search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா விவசாயிகள்"

    • சம்பா சாகுபடியில் அதிக விளைச்சல் பெற முடியுமா என விவசாயிகள் மத்தியில் சந்தேகம் உள்ளது.
    • கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் சிரமம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

    இலக்கை தாண்டி சாகுபடி செய்யப்பட்டாலும் கர்நாடகா அரசு உரிய காவிரி நீரை வழங்காதது, எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை பெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் போதிய தண்ணீரின்றி குறுவை பயிர்கள் கருகின. டெல்டாவில் 2 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி வாடி சேதம் அடைந்து விட்டது.

    இதனால் அடுத்து சம்பா, தாளடி சாகுபடிக்கும் தண்ணீர் இல்லாமல் போய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கர்நாடகாவை நம்பி பயன் இல்லாத சூழல் நிலவுவதால் தற்போது தொடங்க உள்ள பருவமழையை தான் விவசாயிகள் பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பு பருவத்தில் இதுவரை 4.19 லட்சம் ஏக்கர் நிலங்கள் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு நிச்சயமற்ற நிலை இருப்பதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் இயற்கையின் கருணையை மட்டுமே நம்பியுள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், அணையின் நீர்த்தேக்கம் இன்று காலை 93.47 டிஎம்சி கொள்ளளவாக உள்ளது. அதாவது 46 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இதனால் சம்பா சாகுபடியில் அதிக விளைச்சல் பெற முடியுமா என விவசாயிகள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறும்போது,

    "வரும் வாரங்களில் போதிய மழை பெய்யுமா, இல்லையா என்பது குறித்து விவசாயிகளுக்கே உறுதியாகத் தெரியாத நிலை உள்ளது. இதனால் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பதில் என்ன பயன்?.

    அறுவடை வரை பயிர்களை தக்கவைக்க, போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். "மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதபோது, கணிக்க முடியாத வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். பயிர்களைப் பாதுகாப்பது கூட கடினமாக இருக்குமோ என்ற நிலை தான் உள்ளது.

    நிலத்தடி நீர் வசதி உள்ளவர்கள் மட்டுமே தாமதமான சம்பா குறுகிய கால பயிருக்கு செல்லலாம். ஆனால் அவர்களின் பங்கு ஓரளவு மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தத்தில் வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் சம்பா, தாளடியில் அதிக மகசூல் பெறலாம் என்றார்.

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பி.ஆர்.பாண்டியன் கூறும்போது,

    கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே, உற்பத்தி ஊக்கத்தொகை அடங்கிய நிதித் தொகுப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த ஆண்டு குறுவையைப் பொறுத்தவரை, அக்டோபர் 17 ஆம் தேதி நிலவரப்படி 3.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருகிய குறுவை பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை போதவில்லை. எனவே ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமாக இழப்பீடு தொகை அறிவித்து வழங்க வேண்டும் என்றார்.

    திருவாரூரை சேர்ந்த முன்னோடி விவசாயி சத்தியநாராயணன் கூறுகையில்,

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய காவிரி நீரின்றி குறுவை பயிர்கள் வாடி விட்டன. சம்பாவுக்கு இதே நிலை நீடித்து விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காவிரியில் உரிய நீரை பெற்று கொடுத்தால் மட்டுமே சம்பா, தாளடியில் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு பெறலாம். மேலும் வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்க வேண்டும்.

    இம்முறை அரசு அறிவித்த இழப்பீடு போதவில்லை. குறுவை சாகுபடி பருவத்தில் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும். குறுவை பருவத்தில் கூட, பல விவசாயிகள் நீண்ட கால பயிரை (150-160 நாட்கள்) பயிரிட்டிருந்தனர். தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்கள் வயல்களில் களைகளை அகற்ற அதிக செலவாகும். எனவே இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

    ஒட்டுமொத்தத்தில் காவிரியிலும் உரிய நீர் கிடைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் இம்முறை சம்பா, தாளடியில் அதிக விளைச்சல் பெறலாம். மாறாக காவிரியில் உரிய நீர் கிடைக்காவிட்டால் குறுவையை போல் சம்பாவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது.
    • குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,தாளடி சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால சாகுபடியும் நடைபெறும். இதில் குறுவை, சம்பா ஆகிய இரண்டு சாகுபடிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    காவிரி நீரையும் மழை நீரையும் நம்பி செய்யக்கூடிய இந்த சாகுபடியால் வறட்சி மற்றும் வெள்ளம் , இயற்கை சீற்றம் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் பெருமளவில் கருகி பாதிப்புக்கு உள்ளாகின.

    ஆனால் தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது. குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.

    நேற்று சம்பாவுக்கு இழப்பீடு தொகை அறிவித்தது. ஆனால் குறுவை பயிர்களுக்கு காப்பீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது :-

    தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தேவையில்லை. பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாகவும் சம்பா சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது குறுவை பாதித்த விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.

    விவசாயிகள் பிரீமியம் செலுத்தி பயிர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் நிவாரண நிதி என்று அரசு அறிவித்தால் ரூ.5000 மட்டுமே கிடைக்கும். அதுவும் அரசுதான் பேரிடர் நிவாரணம் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஏற்படுவதோடு அரசாங்கத்திற்கும் ரூ.5000 இழப்புதான் ஏற்படும்.

    ஆனால் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் 100 சதவீதம் நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கும் காப்பீடு அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை என்றார்.

    ×