என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை.
    • அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது.

    தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் அப்போதே தண்டிக்கப்பட்டனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்துக்கு பதில் இல்லை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்பு திறமையான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர். அவரை போல யாருமே இல்லை. அந்த பதவிதான் அவருக்கு நல்ல பொருத்தம். அவர் எதிர்க்கட்சி தலை வராக வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் மது கிடைக்காது. ஆனால் தற்போது 24 மணி நேரமும் கிடைக்கிறது. கனிமொழி பலமுறை பொய்மொழி ஆகி விடுகிறார். அவர் ஸ்டிக்கர் ஒட்டும்பணியை சிறப்பாக செய்கிறார். நல்ல ஆட்சி வேண்டுமென்றால் மத்தியில் தாமரை மலர வேண்டும். தமிழகத்தில் இரட்டை இலை வளர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மது விற்பனையை வைத்து அரசு இயங்குகிறது. பார் நடத்த அனுமதி கொடுத்து கட்சிக்கு நிதி திரட்டுகிறார்கள். நம்மை சுற்றி எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடவுளை நோக்கி வழிபடுவோம். அதுபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து ஜெபம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை இரவு 9 மணிக்கு மேல் எங்கேயாவது நடைபயிற்சி போக சொல்லுங்கள் பார்க்கலாம்.

    தமிழகத்தில் நடக்கும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் போராட்டம், திருப்பரங்குன்றம் விவகாரம் என மக்களின் எந்த பிரச்சினைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது. ஜன நாயகன் பட விவகாரம் கோர்ட்டு வரை சென்றதற்கு மத்திய அரசு காரணம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களில் தவறான பயனாளர்களுக்கு சென்று கொண்டிருந்த சுமார் 10 கோடி பேருக்கான நிதி தடுக்கப்பட்டு, தகுதியான பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

    கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு மூலமாக தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மலிவான விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதற்கு மாறாக தி.மு.க. அரசு மலிவான மதுவை மக்களுக்கு வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது. வளர்ந்த இந்தியா வேண்டுமென்றால் வளர்ந்த தமிழ்நாடு அவசியம். ஆனால் வளர்ந்த தமிழ்நாடு உருவாக தி.மு.க. அரசு தடையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் 15-ஆம் தேதி பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா.
    • சுமார் 24 மொழிகளில் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு 'ருத்ராட்ச தீட்சை' வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, உலகிலேயே அதிக மக்களால் நேரலையில் பார்க்கப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சுமார் 24 மொழிகளில், 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இணையதளங்கள் வழியாக 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி நாள் இரவில் மஹாமந்திர உச்சாடனம் மற்றும் சக்திவாய்ந்த தியானங்களை சத்குரு வழிநடத்த உள்ளார். இதனுடன் மக்களை இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும் வகையில் பாரத பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    கேரளாவில் உள்ள பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள கோயில்களிலேயே திரளாகக் கூடி, அந்தப் புனிதமான இரவின் ஆற்றலை நேரடியாக அனுபவிக்க ஈஷா தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி காதலருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி, 3 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் 6 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர்.

    இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 6-ந் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நேற்று இந்த வழக்கில் 15 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை நடத்தினார்.

    மேலும் இந்த வழக்கில் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவி, காதலன், போலீசார், பொதுமக்கள் என மொத்தம் 42 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

    வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சிலர் தலையில் துணியை போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர்.

    கோவை:

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கால முறை ஊதியம், 10 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியம், காலி பணியிடம் நிரப்புதல், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 3-ந் தேதி முதல் தொடர்ந்து மறியல் போராட்டம், கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் என பல்வேறு வகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பிணம் போல் தரையில் படுத்தும். அவர்களின் பக்கத்தில் சிலர் தலையில் துணியை போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

    அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து கடும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நாங்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

    சட்டசபை கூட்டத்தொடரில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையாக வைக்கலாம். தி.மு.க. கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்கிறார்கள். எனவே தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    கலெக்டரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமில்லாத செயல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீர் தொட்டிக்குள் குட்டியானை விழுந்து கிடப்பதும், அதனை மற்ற யானைகள் காப்பாற்ற முயல்வதும் தெரியவந்தது.
    • பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குட்டி யானை வெளியேறும் வகையில் குடிநீர்தொட்டியின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 4 வயது குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. அந்த யானைகள் சம்பவத்தன்று நள்ளிரவு வில்லோணி எஸ்டேட் மேல்பிரிவு தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வந்தன.

    அப்போது அந்த யானைகள் 12 அடி ஆழ தரைமட்ட குடிநீர் தொட்டியில் துதிக்கையை உள்ளே விட்டு தண்ணீர் குடித்தன. அதேபோல குட்டி யானையும் துதிக்கையை உள்ளேவிட்டு தண்ணீர் குடிக்க முயன்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி குடிநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டது. இதனால் அந்த குட்டியானை தண்ணீரில் தத்தளித்து மேலே வரமுடியாமல் தவித்தது. தொடர்ந்து குட்டியானையை மீட்க தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகள் முயற்சித்தன. மேலும் அந்த யானைகள் பிளிறிக்கொண்டே இருந்தன.

    இதனை கேட்டு அங்குள்ள தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் குட்டியானை விழுந்து கிடப்பதும், அதனை மற்ற யானைகள் காப்பாற்ற முயல்வதும் தெரியவந்தது.

    தொடர்ந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்க தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது அவர்களை தாய் யானை துரத்தியது. இதில் தப்பி ஓடிய தொழிலாளி ஒருவருக்கு காயம் அடைந்தார்.

    இதற்கிடையே மற்ற தொழிலாளர்கள் குடிநீர் தொட்டியின் வெளிப்பகுதியில் உள்ள குழாய் மூடியை திறந்து தண்ணீரை வெளியேற்றினர்.

    மேலும் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனச்சரகர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் முன்னிலையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குட்டி யானை வெளியேறும் வகையில் குடிநீர்தொட்டியின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டது.

    இந்த நேரத்தில் குட்டிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என்று கருதிய தாய் யானை பொக்லைன் எந்திரத்தையும் தாக்கி பாசப்போராட்டம் நடத்தியது.

    சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதியம் ஒரு மணியளவில் குடிநீர் தொட்டியின் உடைக்கப்பட்ட பகுதி வழியாக குட்டி யானை வெளியே வந்தது. பின்னர் அதனை தாய்யானை மகிழ்ச்சியுடன் அரவணைத்தது.

    மேலும் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து குட்டியின் உடலில் பீய்ச்சியடித்து ஆசுவாசப்படுத்தியது. பின்னர் அந்த யானைகள் குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
    • முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

    கோவை:

    தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்ததிட்டம், வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதனை முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 454 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    • மார்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.
    • மாணவிகள் மற்றும் வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    உன்னுடைய நண்பர்கள் யார் என்று சொல். நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு.

    எனவே தோழனையோ தோழியையோ தேர்வு செய்யும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை கோவையில் நடந்த சம்பவம் மீண்டும் அனைவருக்கும் எடுத்துக்காட்டி உள்ளது.

    கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் தோழிகளாக பழகி வந்தனர். அந்த மாணவிகளில் 2 மாணவிகள், 2 வாலிபர்களை காதலித்து வந்தனர்.

    அந்த 2 மாணவிகளின் காதலர்கள், தங்களது காதலிகளிடம் அவர்களுடன் படிக்கும் சக மாணவிகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது மாணவிகள் 2 பேரும் தங்களது காதலர்களிடம் சில பணக்கார மாணவிகள் குறித்த விபரங்களையும் பரிமாற்றம் செய்துள்ளனர்.

    இந்த விபரங்களை அறிந்து கொண்ட அந்த வாலிபர்கள், பணக்கார மாணவிகளின் விபரத்தை அனுப்பி வைக்கும்படி செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி 2 காதலிகளும், அந்த 2 மாணவிகளின் புகைப்படங்களையும், அவர்களது செல்போன் எண்களையும், தங்களது செல்போனில் இருந்து தங்களது காதலர்களின் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர்.

    புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர்கள், மாணவிகளின் புகைப்படத்தை அவதூறாக மார்பிங் செய்துள்ளனர்.

    தொடர்ந்து மார்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.

    இதை பார்த்த அந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அவர்களிடம் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என கேட்டு மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சியான மாணவிகள், தங்கள் புகைப்படம் எப்படி இவர்களின் கைகளுக்கு கிடைத்தது என விசாரித்தனர். அப்போது தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. தங்களுடன் இவ்வளவு நாட்கள் தோழிகளாக பழகிய சக மாணவிகளே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மாணவிகள் கோவை மாவட்ட போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தோழிகளாக நடித்து சக கல்லூரி மாணவிகளே 2 தோழிகளையும் சிக்கலில் சிக்க வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள் மற்றும் வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த வாலிபர்கள் இதுபோன்று வேறு மாணவிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளனரா? அல்லது வேறு வகையில் அவர்களை தவறாக பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.
    • நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.

    கோவை:

    கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் இந்த முறை தொகுதி மாறி போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வந்தது.

    அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுவதால் இந்த தொகுதியில் தற்போது நான் அதிக கவனம் செலுத்துவதாக கூறுவது தவறு.

    எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.

    இதற்கு முன்பும் கோவை வடக்கு தொகுதியில் மட்டுமல்ல அனைத்து தொகு திகளிலும் நாங்கள் பணிகள் செய்துள்ளோம். உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது.

    நான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை தான் அறிவிக்கும்.

    எங்களை பொறுத்தவரை முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அவர் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை.

    நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.

    அவர் பேசியது ஒன்றும் புரியாததால் தான் அவரை கோவை மக்கள் இங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.

    தமிழகத்தை பொறுத்த வரை திராவிட மாடல் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது.
    • 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுவாக தமிழக மக்கள் இரண்டு இயக்கங்களே தமிழகத்தை ஆள வேண்டுமா? என்று சிந்தித்து வருகின்றனர். புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மக்கள் புதிய தலைமையை முடிவு செய்து விட்டனர். அந்த நோக்கத்தோடு எங்களது தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு வருகிறது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜயை பற்றி மற்ற கட்சிகள் கருத்து சொல்வதற்கு காரணம், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை ஒவ்வொரு இயக்கங்களும் மாறி மாறி கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேர் தமிழகத்தில் தேர்தல் எப்போது நடக்க போகிறது என்பதற்காக பதிவு செய்து, காத்திருக்கும் வரலாறு இந்திய வரலாற்றில் இடம் பெறப்போகிறது.

    புதிய தலைமை ஆளவேண்டும். அதுவும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்.

    அ.தி.மு.க வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தி.மு.க.வை தான் பேச வேண்டும். இதில் இருந்தே பி டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தோல்வி பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட காரணத்தால் தான் இப்படி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்க வேண்டியது. ஆனால் தோல்வி பயம் வந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என்றார். 

    சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி நியமிக்கும்.அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது பா.ஜ.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் 72 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இதில் பா.ஜ.க. முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலைக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அந்த தேர்தல் பொறுப்பாளர் பணிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்கிறீர்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார்நாகேந்திரனிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எனது தந்தையின் உடல் நிலை காரணமாக அவரை பார்த்துக் கொள்ள வேண்டும்.

    அதனால் தான் தற்போது கோவை பகுதியில் உள்ளேன். எனது தந்தை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அது எனது முதல் கடமை. அதனால் தற்போது தேர்தல் அடிப்படை வேலைகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என வேண்டுகோள் வைத்துள்ளேன். கட்சியும் அதை ஏற்றுக்கொண்டு வேறு, வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்.

    அதேசமயம் பா.ஜ.க., அடுத்தடுத்த பிரசாரத்துக்கு வேறு என்ன சொல்கிறார்களோ அதற்கு தயாராக இருக்கிறேன். கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். இங்கு இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்கிறதோ அந்த வேலையை செய்வேன். இப்போதைக்கு அதிகம் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.

    அதனையும் கட்சியும் புரிந்து கொண்டது. நான் தேர்தலில் நிற்கவேண்டுமா, வேலை செய்ய வேண்டுமா என்பதை கட்சி சொன்னால் அதன்பிறகு பேசுகிறேன். சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி நியமிக்கும். வேறு ஒரு தலைவர்கள் வருவார்கள். 6 தொகுதிகளுக்கும் வேறு பொறுப்பாளர்கள் வருவார்கள். அதற்கான காலமும், சூழ்நிலையும் நிறைய இருக்கிறது.

    கோவையில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதேபோன்று கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்குரிய பணிகளில் ஒரு தொண்டராக ஈடுபடுவேன்.

    விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதனை வரவேற்கிறோம். என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்கு இ.வி.எம். எந்திரம் பதில் சொல்லும். ஆனால் விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா என்று தெரியவில்லையே. எங்களிடம் என்ஜின் இருக்கிறது. டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா, கார்ப்பரேட்டர் இருக்கிறதா? அந்த என்ஜினை ஸ்டார்ட் பண்றதுக்கு ஆள் இருக்கிறதா? வண்டி இல்லை, என்ஜின் இல்லை, அதற்கு போட பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை. எனவே விஜய் என்ஜினை பற்றி பேசக்கூடாது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் களத்துக்கு செல்கிறோம். இதனை எங்கள் தலைவர்கள் முடிவு செய்து விட்டனர். பிரசாரமும் தொடங்கி விட்டது. தொண்டர்கள் வீதி, வீதியாகச் சென்று பணியாற்றி வருகிறார்கள். ஆனால் விஜய் பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும் வகையில், அர்த்தங்கள் நிறைந்ததாக இல்லை. விசிலுக்காகவும், கைதட்டலுக்காக மட்டுமே அவர் அப்படி பேசி வருகிறார்.

    நாட்டின் வளர்ச்சியை கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் ஆகும் என்றார்.

    அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது பா.ஜ.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 தொகுதிகளில் மட்டுமே தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது அண்ணாமலைக்கு மன வருத்தத்தை தந்ததாகவும், அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • கமலேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.
    • நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் யாஷிகா (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கமலேசின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேசும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.

    இதற்கிடையே கமலேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.

    இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாக தான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் தற்கொலை செய்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×