உள்ளூர் செய்திகள் (District)
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் காட்சி.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லாமல் 4 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் விசைப்படகுகள்

Published On 2022-01-23 07:01 GMT   |   Update On 2022-01-23 07:01 GMT
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லாமல் 4 மாதங்களாக விசைப்படகுகள் முடங்கிக் கிடப்பதால் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ளது சின்ன முட்டம். இங்கு மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.
இந்த துறைமுகத்தை நம்பி தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் கள் நேரடியாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறை முகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

இந்தத் துறை முகத்தின் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைப்பதோடு மட்டுமன்றி அன்னிய செலாவணியை ஈட்டித் தருகின்றது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததின் காரணமாகவும் புயல் சின்னத்தின் காரணமாகவும் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில்இருந்து  கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் விசைப்படகுகள் துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையில் இந்த மாதம் தொடக்கத்தில் மழை நின்று இயற்கை சீற்றம் தணிந்ததை தொடர்ந்து ஒரு நாள் மட்டும் குறைந்தளவு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. ஆனால் அன்று மீன்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை.

இதனால் விசைப்படகுகளுக்கு டீசல் செலவுக்கு கூட வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது மீன் பாடு குறைவான காலம் என்பதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் அதன் பிறகு கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதைத் தொடர்ந்து  தங்களுக்கு கடலில் 2 நாட்களுக்கு மேல் தங்கி இருந்து மீன் பிடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மீன்வளத் துறைக்கும் அரசுக்கும் விசைப்படகு மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பல தரப்பு பேச்சு வார்த்தை நடந்தும் இதுவரை எந்த முடிவும் ஏற்படாத நிலையே நீடித்து வருகிறது.   கடந்த 4 மாதங்களாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்திலேயே முடங்கி கிடக்கின்றன.

இதனால் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து பரிதவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்க தளமாகக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அரசும் மீன்வளத் துறையும் அனுமதி அளிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இன்னும் 2 மாதங்களில் மீன்பிடி தடை காலம் தொடங்க இருப்பதால் அதற்குள் சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அனுமதி கிடைத்தால் அந்த 2 மாதத்துக்குள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள்.

அதற்கு அரசும் மீன்வளத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News