதுடன், சில படங்களுக்கு மிïசிக் டைரக்ஷனும் செய்திருக்கிறார். அவர் பெரிய ராஜா. நீ இளையராஜா! உன் பெயரை இளையராஜா என்று வைத்துவிடுவோம்''

    என்றார்.அவர் சூட்டிய வேளை நல்ல நேரமாகவும், பெயர் ராசியான பெயராகவும் அமைந்தது. ஒருசில நாட்களிலேயே "இளையராஜா'' என்ற பெயர் தமிழக மக்களின் செல்லப் பெயராக அமைந்தது.

    சிவகுமாரும், சுஜாதாவும் ஜோடியாக நடித்த "அன்னக்கிளி'' 14-5-1976ல் ரிலீஸ் ஆயிற்று.

    எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. எனவே, "அன்னக்கிளி''க்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள்.

    படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, "படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசை அமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன'' என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின.

    இதனால், தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் "அன்னக்கிளி'' திரையிடப்பட்டது.

    15 நாட்களில் "அன்னக்கிளி'' திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் "ஹவுஸ்புல்'' ஆனது.

    "அன்னக்கிளி'' இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. "அன்னக்கிளி ஒன்னைத்தேடுது'', "மச்சானைப் பார்த்தீங்களா'', "நம்ம வீட்டுக் கல்யாணம்'' முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.

    "அன்னக்கிளி'' 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

    "அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

    "அன்னக்கிளி இசைத்தட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. கடைகளில் முன்பதிவு செய்து, இசைத்தட்டை வாங்கினார்கள்.

    அப்போது டெலிவிஷன் கிடையாது. ரேடியோ தான். அந்த சமயம் அன்னக்கிளி பாடலை ரேடியோவில் ஒலிபரப்பினால் ஒரு வீட்டில் பாடலை வைப்பார்கள். அது அடுத்த வீடு, அடுத்த வீடு என்று தொடர்ந்து தெரு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும். இதை நான் மலயப்பநாயகன் தெருவில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அதுவும் 6 மாதங்களுக்கு மேலாக நானே நேரடியாக கண்டு இருக்கிறேன்.

    அன்னக்கிளிக்கு நான்தான் இசை அமைத்தேன் என்பது  இரண்டு மூன்று வீடுகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    மக்கள் அந்த பாடல்களை கேட்க, கேட்க `எந்த பாடல் நன்றாக இருந்தாலும் அதை ரசிப்பார்கள்' என்று எண்ணினேனே தவிர, கர்வப்படவில்லை. சந்தோஷப்பட்டேன்.

    என் பெயர் வெளியில் பெரியதாக பேசப்பட்டாலும், இன்று ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அவர்களையே சுற்றிவரும் கூட்டம்போல் அன்று

    இல்லை.நானும் பெயர் வந்து விட்டது என்பதற்காக ஜி.கே.வி.யை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று எண்ணவில்லை. கிட்டாரைத் தூக்கிக்கொண்டு, அவர் எங்கு போனாலும் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.

    போடிநாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னைப்பார்க்க அதிகமான கூட்டம். கூட்டம் கலைய வேண்டும் என்றால் நான் வந்து எனது முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.

    நானும் கூட்டத்தினர் முன்பு வந்து நின்றேன். ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தனர். `என்னங்க! இன்னமும் இளையராஜாவை காணோம்' என்று ஒருவர் கேட்டார்.

    என் அருகில் இருந்தவர், `இதோ இவர்தான்!' என்று என்னை சுட்டிக்காட்டினார்.

    உடனே கூட்டத்தினர் கையை முகவாய்கட்டையில் வைத்து, "ஹூம்... இந்த பையன்தானா!'' என்று உற்சாகம் குறைந்தவர்களாக, காற்றுப்போன பலூன் மாதிரி ஆனார்கள்.

    பெயருக்கு ஏற்றபடி ஒரு பெரிய அழகான வாலிபனாக எதிர்பார்த்தவர்களுக்கு, சின்னப்பையனாய்... பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றம்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் அறிமுக பாடல் இணையதளத்தில் கசிந்துள்ளது.
    ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதை படக்குழுவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் 1 நிமிட வீடியோ தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இந்த பாடலில் ரஜினி பேசும் வசனமும் அடங்கியுள்ளது. எதிரி ஒருவர் ‘டேய் காலா, உன் காலை எடுத்து வச்ச’ என்று கூற, அதற்கு ரஜினி, நான் காலை வைக்கிறதும், வைக்காததும், உன் தலை இருக்கிறதும் இல்லாததும் உன் கைலதாண்டா இருக்கு’ என்று வசனம் பேசுகிறார்.



    அதேபோல், இந்த பாடலில் ‘கபாலி’ அறிமுக பாடலின் சாயலும் இருப்பதாகவே தெரிகிறது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பு தொடங்கி 5 நாட்களே ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர்தான் இப்பாடல் காட்சியை படம்பிடித்து இணையதளத்தில் கசிய விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி, நானா படேகர் உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தை சமூக அக்கறையுடன்தான் இயக்கியுள்ளதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறியுள்ளார்.
    கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

    இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, ‘வஜ்ரம்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.



    இந்நிலையில், இப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். இதற்கு படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறும்போது, ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் சுவாதியின் கதாபாத்திரத்தை நாங்கள் தவறாக சித்தரிக்கவில்லை. இப்படத்தை சமூக அக்கறையுடன்தான் இயக்கியுள்ளேன். படத்தை எடுத்து முடித்ததும் சுவாதி மற்றும ராம்குமாரின் பெற்றோருக்கு இப்படத்தை திரையிட்டு காட்டுவோம் என்று கூறியுள்ளார். 
    சந்தானமும், எம்.ராஜேஷும் விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்திலிருந்து ’வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ வரை அனைத்து படங்களிலும் சந்தானம் எப்படியாவது இடம்பெற்றிருப்பார். அந்த படங்களில் எல்லாம் சந்தானத்தின் காமெடி பெரியதளவில் பேசப்பட்டது. சந்தானம் காமெடிக்காகவே அந்த படங்கள் எல்லாம் பேசப்பட்டன என்றே சொல்லலாம்.

    அதன்பிறகு, சந்தானம் ஹீரோவாகவே இனிமேல் காமெடியனாக நடிக்கமாட்டேன் என்று அறிக்கை விட்டார். இதனால், எம்.ராஜேஷ் அடுத்ததாக ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை ஜி.வி.பிரகாஷை வைத்து எடுத்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. இதனால், மறுபடியும் சந்தானம் பக்கம் சென்றுள்ளார் எம்.ராஜேஷ்.



    இந்த முறை சந்தானத்தை தன்னுடைய படத்தில் ஹீரோவாகவே ஆக்கிவிட்டார் எம்.ராஜேஷ். சந்தானத்திடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்துக்காக அனுஷ்காவை போல் உடல் எடையை மாற்ற முயற்சி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகையர் திலகமான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இப்படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் முறையில் சாவித்ரியின் உடம்பு அளவுக்கு குண்டாக்கவிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷை உடல் எடையை கூட்டும்படி இயக்குனர் நாக் அஸ்வின் கூறியிருந்தாராம்.

    ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் சமயத்திலும் அவரது உடல் எடை கூடவே இல்லையாம். இனிமேல், வேறு நடிகையை தேடிச் செல்லமுடியாது என்று நினைத்த படக்குழு, வேறு வழியில்லை என்பதுபோல் கீர்த்தி சுரேஷை வைத்தே படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.



    தற்போது கீர்த்தி சுரேஷ் இரட்டை ஜடை போட்டு படப்பிடிப்பில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சாவித்ரி சாயல் இருந்தாலும் அவரைப்போல் குண்டாக இல்லை என்றொரு கருத்து சமூக வலைத்தளத்தில் பரவியது.

    இதனால், ‘பாகுபலி-2’ படத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை கிராபிக்ஸ் முறையில் ஒல்லியாக மாற்றியதுபோல, இப்படத்தில் ஒல்லியாக இருக்கும் கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸை பயன்படுத்தி குண்டாக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    கரூர் ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சிகளை போன்று வார்டு வாரியாக மன்றங்களை மாற்றி அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என 20 ஆண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது. அதற்கு தற்போது விடை கிடைக்கும் என பொதுமக்களும், ரசிகர்களும் நம்புகிறார்கள்.

    கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் நாள் சந்திப்பின்போது நான் ஒருவேளை அரசியலுக்கு வர நேரிட்டால் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவர்களை உடன் வைத்திருக்க மாட்டேன் என சூளுரைத்தார்.

    பின்னர் இரு தினங்கள் கழித்து ரசிகர்களை சந்தித்த போது தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை. போர் வரும் போது பார்த்து கொள்வோம் என அரசியலுக்கு வருவதை சூசகமாக தெவித்தார். இது அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. தலைவர், 100 சதவீதம் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது என அடித்து சொல்கிறார்கள்.


    எனவே மன்றப்பணிகளில் வழக்கத்துக்கு மாறாக அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர் மன்றங்கள் உள்ளன. இதில் 600-க்கும் மேற்பட்ட மன்றங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மன்றங்கள் ரஜினியின் தடையால் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் மன்ற கட்டுப்பாடுகளுடன் அவைகள் முறையாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

    ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள அவரது ரசிகர்கள் மன்றங்களை முறைப்படுத்தும் பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் போன்று வார்டுக்கு ஒரு மன்றம் என்ற ரீதியில் மன்றங்களை முறைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்த பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் மாவட்ட தலைமை மன்றத்துடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.


    இதுபற்றி மன்ற தரப்பில் கூறும்போது, தலைவர் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மக்களும் எப்போது வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கொண்ட பிற கட்சி நிர்வாகிகள் புதிய மன்றங்கள் தொடங்க அனுமதி கிடைக்குமா? என கேட்டு வருகிறார்கள்.

    ஆனால் யாருக்கும் புதிய மன்றங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. தினமும் தலைமை மன்றத்துக்கு மன்றப்பணிகள் தொடர்பாக தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. மாநில தலைமை மன்றத்தில் இருந்து எந்த அறிவுரையும் கூறவில்லை. ரசிகர்களாகதான் மன்றத்தை முறைப்படுத்துகின்றனர். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என தலைவர் தெரிவித்துள்ளார். எனவே நாங்கள் போருக்கு தயாராகிறோம் என்றனர்.

    விஜய் பிறந்தநாளில் அவர் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    ‘தெறி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தையும் அட்லியே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பா படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

    இப்படத்தின் தலைப்பு இன்னமும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.



    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 100-வது படமாகும். இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×