செய்திகள் (Tamil News)

மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

Published On 2017-02-26 19:38 GMT   |   Update On 2017-02-26 19:38 GMT
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி:

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 30 பேர் மீன் பிடிக்கும் படகு ஒன்றில் இன்று கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கடலில் தத்தளிக்க ஆரம்பித்தனர்.

இவ்விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து 9 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சுற்றுலா பயணிகள் உரிய அனுமதியின்றி மீன்பிடி படகில் கடலுக்குள் சென்றுள்ளதாகவும், மேலும், 7 பேர் செல்லக்கூடிய படகில் 30 பேர் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News