லைஃப்ஸ்டைல் (Health)

வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

Published On 2016-11-25 06:38 GMT   |   Update On 2016-11-25 06:38 GMT
வயிற்று உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்து வரலாம். இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பூண்டுப் பற்கள் - 10
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை :

* இஞ்சி, கொத்துமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.  

* ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.  

* பின்னர் சுட்ட பூண்டு, 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

* பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.

* அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும்.

* தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

* உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

* ரொட்டித் துண்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News