செய்திகள் (Tamil News)

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து டிசம்பர்-2 வரை நீட்டிப்பு

Published On 2016-11-24 12:01 GMT   |   Update On 2016-11-24 12:01 GMT
நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண விலக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் தொடர்ந்து வங்கிகளில் திரண்டனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். போதிய பணம் இல்லாததால் பல ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக பல சுங்கச்சாவடிகளில் பிரச்சினை உருவானது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பிரச்சினையை சமாளிப்பதற்காக சில இடங்களில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.

இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு செல்ல, சுங்க கட்டணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அது நவம்பர் 14, நவம்பர் 18 மற்றும் நவம்பர் 24 என அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

இந்த சலுகைக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், சுங்க கட்டணம் ரத்து டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிப்பதாக நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகன போக்குவரத்து சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் இருந்து சுங்கச் சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், எஸ்.பி.ஐ. மற்றும் பிற வங்கிகளின் உதவியுடன் சுங்கச் சாவடிகளில் போதிய ஸ்வைப் மெஷின்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க கட்டணம் வசூலித்தால் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் கூறிய நிலையில், சுங்க கட்டண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News