ஆன்மிகம்

அவல்பூந்துறையில் தாமோதரப் பெருமாள் - புவனேஸ்வரன் திருவீதி உலா

Published On 2016-10-18 03:45 GMT   |   Update On 2016-10-18 03:45 GMT
மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறையில் பிரசித்தி பெற்ற அலமேலுமங்கை லட்சுமி சமேத ஸ்ரீ தாமோதரப் பொருமாள்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் அவல்பூந்துறை சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கடைசி சனிக்கிழமை அன்று தாமோதரப் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. கடந்த 26 வருடங்களாக திருவீதி உலா மட்டும் நடைபெறாமல் இருந்தது.

தற்போது 26 வருடங்களுக்கு பிறகு 15-ந் தேதி சனிக்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. மாலை 6 மணிக்கு மேல் அலேலு மங்கை லட்சுமி சமேத ஸ்ரீ தாமோதரப்பொருமாள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு புஸ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா சென்றது.

பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, கரிய காளியம்மன் கோவில் வழியாக ஈஸ்வரன் கோவில் சென்றது.

அங்கு பாகம் பிரியாள் சமேத ஸ்ரீ புஸ்பவனேஸ் வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 2 சுவாமிகளும் புஸ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா புறப்பட்டு அவல் பூந்துறை நால்ரோடு வழியாக பொருமாள் கோவிலை சென்றடைந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வீதி உலா ஈஸ்வரன் கோவிலில் நிறைவு பெற்றது. வானவேடிக்கைகளுடன் பக்தர்கள் ஆரவாரத்துடன் பின்தொடர்ந்து சென்றனர்.

இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

Similar News