செய்திகள் (Tamil News)

உடல்நலக் குறைவால் மைதானத்தில் இருந்து வெளியேறிய தென்ஆப்பிரிக்க வீரர்

Published On 2017-07-29 11:19 GMT   |   Update On 2017-07-29 11:19 GMT
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின்போது உடல் நலக்குறைவால் தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, தென்ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வெர்னன் பிலாண்டருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். 12 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில் அவர் வெளியேறியது தென்ஆப்பிரிக்க அணிக்கு பாதகமாக அமைந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோன்ஸ் சதம் அடித்து இங்கிலாந்தின் ஸ்கோரை 353 ரன்களாக உயர்த்தினார்.

மைதானத்தை விட்டு வெளியேறி முதலுதவி பெற்றபோதிலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பிலாண்டர் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் உடல்நலம் பெற்று பேட்டிங் செய்ய களம் இறங்கினார். பிலாண்டர் களம் இறங்கியது தென்ஆப்பிரிக்கா அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News