என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு"
- இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
- 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (17-ந்தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இந்த பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் அடுத்த 15 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. 16-ந் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இனி பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டி பெரியார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த நாட்களில் தரிசனம் செய்ய முடியும். சபரிமலைக்கு மண்டல-மகரவிளக்கு யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை சிறப்பாக செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் கூறுகையில், நிலக்கல், பம்பா மற்றும் சன்னிதானம் ஆகிய 3 முக்கிய மண்டலங்களிலும் 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
கூட்ட நடமாட்டம் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க டிரோன் கண்காணிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து, மொபைல் பிரிவுகள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். திருட்டுகளை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சிறப்பு திருட்டு எதிர்ப்பு படை மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்றார்.
- தேஜ் பிரதாப் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.
- பீகார் தேர்தலில் தேஜ் பிரதாப் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லல்லு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவர் தேஜ்பிரதாப் யாதவ். இவர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் தேர்தலில் அவர் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தேஜ்பிரதாப் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
பீகார் தேர்தல் பிரசாரம் இன்று முடிவடையும் நிலையில் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேஜ்பிரதாப் யாதவின் சகோதரரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆவார்.
- இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மலேசியா கோலாலம்பூரில் 19-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக பீட் ஹெக் செத் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியா- அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கும் ஒரு முக்கியமான படிக்கல்லாகும். இது பாதுகாப்பு மற்றும் நமது வலுவான கூட்டாண்மைக்கான அமெரிக்காவின் நீண்ட கால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது,"இந்த கட்டமைப்பில் கையெழுத்திட்டது இந்தியா- அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஹெக்செத் தலைமையின் கீழ் உறவுகள் மேலும் வலுப்பெறும்" என தெரிவித்தார்.
- மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மட்டுமின்றி, முக அடையாளங்களை காணும் கேமராக்கள், ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
இந்த பாதுகாப்பு பிரிவு தேசிய பாதுகாப்பில் உள்ள நாட்டின் மிக முக்கிய பிரமுகருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புகளை வழங்குகிறது.
அதோடு அவரது இல்லம், அலுவலகம், அவர் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மேலும் வெடிகுண்டுகள் துளைக்காத வகையிலான வாகனங்களிலேயே முதலமைச்சரின் பயணம் திட்டமிடப்படுகிறது. கைப்பேசி சிக்னல்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்ட வாகனமும் பின் தொடர்ந்து செல்லும்.
முதலமைச்சருக்கான பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை, ஆழ்வார்பேட்டை பகுதி, அவரது வீட்டை சுற்றியுள்ள முக்கியமான சாலைகள், முதலமைச்சர் வாகனம் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகள் ஆகியவற்றில் அதிக திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மட்டுமின்றி, முக அடையாளங்களை காணும் கேமராக்கள், ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன. இதற்கான இடங்களைக் கண்டறிந்து சென்னை காவல்துறையினர் எந்த இடத்தில் எந்த கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதலமைச்சர் வீட்டை சுற்றிலும், அவரது வீட்டை சுற்றியுள்ள செனடாப் சாலை, டி.டி.கே. சாலை, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சிக்னல், கே.பி.தாசன் சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, கதீட்ரல் சாலை, அண்ணாசாலை, சிவசங்கரன் சாலை, திருவள்ளூர் சாலை, தேனாம்பேட்டை சிக்னல் ஆகிய பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
அதோடு சந்தேகத்துக்குரிய நபர்கள் முதலமைச்சர் வீட்டின் அருகே சென்றாலோ, சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தாலோ ஏ.ஐ.தொழில்நுட்பம் வாயிலாக காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு சில வினாடிகளிலேயே எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும் வகையில் இந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.
இந்த கேமராக்கள் முழுமையாக அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வரும் போது முதலமைச்சர் பாதுகாப்பு மேலும் பல மடங்கு மேம்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை பெருநகர காவல்துறை கோரியுள்ளது.
- கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
விழாவில் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதற்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பாதைகளில் சோதனை சாவடிகள் அமைத்து முழு பரிசோதனைக்கு பின்னரே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் நெல்லை சரக டி.ஜ.ஜி. சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் அடங்கிய சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
அதே போன்று கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனி விமானங்கள் சில தூத்துக்குடியில் இறக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் 100 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் இன்று விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
பிரதமர் வருகையையொட்டி நாளை காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படுகிறது.
- ஐரோப்பிய நாடான அன்டோரா மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது.
- இந்தப் பட்டியலின்படி தெற்காசிய நாடுகளில் சீனா 15-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.
2-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3-வது இடத்தில் கத்தார் நாடுகளும் உள்ளன.
மொத்தமுள்ள 147 நாடுகளில் இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும் பிடித்துள்ளன. தெற்காசிய நாடுகளில் சீனா 76.0 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளது.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன் ஆகிய நாடுகள் முதல் 5 இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் வெனிசுலா இடம்பிடித்துள்ளது.
- நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு தினந்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.
மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.
புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதில் 74 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நீடிக்கும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.
மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.
- அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.
- அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
காஷ்மீர் பகல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்து உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது
இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த பதட்டத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்ல இருக்கிறது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆக்ரோஷமான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே போல இந்தியா தரப்பிலும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க இருக்கிறது.
இது தொடர்பாக ஐ.நா.சபைக்கான கிரேக்கத்தின் நிரந்தர பிரதிநிதியும், மே மாதத்திற்குரிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான எவாஞ்சலோஸ் கூறும் போது அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.
அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
- இவருக்கு அளித்த பாதுகாப்புப் படை எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்தது இலங்கை அரசு.
கொழும்பு:
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை 350-ல் இருந்து 60 ஆகக் குறைத்து இலங்கை அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ச மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
அதனால் மழை காலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்–பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாபநாசம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர்.
இதுகுறித்த செய்தி மாலைமலரில் வெளியிடப்–பட்டது.
இதனை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் வடிகால் வாய்க்காலில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
- சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது.
- தொழிற்பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுவதற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்கள் விண்ணப்பம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மூன்றாவது தளம் என்ற முகவரியில் பெற்று 31.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது.
- கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர்.
கடலூர்:
கடலூரில் நேற்று பல்வேறு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி. கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி பேசினார். அப்போது கடலூர் பகுதிகளில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் தலைவர் திருமாவளவனை பின்தொடர்ந்து சென்றனர். நேற்று இரவு திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது. இதனால் தலைவர் திருமாவளவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தலைவர் திருமாவளவனை நிர்வாகிகள் சூழ்ந்து பாதுகாத்தனர்.
பின்னர் உடனடியாக எந்த இடத்தில் குண்டு சத்தம் கேட்டது என பார்த்த போது அங்குள்ள ஒரு காரில் ரேடியேட்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது தெரியவந்தது. அப்போது இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி என்பதால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கட்சி கொடியேற்று விழாவில் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால் அனைவரும் மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவியது.






