search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலாத்துறை"

    • ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பம் வரை 31 கி.மீ. கடற்கரை உள்ளது.

    ப்ரோமனேட் கடற்கரை, பாண்டிமெரினா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

    இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர்.

    ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.
    • டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் ரெட்எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியும், புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டிகள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. காலை 7 முதல் 11 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

    இதில் சென்னை, பெங்களூரு, கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுவை, ஆரோவில்லை சேர்ந்த தலை சிறந்த 40 வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

    போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.

    டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது. முதலிடம் பெறுபவருக்கு தேசிய சாம்பியன்ஷிப் பரிசு வழங்கப்படும். பரிசளிப்பு விழா வருகிற ஜூன் 26-ந் தேதி நடைபெறும் என குதிரையேற்ற பயிற்சி பள்ளி நிறுவனர் ஜாக்லீன் தெரிவித்துள்ளார்.

    • பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.
    • பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.

    இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் பாலத்தின் முடிவு பகுதியில் 11 மீட்டர் நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் பார்வையாளர்கள் நின்று கடல் அழகு மற்றும் அலையை ரசிக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாநில சுற்றுலாத்துறை மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில், வர்க்கலா நகராட்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.

    இந்த மிதக்கும் பாலத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் செல்ல முடியும். தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் நடந்து சென்று ரசிக்கலாம். இந்த பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    மிதக்கும் பாலத்தின் நுழைவு கட்டணம் ரூ120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் 20 நிமிடங்கள் பாலத்தில் நேரத்தை செலவிடலாம்.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்பு படகுகள் மட்டுமின்றி உயிர்காக்கும் காவலர்கள், மீனவர்கள் தயார் நிலையில் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும்.
    • புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் புத்தகரம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்த விகாரம் என்று அழைக்கப்படும். புத்த கிரகம், புத்த விகாரம் என்பது காலப்போக்கில் மருவி புத்தகரம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், இடையே உள்ள இடத்தில் குளம் சீரமைத்தபோது அழகிய புத்தர் சிலை ஒன்று கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.

    இந்த புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும், செம்பாதி தாமரை அமர்வு உடன் கால்களும், சிந்தனை முத்திரையுடன் கைகளும், தலைமுடி சுருள் சுருளாகவும், ஞான முடி தீப்பிழம்பாகவும், கழுத்தில் மூன்று கோடுகளும், இடது புற தோள் மட்டும் சீவர ஆடையால் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலையின் பின்புறம் தலைப்பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது.

    பின்புறம் உள்ள உடலின் முதுகுப் பகுதியில் சீவர ஆடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16-ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையில் காண முடியும்.

    தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள புத்தகரத்தில் மட்டுமே பவுத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இதனை ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிஷிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வு குழுவினர் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கண்டறிந்து உள்ளனர்.

    மேலும் புத்தகரம் கிராமப் பகுதியில் பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதும், பல்லவர் காலத்திற்கு முந்திய குடியேற்றங்களும் இருந்து உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது. அத்தகைய சிறப்புகளை உடைய புத்தர் சிலையை தற்பொழுது வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய குமார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியைப் பெற்று புத்த விகாரம் எனும் புத்தர் கோவில் சுற்றுலா துறையின் மூலம் கட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சி துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    • அமைச்சர் ராமச்சந்திரன்-சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்
    • உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேலாண்மை இயக்குநர், சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால், உள்மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். மேலும் ஊட்டி படகு இல்லத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலாத்துறை சாகச விளையாட்டுகளுக்கு விதிமுறைகளை கண்டறிந்து கடந்த செப்டம்பர் மாதம் நெறிமுறைப்படுத்தி விதி முறைகளை வெளியிட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா தல மேம்பாட்டு புதிய திட்டத்தினை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 அல்லது 15 இடங்களை தேர்வு செய்து அரசின் நிதி பெற்று பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும். சில இடங்களில் தனியாருடன் இணைந்து பல்வேறு சாகச விளையாட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் ஊட்டி படகு இல்லம், கொல்லிமலை, ஜவ்வாதுமலை; ஏலகிரி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாகச விளையாட்டுகள் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கிளேம்பிங் சைட் அமைக்கபட உள்ளது.

    இதில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு, விதானப் பயணம், இழைவரி சுழற்சி, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர் இழைவரிக் கோடு, பங்கீ ஜம்பிங், ராக்கெட் வெளியேற்றி, தொங்கு பாலம், மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட மனித கைரோ, ஆகிய சாகச விளையாட்டுகள் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவாகும். இப்பணிகள் முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும். ஏற்கனவே இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்கள் பதிவு செய்து இது மட்டுமின்றி வேறு நிகழ்ச்சிகள் செய்பவர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் இது போன்று நிகழ்ச்சிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறையில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்படும்.

    சுற்றுலாத்துறையின் மூலம் மிதக்கும் உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×