செய்திகள் (Tamil News)

அவசர சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால்தான் நிரந்தர சட்டமாக மாற்ற முடியும்: பொன்.முத்துராமலிங்கம்

Published On 2017-01-22 10:24 GMT   |   Update On 2017-01-22 10:24 GMT
ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால்தான் ஜல்லிக்கட்டுக்கு எந்த காலத்திலும் யாராலும் தடை செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சரும் வக்கீலுமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசு பிறப்பித்துள்ள ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பற்றி முன்னாள் அமைச்சரும் வக்கீலுமான பொன்.முத்துராமலிங்கம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் எழுச்சி காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை சட்டசபையில் முறைப்படி தீர்மானமாக கொண்டு வந்து சட்டம் ஆக்கி விடுவோம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல. இந்த சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுக்க இயலாது.

தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு செல்ல வாய்ப்பு உள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று வாதிடவும் வாய்ப்பு இருக்கிறது.

அத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ய சாத்தியம் உள்ளது. எனவே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

1994-ம் ஆண்டு தமிழக அரசு 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது அந்த சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 31-பி பிரிவின் 9-வது அட்டவணையில் சேர்க்க வைத்தனர். ஒரு சட்டம் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் அதை ரத்து செய்ய கோர்ட்டுகளுக்கு அதிகாரம் இல்லை.

இதனால்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து யாராலும் எதையும் செய்ய இயலவில்லை. அந்த சட்டத்துக்கு உரிய சட்ட பாதுகாப்பு கிடைத்தது.

அது போல ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தையும் 9-வது அட்டவணையில் சேர்த்தால்தான் ஜல்லிக்கட்டுக்கு எந்த காலத்திலும் யாராலும் தடை செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News