search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினி வரலாறு"

    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டியுனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜூம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை  தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

    இதன் காரணமாக "அன்லக்கி'' (ராசி இல்லாதவர்) என்று பெயர் பெற்றார்!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜி.கே.வி.க்கு நிறைய படங்கள் வந்தன. இரவு இரண்டு மணி வரை கம்போசிங் நடக்கும். காலை 7 மணிக்கு பாடல் பதிவு! இப்படி எத்தனையோ மாதங்கள் நடந்துள்ளன.

    சென்னையில், இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு, வெளிநாட்டுக் கிட்டார் வந்திருந்தது. விலை 150 ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கி விட்டேன்.

    பாடல்களுக்கு நானும், பிலிப்சும் கிட்டார் வாசிப்போம். பாட்டின் இடையே சில சமயம் பிலிப்ஸ் வாசிப்பார்.

    அவர் கைக்கு நல்ல நாதம் அமைந்திருந்தது. அதே கிட்டாரை வேறு யாராவது வாசித்தால் அந்த நாதம் வராது. சில பேருடைய கைவாகு அப்படி. அதேபோல் வாத்தியமும் அவர்களுக்கு படிய வேண்டும். குதிரைகளில் எல்லோரும் சவாரி செய்து விட முடியாது. அது சிலருக்குத்தான் கட்டுப்படும்.

    அதே போலத்தான் வாத்தியங்களும், இசையும், பாட்டும், கலைகளும், பண்பும், ஒழுக்கமும், தவமும்!

    நாம் தவமிருப்பதல்ல; தவம் நமக்கு அமைய வேண்டும்.

    ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைக்கும் படங்களின் டைரக்டர்கள் வந்து, கதையைச் சொல்லி, பாடல்கள் இடம் பெற வேண்டிய இடங்களையும் சொல்லி விட்டுச் செல்வார்கள். அந்த வேலை முடியும் வரை என் பணியைச் செய்து விட்டு, வீட்டுக்கு வருவேன். பாடலின் அந்த கட்டத்திற்கு நான் இசை அமைக்க வேண்டியிருந்தால் என்ன செய்வேன் என்று யோசிப்பேன். இசை அமைத்துப் பார்ப்பேன். பாடலை கம்போஸ் செய்து பார்ப்பேன். இப்படியே, நிறைய டிïன்கள் சேர்ந்து விட்டன!

    பாஸ்கர், பகல் நேரத்தில் சும்மா இருக்க முடியாது. வழக்கமாக சினிமா கம்பெனிகளுக்குப் போய் வருவார். அதில், டைரக்டர் டி.என்.பாலுவுக்கு உதவியாளராக இருந்த முருகானந்தம், பாஸ்கருக்கு பழக்கமாகி நண்பர் ஆனார். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்க போவதாகவும், அதற்கு நாம்தான் இசை அமைக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சொன்னார்.

    படக்கம்பெனிக்கு "வலம்புரி மூவீஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டது. ராயப்பேட்டையில் ஆபீசும் திறக்கப்பட்டது.

    இசை அமைப்புக்கு அட்வான்சாக ஐந்தாயிரம் ரூபாய் செக்கை, முருகானந்தம் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் காலத்தில் பெரிய இசை அமைப்பாளர்களுக்கு முழு இசை அமைப்புக்கும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள். இவர், அட்வான்சாகவே ஐந்தாயிரம் கொடுக்கிறாரே, பெரிய புரொடிïசர்தான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    இந்த செக்கை பாங்கியில் போடாமல் நானே வைத்திருந்தேன். ரெக்கார்டிங்கில் வாசிக்கும்போது, வலம்புரி மூவிஸ் கொடுத்த செக்கை நண்பர்களிடம் அவ்வப்போது பெருமையுடன் காட்டுவேன். அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஆனால், வலம்புரி மூவிஸ் படம் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை.

    இதன் பிறகு, இன்னொரு பட அதிபரிடம் பழகி விட்டு பாஸ்கர் வந்தார். அந்தப் படத்திற்கு அடுத்த நாள் ஆழ்வார்பேட்டை ஆனந்த் ஓட்டலில் கம்போசிங் என்று சொன்னார்.

    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்த நாள் ஆனந்த் ஓட்டலுக்குப் போனோம். தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் சேதுராமன் ஆகியோர் ஓர் அறையில் இருந்தார்கள். டைரக்டர் படத்தின் கதையைச் சொல்லி, "பூஜைக்கு ஒரு காதல் பாட்டை பதிவு செய்யலாம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்தேன். டைரக்டருக்கும் பிடித்திருந்தது.

    பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக முடிவு செய்யப்பட்டது. "பாடல் பதிவுக்கு ஸ்டூடியோ வாடகை, பாடகர்கள் இசைக் குழுவினர் சம்பளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று பட அதிபர் கேட்க, அவருக்கு பட்ஜெட் கொடுக்கப்பட்டது.

    பாடல் பதிவு நாள். இசைக் குழுவினருடன் ஒத்திகை பார்த்தோம்.

    இடையிடையே இசைக் குழுவினர், "பணம் வந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், காலையில் இருந்தே புரொடக்ஷன் மானேஜர், புரொடிïசர் எவரையுமே காணோம்!

    நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பணம் வந்த பாடில்லை. பட அதிபர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனந்த் ஓட்டலில் அவர் தங்கியிருந்த ரூம் காலி செய்யப்பட்டிருந்தது!

    இதற்கிடையே பாடுவதற்கு பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வந்து விட்டார்கள். அவர் களுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

    பணம் வந்து சேர வில்லை. என்ன செய்வ தென்று ஆலோசித்தோம்.

    "இவ்வளவு நேரம் சிரமப்பட்டு, பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலை பதிவு செய்வோம். பணம் கொடுத்த பிறகு அவரிடம் பாடலை கொடுப்போம்'' என்று முடிவு செய்து, அதை ஸ்டூடியோவுக்கு தெரிவித்தோம். ஒலிப்பதிவு என்ஜீனியரும் ஒப்புக் கொள்ளவே, பாடல்

    பதிவாகியது.ஆனால் இன்று வரை பணமும் வரவில்லை; பட அதிபரும் வரவில்லை.

    அதிலிருந்து, இசைக் கலைஞர்கள் மத்தியில் என்னை "அன்லக்கி மிïசிக் டைரக்டர்'' (ராசியில்லாத இசை அமைப்பாளர்) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

    அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.

    வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.

    இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், "வாலி'' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், "உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?'' என்று கேலி செய்தார்.

    உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, "வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?'' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.

    அதைப் படித்த ஆசிரியர், "பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!'' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

    ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.

    நண்பர்களுடன் சேர்ந்து "நேதாஜி'' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் "கல்கி'', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.

    ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் "சில்பி'' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். "கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்'' என்று சில்பி ஆலோசனை கூறினார்.

    இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.

    வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, "அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே'' என்று வாலியைப் பாராட்டியதுடன், "பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்'' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.

    கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.

    சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.

    ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.

    `மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.

    அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

    நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.

    ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.

    காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.

    ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது "கமர்ஷியல் ஆர்ட்.'' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.

    ஸ்ரீரங்கத்தில், "வாலி பப்ளிசிட்டீஸ்'' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. "கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.''

    எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.''

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.
    ×