செய்திகள் (Tamil News)

10 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ இலவச அரிசி கிடைக்கும்: தமிழக அரசு அறிவிப்பு

Published On 2016-10-28 07:32 GMT   |   Update On 2016-10-28 07:32 GMT
10 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ இலவச அரிசி கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 1.11.2016 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தும் போதும், தற்போது தமிழ்நாடு அரசால் பாகுபாடின்றி ‘அரிசி’ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால், மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனாலும், தமிழக அரசு தற்போது ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அளவில் வழங்கப்பட்டு வரும் அரிசியினை தொடர்ந்து வழங்கும்.

* ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மேற்படி சட்டத்தின்படி மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்ற போதிலும், தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் 16 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும்.

* மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று தற்போது நடைமுறையில் உள்ள உச்சவரம்பின்றி ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ வீதம் உச்சவரம்பின்றி வழங்கப்படும். (உதாரணமாக 5 உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசி என்பதற்கு பதிலாக இனிமேல் 25 கிலோ அரிசி வழங்கப்படும். அதே போல ஒரு குடும்பத்தில் 7 உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு 35 கிலோ அரிசியும், 10 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும்)

* அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்.

* மேற்படி சட்டத்தை செயல்படுத்துவதாலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவதாலும், தமிழக அரசிற்கு வருடத்திற்கு சுமார் ரூ.1,193.30 கோடி கூடுதல் செலவாகும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட ஆணையிடப்பட்டுள்ள இந்த உணவு பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறப்பான திட்டமாக இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தப்படாத ஒரு சிறப்பான திட்டமாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News