செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

ஆண்டிப்பட்டி அருகே ரூ.13 லட்சம் கையாடல் செய்த தபால் அதிகாரி மீது வழக்கு

Published On 2021-06-18 14:35 GMT   |   Update On 2021-06-18 14:35 GMT
ஆண்டிப்பட்டி அருகே ரூ.13 லட்சம் கையாடல் செய்த தபால் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி:

ஆண்டிப்பட்டி அருகே, போடிதாசன்பட்டியில் கிளை தபால் நிலையம் உள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல், ஆண்டிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த சுஜித் மனைவி முத்துமாரி என்பவர் கிளை தபால் அதிகாரியாக (போஸ்ட் மாஸ்டர்) வேலை பார்த்து வந்தார். இந்த தபால் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட சேமிப்பு பணம், வைப்புத் தொகையில் கையாடல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தபால் துறை அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், தபால் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதில் முத்துமாரி, வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணம் மற்றும் வைப்பு தொகையில் ரூ.11 லட்சத்து 79 ஆயிரம் மற்றும் அதற்கான வட்டி ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் என மொத்தம் ரூ.13 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரி பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டு பல தவணைகளாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை திருப்பி செலுத்தியுள்ளார். பின்னர் அவருடைய சம்பள தொகை போன்றவற்றை பிடித்தம் செய்தது போக ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 400-ஐ அவர் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தார்.

இதுகுறித்து தபால் துறை துணைக்கோட்ட ஆய்வாளர் மணிவேல் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து கிளை தபால் அதிகாரி முத்துமாரி மீது நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News