உள்ளூர் செய்திகள் (District)
தஞ்சை தேர் விபத்து

தஞ்சாவூர் தேரோட்டம் மின்விபத்து பலி- ஒரு நபர் குழு நாளை விசாரணையை தொடங்குகிறது

Published On 2022-04-28 09:56 GMT   |   Update On 2022-04-28 09:56 GMT
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு நாளை விசாரணையை தொடங்குகிறது.
சென்னை:

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை சதய விழாவையொட்டி நேற்று அதிகாலை தேர் பவனி நடைபெற்றது.

அப்போது அதிகாலை 3.10 மணிக்கு தேர் வீதி உலாவின்போது உயர் அழுத்த மின் கம்பியில் தேர் உரசியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக இறந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடனே தஞ்சாவூர் சென்று உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார். தி.மு.க. கட்சி சார்பிலும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மின் விபத்து நடந்த பகுதிக்கும் நேரில் சென்று உருக்குலைந்து கிடந்த தேரை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

சட்டசபையில் நேற்று இந்த பிரச்சினை எழுப்பப்பட்டபோது கடும் அமளி ஏற்பட்டது.

இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து, இதுபோன்ற துயர சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி குமார் ஜெயந்த் தஞ்சை சென்று நாளை தனது விசாரணையை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News