search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாததால் பெரும் இழப்பை சந்திக்கிறோம்- டெல்டா விவசாயிகள் வேதனை
    X

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாததால் பெரும் இழப்பை சந்திக்கிறோம்- டெல்டா விவசாயிகள் வேதனை

    • தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது.
    • குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,தாளடி சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால சாகுபடியும் நடைபெறும். இதில் குறுவை, சம்பா ஆகிய இரண்டு சாகுபடிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    காவிரி நீரையும் மழை நீரையும் நம்பி செய்யக்கூடிய இந்த சாகுபடியால் வறட்சி மற்றும் வெள்ளம் , இயற்கை சீற்றம் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் பெருமளவில் கருகி பாதிப்புக்கு உள்ளாகின.

    ஆனால் தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது. குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.

    நேற்று சம்பாவுக்கு இழப்பீடு தொகை அறிவித்தது. ஆனால் குறுவை பயிர்களுக்கு காப்பீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது :-

    தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தேவையில்லை. பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாகவும் சம்பா சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது குறுவை பாதித்த விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.

    விவசாயிகள் பிரீமியம் செலுத்தி பயிர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் நிவாரண நிதி என்று அரசு அறிவித்தால் ரூ.5000 மட்டுமே கிடைக்கும். அதுவும் அரசுதான் பேரிடர் நிவாரணம் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஏற்படுவதோடு அரசாங்கத்திற்கும் ரூ.5000 இழப்புதான் ஏற்படும்.

    ஆனால் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் 100 சதவீதம் நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கும் காப்பீடு அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை என்றார்.

    Next Story
    ×