search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று மாசுபாடு"

    • விவசாயிகளின் பண்ணை பொருட்கள் எரிப்பால் புகை மூட்டம் குறையாமல் இருக்கிறது
    • PM 2.5 தாக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என NESDC வலியுறுத்தியது

    தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன். இவர்களில் 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான மக்கள், காற்று மாசு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து நாட்டில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் (National Economic and Social Development Council) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

    பண்ணை பொருட்களில் தேவையற்றவைகளை எரிக்கும் அந்நாட்டு விவசாயிகளின் பரவலான பழக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகியவற்றால் புகைமூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

    2024 ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் மாசுபாடு தொடர்பான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.


    நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் இதய கோளாறு போன்ற மாசுபாடு தொடர்பான நோய்களால் நாள்பட்ட கணக்கில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ல் முதல் 9 வாரங்களில் 1.3 மில்லியன் என இருந்தது.

    தற்போது (2024 தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 1.6 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

    சுவாச மண்டலத்தை பாதிக்க கூடிய 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைந்த அளவிலான சிறிய, அபாயகரமான துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடுகின்றன. தொடர்ந்து, இத்துகள்கள் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுத்தி இருமல் மற்றும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்த கூடியவை. இது மட்டுமின்றி இவை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.

    இத்தகைய துகள்களை "PM 2.5" என சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.

    பொது சுகாதாரத்தில் "PM 2.5" ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்க தாய்லாந்து அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என NESDC கூறியது.

    தாய்லாந்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கரும்பு தோட்டம் மற்றும் நெல் விளைநிலங்கள் ஆகியவற்றில் வைக்கோல் போன்றவற்றை விவசாயிகள் எரிப்பது தொடர்கதையாகி வருவதால் காற்று மாசுபாடு அந்நாட்டில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.

    • அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு.
    • காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

    பனிக்காலங்களில் அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. பனிப்புகையும், மனித செயல்கள் மூலம் உருவாகும் காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மூச்சுத் திணறல், பெருமூச்சுவிடுதல், சுவாசிக்கும் போது விசிலடிப்பது போன்ற சப்தம், வேகமாக மூச்சுவிடுதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்?

     வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கலந்த புகை, தீங்கான விஷம் கலந்த தொழிற்சாலை புகைகள் மற்றும் சில ரசாயனக் கரைசல்களின் புகைகள் போன்றவற்றை உங்களுக்குத் தெரியாமலேயே நாம் சுவாசித்துக் கொண்டிப்போம். இந்த நச்சுப் புகைகள் தான் சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

    மற்ற காலங்களை விட பனிக்காலங்களில் நமது உடல் வெப்ப அளவை விட மிகக்குறைவாக. குளிர்ந்த வெளிக்காற்று இருக்கும். சுவாசப் பிரச்சினை ஏற்பட இது ஒரு காரணம் ஆகும். மருத்துவரையோ அல்லது நுரையீரல் சிகிச்சை நிபுணரையோ அணுக வேண்டும்.

    மருந்தகத்தில் மருந்து- மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதனால் மூச்சுத் திணறல் அதிகமாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது ஒரே நாளில் கிடைக்காது. சில காலங்களுக்கு சில விஷயங்களை கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

     தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

    1) தீங்கு விளைவிக்கக் கூடிய துகள்கள் கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க வேண்டும்,

    2) பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகள், இனிப்பு உணவுகள், இறைச்சி உணவு வகைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    3) நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்ந்த உணவுகள், குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

    4) மன நிம்மதியின்மை, மன அழுத்தம் முதலியவைகளும் மூச்சுத் திணறலை அதிகமாக்கும்.

    5) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள் குளிரையும், குளிர்ப் பிரதேசங்களையும் தவிர்க்க வேண்டும்.

    6) தினமும் உங்களால் முடிந்த ஏதாவதொரு உடற்பயிற்சியை செய்து உடம்பை சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    7) ஊதுவத்தி, கொசு வத்தி, கற்பூரம் போன்றவற்றின் புகை அருகில் இருக்க வேண்டாம்.

    8) சிகரெட் புகைப்பவரின் அருகில் நிற்கக்கூட செய்யாதீர்கள். நச்சுக்காற்றின் அபாயங்களைத் தவிருங்கள். நலமுடன் வாழுங்கள்.

    • லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
    • அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்

    உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.

    நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.

    தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.

    காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.

    குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.

    2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.

    இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

    காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
    • அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு, கூட்டங்கள் நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உயர் கல்வி மையங்கள் உள்பட சுமார் 1,800 பள்ளிகள் உள்ளன. நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது. டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேச மாவட்டத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை வரை 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Paris #AirPollution
    பாரீஸ்:

    ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையில் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், டெலிவரி வாகனங்கள், மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
    ×