செய்திகள் (Tamil News)

குடியரசு தின விழாவிற்குச் சென்ற இரு மாணவர்கள் மின்னல் தாக்கி பலி

Published On 2017-01-26 13:45 GMT   |   Update On 2017-01-26 13:46 GMT
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக பள்ளிச் சென்ற இரண்டு மாணவர்கள் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாசி நகரத்தில் உள்ள பள்ளிகளில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென இடி மின்னல் உடன் மழை பெய்தது. மழையில் இருந்து தப்பித்துக் கொள்ள மாணவர்கள் அருகில் உள்ள மரத்தின் அடியில் பாதுகாப்பாக நின்றனர். அப்போது திடீரென மாணவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு 15 வயது இருக்கும் என விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறினார்கள்.

பாசி நகரத்தின் மோகன்புரா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மழைக்காக அருகில் உள்ள மரத்தின் அடியில் பாதுகாப்பாக நின்றனர். அவர்களையும் மின்னல் தாக்கியது. இதில் 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் எம்.எம்.எஸ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டோங்க் பகுதியில் வயல்வெளிக்குச் சென்ற விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

அஜ்மீரில் உள்ள அரசு பள்ளியில் மின்னல் தாக்கியது. இதில் 7 மாணவிகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் லேசான காயம் அடைந்தனர்.

Similar News