செய்திகள் (Tamil News)
கைது

மதுரையில் வாக்காளர் பட்டியல்-பணத்துடன் திமுக பிரமுகர் கைது

Published On 2021-04-03 07:17 GMT   |   Update On 2021-04-03 07:17 GMT
மதுரை காலாங்கரையில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் பணப்பட்டுவாடா செய்வதாக ரகசிய தகவல் வந்தது. உடனே தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மதுரை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை காலாங்கரையில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் பணப்பட்டுவாடா செய்வதாக ரகசிய தகவல் வந்தது. உடனே தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு டீக்கடை முன்பாக நின்றிருந்த விசாலாட்சிபுரத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ரவிச்சந்திரனிடம் (வயது 62) வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மதுரை வடக்கு நிலை கண்காணிப்பு குழு அதிகாரி முகைதீன் பாட்சா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை (வயது 62) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மதுரை சொக்கலிங்க நகர் 4-வது தெருவில் 2 பேர் வாக்காளர்பட்டியல், பெயர் மற்றும் செல்போன் எண்ணுடன் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுவதாக மதுரை மேற்கு பறக்கும்படை அதிகாரி சுந்தரசாமிக்கு புகார் வந்தது.

அவர் சம்பவ இடத்தில் போலீசாருடன் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரை கண்டதும் பணப்பட்டுவாடா கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அவர்கள் யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று அ.தி.மு.க, இடது கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பெரியரதவீதி மற்றும் பசுமலை ஆகிய பகுதிகளில் மேற்கண்ட 2 கட்சிகள் சார்பிலும் தேர்தல் கமி‌ஷன் விதிமுறைகளுக்கு மாறாக வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

கிராம நிர்வாக அதிகாரி யாசின்பானு புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் அ.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News