search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Indian parliamentary election 2024"

  • தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
  • காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்

  ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

  இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

  முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.

  நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:

  ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.

  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

  அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

  "இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"

  இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

  சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • எதிர்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் ஒரு கூட்டணையை உருவாக்கியுள்ளன
  • 1986ல் முதல்முதலாக மிசோரம் வந்தேன் என்றார் ராகுல்

  இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இவ்வருட இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளது.

  மத்தியில் உள்ள தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை அடுத்த வருட தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி பல மாநிலங்களின் முக்கிய 25க்கும் மேற்பட்ட கட்சிகள், இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) என கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மிசோரம் மாநிலத்தின் 40 இடங்களுக்கு வரும் நவம்பர் 7 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மிசோரம் தலைநகர் ஐசால் (Aizawl) வந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு 2 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

  மிசோரம் வந்த அவர் ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றினார்.

  அப்போது அவர் பேசியதாவது:

  மிசோரம் வருவது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. முதல்முதலாக 1986ல் நான் இங்கு வந்தேன். அப்போது மிசோரம் மெதுவாக வன்முறையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தது. நான் என் தந்தையுடன் வந்த போது மிசோ ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987ல் மாநில அந்தஸ்து கிடைத்தது. தற்போதுள்ள தலைமுறையினர் இங்கு வன்முறையை பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், வன்முறையினால் ஏற்படும் பாதிப்பு மூத்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்.

  இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

  அதிக மலைப்பிரதேசங்களை கொண்டதால் "மலை மாநிலம்" (mountain state) என்றும் அழைக்கப்படும் மிசோரம் மாநிலத்தில், 2008லிருந்து 2018 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • 5 மாநில தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
  • 4 காங்கிரஸ் முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பினர் என்றார் ராகுல்

  அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் வெல்ல இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்ட "இந்தியா கூட்டணி" தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

  இதற்கிடையே, இந்தியாவில் வரும் நவம்பர் இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, இந்திய தேர்தல் ஆணையம், இத்தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 5 அன்று வெளியிடப்படும்.

  இந்த 5 மாநில தேர்தல்களிலும், அடுத்த வருட அகில இந்திய தேர்தலிலும் வெற்றி காண அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

  இப்பின்னணியில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

  அப்போது அவர் தெரிவித்ததாவது:

  காங்கிரஸ் காரிய கமிட்டி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. ஏழைகளை முன்னேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முன்னேற்ற பாதையாக அமையும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இக்கணக்கெடுப்பை நடத்தும் திறன் படைத்தவரல்ல. காங்கிரஸின் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள 10 முதலமைச்சர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிரதமர் ஓபிசி மக்களின் நலன்களுக்காக உழைக்கவில்லை. அவர்களின் கவனத்தை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் 36 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவீதம் என்றும் பொதுப்பட்டியலில் 15 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

  • பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
  • பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது

  வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.

  தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

  அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

  பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.

  இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.

  நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:

  ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.

  இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.

  எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது
  • பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்

  இந்திய தலைநகர் புது டெல்லியில் 'பிரதிதின் மீடியா நெட்வொர்க்' எனும் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள முக்கிய தலைவருமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

  அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:

  தெலுங்கானாவில் அனேகமாக வெற்றி பெறுவோம். மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் வெற்றி உறுதி. ராஜஸ்தான் மாநிலத்தில் நெருக்கமான போட்டியில் இருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது. நாங்கள் கர்நாடகா தேர்தலில் முக்கிய பாடம் கற்று கொண்டோம். அதாவது, பா.ஜ.க., தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் கவனத்தை சிதறடிக்க செய்கிறது. கர்நாடகாவில் அதனை உணர்ந்த நாங்கள் எங்கள் கவனத்தை சிதற விடாமல் மக்கள் பிரச்சனையிலேயே கவனம் செலுத்தி வந்தோம். அதனால் பெரும் வெற்றி பெற்றோம். இதை உணர்ந்து கொண்ட நாங்கள் இதனை எதிர் கொள்ள கற்று கொண்டு விட்டோம். தற்போது கூட சாதி கணக்கீடு குறித்து பேச விடாமல் கவனத்தை திசை திருப்பி வருகிறார்கள். 'ஓரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் கூட இந்தியாவின் தலையாய பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை, தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை சிதறடிக்கத்தான் கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு பெரும் வியாபார நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதில்லை. எங்களுக்கு அவர்கள் உதவினால் என்னவாகும் என அவர்களையே கேளுங்கள்.

  இவ்வாறு ராகுல் கூறினார்.

  ×