search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலால் 60 லட்சம் தென்னை மரங்களை இழந்து தவிக்கும் டெல்டா விவசாயிகள்
    X

    கஜா புயலால் 60 லட்சம் தென்னை மரங்களை இழந்து தவிக்கும் டெல்டா விவசாயிகள்

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் 60 லட்சம் தென்னைகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் தென்னையை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
    தஞ்சாவூர்:

    கஜா புயல் கடந்த 16-ந் தேதி 110 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

    இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த காற்றினாலும், மழையினாலும் பாதிப்புக்குள்ளாகின. இதில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஏராளமானோர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வாழை, நெல், கரும்பு, வெற்றிலை கொடிகள், தென்னை போன்ற அனைத்தையும் கஜா புயல் சூறையாடி சென்றது.

    மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் அந்த பகுதிகளில் குடிதண்ணீருக்கு வழியில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் காலி குடங்களை எடுத்து கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

    மேலும் புயல் கரையை கடந்து 7 நாட்கள் ஆகியும் முகாம்களிலேயே உள்ளனர்.

    தற்போது தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று மின்சாரம், குடிநீர் ஆகியவை ஆகும். இதனால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி வருகின்றனர்.

    மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இதற்காக அதிகாரிகளை முற்றுகையிட்டும், சாலைமறியல் செய்தும் தங்கள் எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீட்டு தொகை மாநில அரசு அறிவித்துள்ளது. நெல் பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். இந்த பயிர்களை மறு சாகுபடி செய்ய செலவில் 40 முதல் 50 வரை மானியம் வழங்கப்படும்.

    முந்திரி பயிர்களுக்கு ரூ.18 ஆயிரமும், தென்னை ஹெக்டேருக்கு ரூ.2.64 லட்சமும், படகு வலைகளுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் மட்டும் கஜா புயலால் 2 கோடி தென்னை மரங்கள் சேதமாகி உள்ளன. இதில் 60 லட்சம் தென்னைகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் தென்னையை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். தென்னை விவசாயிகளின் வாழ்க்கை தற்போது 15 ஆண்டுகளுக்கு பின்னுக்கு சென்று விட்டது.

    தங்களது வாழ்வாதாரமே போய் விட்டதே என்று கண்ணீரில் விட்டு கதறி வருகின்றனர்.

    நாகை, திருவாரூர், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, ஒரத்தநாடு, திருவோணம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 7 லட்சம் தென்னை விவசாயிகள் மிகவும் வேதனையில் இருந்து வருகின்றனர்.

    ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன்  - வைராம்பாள் - லோகநாதன்


    இதுகுறித்து பட்டுக் கோட்டை அடுத்த பழவேரிக்காடு சிவிக்காடு பகுதியை சேர்ந்த வைராம்பாள் கூறியதாவது:-

    நான் 7 ஏக்கரில் 500 தென்னை மரங்களை பிள்ளை போல் வளர்ந்து வந்தேன். எனக்கு 65 வயதான நிலையில் கால்கள் நடக்க முடியாத நிலையில் தென்னைகளுக்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சு வளர்ந்தேன். தென்னை மட்டை கீற்றுகளை பின்னியும் தேங்காய்களை விற்றும் பிழைத்து வந்தேன். ஆனால் கஜா புயலால் எனது வாழ்க்கை அடியோடு போய் விட்டது. தென்னைகளை இழந்து நிர்கதியாய் தவித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன் கூறியதாவது:-

    தஞ்சையில் நான் வசித்து வந்தாலும் எனது சொந்த கிராமமான ஆவிக்கோட்டையில் 16 ஏக்கர் நிலத்தில் 1200 தென்னை மரங்களுடன் தோப்பை பராமரித்து வருகிறேன். விவசாயம் மீது கொண்ட பற்றால் தென்னந்தோப்பை கவனித்து வந்தேன்.

    கஜா புயலால் இன்று அனைத்தையும் இழந்து விட்டேன். எனது வாழ்க்கை கனவுகள் சிதைந்து விட்டது, கானல்நீராக போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் 1500 தென்னை மரங்கள், 300 தேக்கு மரங்கள், 2000 வாழைகள், 25 மாமரம் ஆகியவை வளர்ந்து வந்தேன்.

    ஒரே நாள் இரவில் வீசிய புயலால் நிலைகுலைந்து போய் விட்டோம். இப்போது நானும் எனது குடும்பமும் தவித்து வருகிறோம். அரசு சார்பில் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
    Next Story
    ×