செய்திகள் (Tamil News)

மேலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 11 பெண்கள் காயம்

Published On 2017-03-28 10:34 GMT   |   Update On 2017-03-28 10:34 GMT
வேன் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் 11 பேர் காயம் அடைந்தனர்.

மேலூர்:

மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று இரவு வெள்ளரிபட்டி, அரிட்டா பட்டி, சண்முகநாதபுரம் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணி செய்தனர்.

இன்று காலை 7.30 மணிக்கு பணி முடிந்ததும் அவர்கள், நிறுவனத்தின் ஒப்பந்த வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டனர். இதில் பெண் தொழிலாளர்கள் ஒரு வேனில் தனியாக புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் கருப்பு ஓட்டிச் சென்றார்.

மேலூர் 4 வழிச்சாலையில் நரசிங்கம்பட்டி என்ற பகுதியில் வேன் சென்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த பெண்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூச்சலிட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். சுங்கச்சாவடி விபத்து மீட்பு வாகன அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் 108 ஆம்புலன்சும் அங்கு விரைந்தது.

அவர்கள் விபத்தில் காயம் அடைந்த 11 பெண்களை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதும், மதுரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இந்த விபத்தில் அரிட்டா பட்டியை சேர்ந்த மகமாயி என்ற பெண்ணிற்கு கைவிரல் துண்டானது. லட்சுமி, சுகன்யா, பாக்கியம், ராஜாமணி, சியாமளா, அமுதா, ராமு, ஹேமா உள்பட 11 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து மேலூர் போலீஸ் ஏட்டு துரைப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News