செய்திகள் (Tamil News)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 ஆயிரத்து 660 கன அடியாக அதிகரிப்பு

Published On 2018-07-28 04:26 GMT   |   Update On 2018-07-28 04:26 GMT
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 ஆயிரத்து 660 கனஅடியாக அதிகரித்துள்ளது. #MetturDam
சேலம்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த இரு அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அவற்றுக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு மேட்டூருக்கு வருகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரத்து 780 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 26 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தள்ளது.

ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியதால் அந்த அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி அற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 61 ஆயிரத்து 291 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 68 ஆயிரத்து 660 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து நேற்று 60 ஆயிரத்து 574 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 68 ஆயிரத்து 490 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று 120.31 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.30 அடியாக இருந்தது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
Tags:    

Similar News