என் மலர்
புதுக்கோட்டை
- பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.
- ஆலங்குடி அருகே 2-வது நாளாக பதட்டம் நீடிப்பு.
- சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக மீண்டும் மோதல்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த லோகநாயகி அம்பாள் உடனுறை பாலபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்துவது சம்பந்தமாக 2 சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை அம்பாள் திருவீதி உலா நடைபெற இருந்த நிலையில் சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதனை தடுக்க சென்ற ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த இன்ஸ்பெக்டரை பார்த்து நலம் விசாரித்தனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோவிலூரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதல் காரணமாக இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கோவிலில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- 2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.
- தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் இந்தி தான்.
2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களையே நியமிக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- மோதிய வேகத்தில் கார் அருகில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.
- விபத்து பற்றிய தகவல் அறிந்த நமணசமுத்திர போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் தனது மனைவி அருணா, மகள் ரம்யா, ரம்யாவின் மகள்கள் மகிழினி, கமிழினி ஆகி யோருடன் காரில் இன்று காலை காரைக்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
கார் புதுக்கோட்டை அருகே உள்ள நமண சமுத்திரம் காவல் நிலையம் அருகே புதுக்கோட்டை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் அருகில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.
இதில் 2 கார்கள், சரக்கு வாகனம் அம்பளம் போல் நொறுங்கியது. இதில் ஒரு காரில் வந்த தம்பதியினர் செந்தமிழ் செல்வன், அருணா சரக்கு வாகன கிளீனர் இலுப்பூரை சேர்ந்த சுதாகர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த நமணசமுத்திர போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இறந்தவர்கள் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து நமணசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருகிற 10-ந்தேதி விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி விடுமுறை.
- விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வரும் 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
10-ஆம் தேதி நடைபெறும் அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போரல் நடைபெறும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
- ஜல்லிக்கட்டில் 750 காளைகள் கலந்து கொண்டன.
- காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு இப்பகுதியைச் சேர்ந்த செங்கவள நாட்டார்களால் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கலந்து கொண்டன.
காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்ஸி மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களு க்கும் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு பரிசுகள் வழங்கினார். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
- உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க. தலையிடவில்லை
* உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க.வின் பின்புலம் எதுவும் இல்லை என்றார்.
- 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
- திருமணமான சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூகநலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி (21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- பெருமாளை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக அரிமளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மாணவிகளின் வாக்குமூலத்தை வீடியோவாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
- விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
- பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது,
கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலை தொடுவதாகவும், மேலும் முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.
மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
- காவலில் எடுக்கப்பட்ட 5 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி( வயது 58) அ.தி.மு.க. பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர், திருமயம் பகுதியில் கல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்காக போராடி வந்தார்.
மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 17-ம் தேதி அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்கள், ராசு ராமையா, ராசுவின் மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர்களை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
இதற்கிடையே ஜகபர் அலியின் மனைவி மரியம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கைதான ராமையா மற்றும் ராசு ஆகியோருக்கு சொந்தமான துளையானூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கல் குவாரிகள், வீடுகள் மற்றும் திருமயத்தில் உள்ள ராசுவுக்கு சொந்தமான நகை அடமானக் கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் திருமயத்தில் உள்ள லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
இதில் குவாரிகள் மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கனிமவள முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.






