செய்திகள் (Tamil News)
பிரியங்கா

கேரள சட்டசபை தேர்தல் : பிரியங்கா 2 நாள் சூறாவளி பிரசாரம் தொடங்கினார்

Published On 2021-03-31 02:12 GMT   |   Update On 2021-03-31 02:12 GMT
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கட்சிகள் ஆளுகிற கேரள மாநிலத்தில், தமிழக சட்டசபை தேர்தலுடன் வரும் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:

கேரள சட்டசபை தேர்தலையொட்டி பிரியங்கா காந்தி 2 நாள் சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். வாகன பேரணிகள் நடத்திய அவர் கை குலுக்கி பொதுமக்களை கவர்ந்தார்.

முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கட்சிகள் ஆளுகிற கேரள மாநிலத்தில், தமிழக சட்டசபை தேர்தலுடன் வரும் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

2 நாள் சூறாவளி பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

அதன்பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் காயங்குளம் சென்றார். இந்த காயங்குளம் தொகுதியில் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பிரதிபா ஹரி, அங்கு மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அரிதா பாபுதான், கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மிக இளைய வேட்பாளர். அவருக்கு வயது 26.

அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில், காயங்குளத்தில் பிரியங்கா காந்தி வாகன பேரணி நடத்தினார். மஞ்சள் நிற சல்வார் கமீஸ் அணிந்திருந்த பிரியங்கா திறந்த வாகனத்தில், காயங்குளம் காங்கிரஸ் வேட்பாளர் அரிதா பாபுவுடன் சென்றார்.

சாலையின் இருவோரங்களிலும் நின்ற பொதுமக்களை நோக்கி பிரியங்கா உற்சாகமாக கையசைத்தார். பொதுமக்களில் சிலர் பிரியங்காவுடன் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர்.

பிரியங்கா சாலையில் நடந்து சென்று, ஓரங்களில் நின்றிருந்த மக்களுடன் மகிழ்ச்சியோடு கை குலுக்கினார். இது வாக்காளர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்தது.

இந்த வாகன பேரணி முடிந்த உடன் பிரியங்கா காந்தி கருநாக பள்ளி சென்று அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அவர் குன்னத்தூரிலும், சவாரா தொகுதியிலும் தெருமுனை பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் கொட்டாரக்கரா, கொல்லம் ஆகிய இடங்களிலும் வாகன பேரணிகளை நடத்தினார். பிரியங்காவின் பிரசாரம் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
Tags:    

Similar News