செய்திகள் (Tamil News)

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பில்கேட்ஸ் முதலிடம், டிரம்ப் பின்னடைவு

Published On 2017-03-21 00:52 GMT   |   Update On 2017-03-21 00:52 GMT
போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் சரிவை சந்தித்துள்ளார்.
வாஷிங்டன்:

போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் சரிவை சந்தித்துள்ளார்.

போர்பஸ் பத்திரிக்கை இந்தாண்டுக்கான உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்ததாக வாரன் பப்பெட் 75.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ள சொத்துக்களுடன் இரண்டாமிடம் வகிக்கிறார்.

முதல் பத்து இடங்களை பொருத்தவரை சமூகவலைதள அதிபர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அமேசான் இணைய வர்த்தக நிறுவன அதிபர் ஜெப் பிஸோஸ் மூன்றாமிடமும், பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பெர்க் 5-ம் இடமும், ஆரக்கிள் இணை நிறுவனர் லார்ரி எல்லிசன் 7-வது இடமும் பிடித்துள்ளனர்.

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டிலிருந்து 13 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 565 கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்ததாக சீனாவில் 319 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டில் இருந்து 220 இடங்கள் பின்தங்கி பட்டியலில் 544-வது இடத்தில் உள்ளார்.  

Similar News